புதுச்சேரி, பிள்ளையார்குப்பம் பகுதியைச் சேர்ந்த அருண், கோர்க்காடு பகுதியைச் சேர்ந்த அன்பரசன் ஆகிய இருவரும் பிரபல ரௌடிகள் எனக் கூறப்படுகிறது. வழிப்பறி சம்பவம் ஒன்றில், தமிழகப் பகுதியில் தலைமறைவாக இருந்த இவர்களை மயிலம் போலீஸார் கைதுசெய்து சிறையில் வைத்த நிலையில், அண்மையில் நிபந்தனை ஜாமீன் பெற்று வெளியில் வந்திருக்கின்றனர். அதன்படி, மயிலம் காவல் நிலையத்தில் நிபந்தனை ஜாமீன் கையொப்பமிட நேற்று காலை தங்களுடைய இருசக்கர வாகனத்தில், புதுவையிலிருந்து வந்திருக்கின்றனர். வானூர் அருகேயுள்ள செங்கமேடு பகுதியை அடைந்தபோது... அவர்களைப் பின்தொடர்ந்து வந்து வழிமறித்த மர்ம கும்பல் ஒன்று, பயங்கர ஆயுதங்களால் அவர்களைத் தாக்கியிருக்கிறது.
இதனையடுத்து அருண், அன்பரசன் ஆகிய இருவரும் அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் தப்பியோடிய முயன்ற நிலையில், விடாமல் துரத்திச் சென்ற மர்ம கும்பல், ஓட ஓட துரத்தி வெட்டியிருக்கிறது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அருண், அன்பரசன் ஆகிய இருவரும், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்த தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வானூர் போலீஸார், எஸ்.பி சசாங் சாங் ஆகியோர் கொலை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், கொலையுண்ட இருவருக்கும் பலருடன் முன்விரோதம் மற்றும் பகை இருப்பது தெரியவந்திருக்கிறது. மேலும், புதுச்சேரி - வில்லியனூரில் 2020-ம் ஆண்டு நடைபெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தில் அருண் என்பவர் சம்பந்தப்பட்டிருந்ததாகவும், மற்றொரு கொலைச் சம்பவத்தில் அன்பரசன் சம்பந்தப்பட்டிருந்ததாகவும், இதுபோன்ற முன்விரோதத்தின் காரணமாக இருவரும் பழிக்குப் பழியாக கொலைசெய்யப்பட்டிருக்கலாம் எனவும் தெரியவந்திருக்கிறது.
பட்டப்பகலில் நடந்த இந்தக் கொலைச் சம்பவம் குறித்து 341, 302 ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்திருக்கும் வானூர் போலீஸார், உண்மை குற்றவாளிகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுவையைச் சேர்ந்த இரண்டு ரௌடிகள், பட்டப்பகலில் ஓட ஓட வெட்டிப் படுகொலைசெய்யப்பட்ட சம்பவம், வானூர்ப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
source https://www.vikatan.com/crime/two-rowdies-were-murdered-by-an-unknown-group-in-villupuram
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக