மதுரை கள்ளிக்குடி அருகே மையிட்டான்பட்டியைச் சேர்ந்தவர் ஞானசேகரன். இவரது மகன் வினித் என்கிற அறிவழகன்(28). இவர் கடந்த மார்ச் மாதம் காரைக்குடியில் நடைபெற்ற கொலை வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, அந்த வழக்குக்காக காரைக்குடி தெற்கு போலீஸ் நிலையத்தில் நிபந்தனை ஜாமீன் பேரில் கையெழுத்து போட்டு வந்தார். வழக்கம் போல், அவர் கடந்த 18-ம் தேதி கையெழுத்து போடச் சென்ற போது, அந்த வழியாக காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், வினித்தை ஓட,ஓட விரட்டி சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் வினித் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
காரைக்குடியின் மைய பகுதியில் காவல் நிலையம் அருகே பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த இந்த கொலை சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதனை வீடியோவாக எடுத்து சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட, மேலும் அதிர்ச்சி பரவி வருகிறது. இது தொடர்பாக, காரைக்குடி வடக்கு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.
காரைக்குடி ஏ.எஸ்.பி ஸ்டாலின் தலைமையில், கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகள், செல்போன் பதிவுகள் ஆகியவற்றை கொண்டு பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், மையிட்டான்பட்டியைச் சேர்ந்த மருதுசேனை அமைப்பின் தலைவர் ஆதி நாராயணன் என்பவருக்கும், வினித்தின் அப்பா ஞானசேகரனுக்கும் 2019-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலில் மோதல் ஏற்பட்டிருக்கிறது. இதேபோல், விருதுநகர் சந்தை ஏலம் எடுப்பது தொடர்பாகவும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், கொலை செய்யப்பட்ட வினித், விரைவிலேயே நடக்க இருக்கும் விருதுநகர் சந்தை ஏலத்தில் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார். இதனை அறிந்துகொண்ட ஆதி நாராயணன் மற்றும் அவரின் உறவினர் தனசேகரன் ஆகியோர், வினித் மற்றும் அவரது குடும்பத்தினர் யாரும் விருதுநகர் ஏலத்தில் கலந்துகொள்ளக் கூடாது. மீறினால், வினித்தை கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டல் விடுத்திருக்கின்றனர். ஆனால், வினித் ஏலம் எடுப்பதில் மும்மரம் காட்டி வந்துள்ளார்.
இந்த நிலையில் தான், கையெழுத்து போடுவதற்காக வந்த வினித்தை கூலிப்படையை வைத்து ஆதி நாராயணன் தரப்பு திட்டம் வகுத்து கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. கொலை நடந்த 48 மணி நேரத்திற்குள் இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளான மருதுசேணை அமைப்பின் தலைவர் ஆதி நாராயணன், அவரின் மனைவி அமுதாராணி, தனசேகரன், மருதுசேணை அமைப்பின் முன்னாள் சிவகங்கை மாவட்ட செயலாளர் விக்னேஷ்வரன், சேதுபதி, சரவணன், தினேஷ்குமார்,செல்வக்குமார், நவீன்குமார், அஜீத்குமார், ஸ்ரீதர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்கள் பயன்படுத்திய வாகனங்கள் மற்றும் ஆயுதங்கள் அனைத்தையும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர். தொடர்ந்து, கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
source https://www.vikatan.com/crime/9-people-arrested-in-karaikudi-youth-murder-case
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக