விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் ஜீவா நகரை சேர்ந்தவர் முருகன், லாரி ஓட்டுநர். இவரின் தந்தை முத்துசாமிக்கு இரண்டு மனைவிகள். மூத்த மனைவியின் மகன் முருகன். இரண்டாவது மனைவியின் மகன்கள் ஞானகுருசாமி மற்றும் காளிதாஸ். முத்துசாமிக்கு சொந்தமாக 4 ஏக்கர் நிலம் குடும்பச்சொத்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சொத்தை பங்கு பிரிப்பது தொடர்பாக அண்ணன் - தம்பிகளுக்கு இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்தநிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் ஜீவா நகர் பி.எஸ்.என்.எல்-அலுவலகம் வழியாக மனைவியுடன் மிதிவண்டியில் வந்து கொண்டிருந்த முருகனை, ஞானகுருசாமியும், காளிதாஸூம் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.
இதில் கழுத்தில் பலத்த வெட்டுக் காயமடைந்த முருகன், மனைவி கண் முன்பாக சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். இதனையடுத்து, தம்பிகள் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டனர். கொலை சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த சேத்தூர் காவல்துறையினர், உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் கொலை தொடர்பாக சேத்தூர் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த ஞானகுருசாமியை கைது செய்தனர். தப்பி ஓடிய காளிதாஸை தொடர்ந்து தேடி வருகின்றனர். சொத்து தகராறில் தம்பிகள் இருவரும் சேர்ந்து அண்ணனை கொலை செய்த சம்பவம் சேத்தூர் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த முருகனுக்கு, சித்ரா என்ற மனைவியும், அருணாச்சலம் என்ற மகனும், மகாஶ்ரீ என்ற மகளும் உள்ளனர். குழந்தைகள் இருவரும் அருகே உள்ள பள்ளியில் பயின்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
source https://www.vikatan.com/crime/rajapalayam-asset-issue-younger-brothers-executed-their-own-brother
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக