விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தென்காசி நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் பணிக்கான அலுவலகத்தை திறந்துவைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "மது இல்லா தமிழகத்தை உருவாக்குவதுதான் எங்களுடைய செயல் திட்டம். அதை செயல்படுத்த எங்களுக்கு ஒரு அலுவலகம் தேவை. அதற்கான ஏற்பாடுகள் இன்று நடைபெற்றுள்ளது. 2021-ல் தி.மு.க-ஆட்சிக்கு வந்ததிலிருந்து மக்களின் பல்வேறு அடிப்படை பிரச்னைகள் தீர்க்கப்படவில்லை. புதிய தமிழகம் கட்சியினர் மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் என்பதற்காக களத்தில் இறங்கி உள்ளோம்.
புதிய தமிழகம் கட்சி கடந்த 30 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு அலுவலகத்தை திறந்தது கூட்டணி கட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் மனநிலையில் அல்ல. மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்றே பணிகளை தொடங்குகிறோம். எனது மகன் தென்காசி தொகுதியில் போட்டியிடுவதற்காக இதை செய்யவில்லை. அவர், கட்சி சார்ந்த பணிகள் மற்றும் போராட்டத்தில் மட்டும் ஈடுபடுவார். தென்காசி நாடாளுமன்ற தொகுதியானது புதிய தமிழகம் கட்சி பிறந்த மண்ணுக்கு சமமனது. எங்களை தென்காசி, அடையாளப்படுத்துகிறது. நாங்கள் தென்காசியை அடையாளப்படுத்துகிறோம். நாங்கள் எந்த பணியை தொடங்கினாலும் தென்காசியில் இருந்து தான் தொடங்குவோம்.
தி.மு.க அரசு 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு என்ன காரணம் என்று சொல்லவில்லை. மூடும் கடைகளில் பெரிய அளவிற்கு வருமானம் இல்லை. இந்தநிலையில், பதவியில் இருந்த காலங்களில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் தனியார் பார்களுக்கு செந்தில் பாலாஜி அனுமதி வழங்கினார். அந்த, தனியார் பார்களில் விற்பனை குறையக்கூடாது என்ற பரந்த மனப்பான்மைக்காக இதை செய்திருப்பதாக கருதுகிறோம். அரசுக்கு வருமானம் இல்லை என்றாலும் கவலை இல்லை.
ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளும் வசூலாகும் வருமானத்தில் 50 சதவீதம் பெற்றுக்கொள்ளும் நல்ல நோக்கத்தோடு அவர் செயல்பட்டு வருகிறார். டாஸ்மாக்கால் வரவேண்டிய வருமானத்தில் 50 சதவீதம் மட்டுமே அரசின் கஜானாவுக்கு செல்கிறது. மீதி பணம் தி.மு.க-வின் கஜானாவிற்குதான் செல்கிறது. அரசுக்கு 44 ஆயிரம் கோடி வருமானம் என்றால் தி.மு.க-வின் குடும்பத்திற்கும், செந்தில் பாலாஜிக்கும் சேர்ந்து ஒரு லட்சம் கோடி வருமானம் பார்த்துள்ளனர். இதை கவர்னரிடம் புகாராக அளித்துள்ளேம்.
தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு என்பது இல்லை. அமலாக்கத்துறையின் விசாரணைக்கு கூட ஒத்துழைப்பு தரமாட்டோம் என்று அமைச்சர்கள், ஆட்சியில் உள்ளவர்கள் சட்டத்தை மதிக்காமல் கையில் எடுத்துள்ளனர். சட்டத்தை மதிப்பதற்கு தி.மு.க- அரசு தயாராக இல்லை. சட்டஒழுங்கை காப்பாற்ற வேண்டியவர்களே சட்டத்தை சீரழிக்கிறார்கள். தி.மு.க-அரசுக்கு இது மிகப்பெரிய ஒரு கரும்புள்ளி. இதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
தி.மு.க-விற்கு சமூகவலைத்தளங்கள் தான் பக்கபலமாக இருந்தது. தவறுகளை சுட்டிக்காட்டி சொல்லும்போது அதை தாங்கிக் கொள்ளும் சகிப்புத்தன்மை தி.மு.க-விற்கு இல்லை. கடந்த ஆட்சியில் தி.மு.க-வினர், மோடி- எடப்பாடி பழனிசாமியை பற்றி சமூகவலைத்தளங்களில் விமர்சனம் செய்த போது கைது நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தால் என்னவாகிருக்கும் என்பதை இப்போதைய முதல்வர் நினைத்துப் பார்க்க வேண்டும்" என பேசினார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/puthiya-thamilagam-party-krishnasamy-press-meet-attacks-dmk
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக