சமூக வலைதளங்களில் பாட்டுப் பாடுவது, நடனம் ஆடுவது, ஐஸ் பக்கெட் என ஏதாவது ஒரு சேலஞ்ச் டிரெண்டாகிக் கொண்டே இருக்கும். அந்த வகையில் தற்போது டிரெண்டாகி வருவதுதான், க்ரோமிங் சேலஞ்ச் (chroming challenge).
இந்தச் சவாலை ஏற்கும் ஒருவர், வாசனை திரவியங்களை மோந்து பார்க்க வேண்டும். கேட்பதற்கு இந்த சேலஞ்ச் வேடிக்கையாக இருந்தாலும், இதில் பல ஆபத்துகள் மறைந்திருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த சேலஞ்சை மேற்கொண்ட 13 வயது ஆஸ்திரேலிய சிறுமி எஸ்ரா ஹெய்ன்ஸ் உயிரிழந்துள்ளார். இவர் வாசனை திரவியத்தை மோந்து பார்த்தபோது மாரடைப்பும், மீட்க முடியாத மூளை பாதிப்பும் ஏற்பட்டு இருக்கிறது. மருத்துவமனையில் ஒரு வாரமாக அனுமதிக்கப்பட்டிருந்தவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.
``இது போன்ற பின்விளைவுகள் ஏற்படும் என அறிந்திருந்தால், எஸ்ரா இதைச் செய்திருக்க மாட்டாள்; இது உங்கள் உயிரைப் பறிக்கக் கூடும்’’ என க்ரோமிங் சேலஞ்ச் குறித்து எஸ்ராவின் பெற்றோர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
பாடி ஸ்பிரே, நெயில் பாலிஷின் நறுமணங்கள் நன்றாக இருந்தாலும், அவை மோந்துபார்க்கக்கூடியவை அல்ல. இவற்றில் நச்சுத் தன்மையுள்ள ரசாயனங்கள் இருக்கும். அளவுக்கு அதிகமாக இவற்றை மோப்பம் பிடிக்கையில் மயக்கம், வாந்தி, மூச்சுத்திணறல் ஏற்படுவதோடு, உயிருக்குப் பேராபத்தை விளைவிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
source https://www.vikatan.com/health/australian-girl-died-of-chroming-challenge
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக