Doctor Vikatan: என் வயது 40. பொடுகுத் தொல்லை இருப்பதால் தினமும் பொடுகு நீக்கும் ஆன்டி டாண்டிராஃப் ஷாம்பூ உபயோகிக்கிறேன். ஆனால் முடி உதிர்வு அதிகமாக இருக்கிறது. ஆன்டி டான்டிராஃப் ஷாம்பூவை தினமும் உபயோகிக்கலாமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த அரோமாதெரபிஸ்ட் கீதா அஷோக்.
பொடுகு பிரச்னையை ஷாம்பூ மூலம் குணப்படுத்திவிடலாம் என நினைப்பதே தவறானது. நம் மண்டைப் பகுதியின் டெர்மிஸ் எனப்படும் மேலடுக்கு, எபிடெர்மிஸ் எனப்படும் கீழடுக்கு என எதில் வேண்டுமானாலும் இன்ஃபெக்ஷன் இருக்கலாம். இதன் காரணமாக பொடுகு வரலாம். நீங்கள் உபயோகிக்கிற ஷாம்பூ, டெர்மிஸ் அடுக்கு வரை ஊடுருவிச் செல்லாது.
ஆன்ட்டி டாண்டிராஃப் ஷாம்பூ என்று இல்லை, எந்த ஷாம்பூவை உபயோகித்து தலைக்கு குளித்தாலும் தலையில் அரிப்பு குறைவதையோ நீங்குவதையோ உணரலாம். வெள்ளை வெள்ளையாக செதில் செதிலாக உதிர்வது, தினமும் ஷாம்பூ உபயோகித்து தலைக்கு குளிக்கும்போது மறைவதை உணரலாம். அப்படி இருக்கையில் ஆன்டி டாண்டிராஃப் ஷாம்பூ எதற்கு என்று யோசியுங்கள்.
எனவே அதற்கு சாதாரண ஷாம்புவே போதுமானது ஆன்டி டாண்டிராஃப் ஷாம்பூவில், கீட்டோகோனோசால் என்ற கெமிக்கல் இருக்கும். எளிமையாகப் புரிகிற மாதிரி சொல்ல வேண்டும் என்றால், இந்த ரசாயனமானது பயிர்களுக்கு தெளிக்கிற உரம் போன்றது. அந்த அளவுக்கு கடுமையான ரசாயனங்களில் ஒன்று அது. அதை, குறிப்பிட்ட சதவிகிதம் தான் பயன்படுத்த வேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது. ஆனாலும் அதை எத்தனை நிறுவனங்கள் பின்பற்றுகின்றன என்பது கேள்விக்குரியது.
பொடுகு பிரச்னைக்கு இந்த அளவு கடுமையான ரசாயனம் உள்ள ஷாம்பூ தேவையே இல்லை. கூந்தலின் ஆரோக்கியத்தை பெரிய அளவில் பாதிக்கும்.
இந்த ஷாம்பூவை அடிக்கடி உபயோகிக்கும்போது பலரும் இரண்டு முக்கியமான தவறுகளைச் செய்கிறார்கள். ஷாம்பூவை எடுத்து நுரைக்க நுரைக்க தலையில் தேய்த்துக் குளிப்பது , அந்த ஷாம்பூவை முழுமையாக அலசாதது என இந்த இரண்டுமே கூந்தலை பாதிக்கும்.
ஷாம்பூ குளியல் எடுக்கும்போது, நீங்கள் உங்கள் கூந்தலை முழுமையாக அலசி இருக்கிறீர்களா என்பதை எளிமையாகத் தெரிந்து கொள்ளலாம். அதாவது தலைக்கு குளித்து முடித்த பிறகு, உங்கள் உள்ளங்கையை உச்சந்தலையில் வைத்து அழுத்திப் பாருங்கள். நுரை வந்தால் சரியாக அலசவில்லை என்று அர்த்தம்.
கெமிக்கல் கலந்த ஷாம்பூ உபயோகித்து தலையை அலசும் போது அது முழுமையாக அலசவிட்டால் அதன் மிச்சமானது ஏற்படுத்தும் பாதிப்பு, பொடுகுத் தொல்லையை விட வீரியமானது. தலைசீவும் போது வெள்ளை வெள்ளையாக உதிர்வதைப் பார்க்கலாம். அது சரியாக அலசாமல் தலையில் படிந்த காய்ந்த நுரைதான்.
இதனால் தலையில் அரிப்பு அதிகமாகும். தவிர இத்தகைய ரசாயனங்கள் முடியின் கருமை நிறத்துக்கு காரணமான மெலனின் என்ற நிறமியை அழிக்கக் கூடியவை. நாளடைவில் முடி நரைக்கவும் உடைந்து உதிரவும் காரணமாகும். தலை வாரும்போது கீழே துண்டு துண்டாக முடி உடைந்து உதிர்வதைப் பார்க்கலாம். கெமிக்கல் அதிகமான ஷாம்பூவை உபயோகிப்பதன் விளைவே இது.
எனவே, பொடுகுத் தொல்லையை நீக்குவதற்கு, முதலில் அதற்கான காரணம் அறிந்து சரியான சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. வீட்டுச் சிகிச்சை கூட போதுமானதாக இருக்கும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
source https://www.vikatan.com/health/doctor-vikatan-can-i-use-anti-dandruff-shampoo-daily
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக