`அரிசிக்கொம்பன்'. கடந்த சில மாதங்களாக கேரளாவிலும், கடந்த மூன்று வாரகாலமாய் தமிழ்நாட்டிலும் பரவலாக அடிபடும் பெயர். கேரளாவின் சின்னகனால் வனத்தின் அருகிலிருந்த ரேசன் கடைகளை உடைத்து அரிசியை மட்டும் தின்று தீர்த்ததால் யானைக்கு அந்த பெயர் வந்தது.
அதனை அடர்ந்த வனத்துக்குள் கொண்டுபோக கேரளா வனத்துறை எடுத்த நடவடிக்கைக்கு `மிஷன் அரிக்கொம்பன்' என்று பெயரிடப்பட்டது. பின்னர் மேகமலைக்கு கொண்டுவரப்பட்ட அரிசிக் கொம்பன் அங்குள்ள ரேசன் கடைகளையும் துல்லியமாய் கண்டறிந்து அரிசியைத்தின்றது. பின்னர் அது கம்பம் பகுதிக்கு வந்ததும், மனித உயிர்களைக் காக்கவேண்டி அங்கு சில நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கும் அளவுக்கு நிலைமை கைமீறியது. இந்த நிலையில் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல், நேற்றைக்கு முந்தைய நாள் (05.06.2023) நள்ளிரவில் மாஞ்சோலை வழியாக நாலுமுக்கு எஸ்டேட்டுக்குப் பக்கத்திலுள்ள கோதையாறில் புலிகள் அடிக்கடி தென்படும் `முத்துக்குளி வயல்' வனத்தில் அரிசிக்கொம்பன் விடப்பட்டான். இதனால் எஸ்டேட் தொழிலாளர்கள் பேரச்சத்தில் உள்ளனர்.
இதற்கு முன்னர் யானையையோ, காட்டு விலங்குகளையோ பார்க்காதவர்கள் அல்லர் அங்குள்ள தொழிலாளர்கள். ஆனால் இது புதிது. இதற்கு முன்னர் அரிசிக் கொம்பன் இருந்த பகுதிகளெல்லாம் தொலைத்தொடர்பு வசதிகள் நிரம்பிய, போக்குவரத்து வசதிகள் எளிதில் கிடைக்கப்பெறும் பகுதிகள். ஆனால், மாஞ்சோலையில் களநிலவரம் அவ்வாறல்ல. 2G இணைப்பு மட்டுமே உள்ளது. அதுவும் மழை, குளிர் காலங்களில் செயலிழந்து போகும். எஸ்டேட் சாலையின் நிலைமை குறித்து சொல்லவே வேண்டாம். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக உடைந்து, பேந்து, குண்டும் குழியுமாக, பல் இளித்துக்கொண்டிருக்கும் சாலைகள். அவைகளை சீரமைக்க தொடர்ந்து அனுமதி மறுத்துவரும் வனத்துறைதான் தற்போது திடுதிப்பென அரிசிக் கொம்பனை இங்கு அழைத்து வந்திருக்கிறது.
ஒருவேளை அரிசிக் கொம்பனால் எஸ்டேட் தொழிலாளர்களுக்கோ அல்லது அங்குள்ள புலிகள் உள்ளிட்ட காட்டு விலங்குகளால் அரிசிக் கொம்பனுக்கோ அசம்பாவிதம் ஏற்படுமானால் அது குறித்த தகவல் தெரிவிப்பது அல்லது சிகிச்சைக்காய் அங்குள்ள சாலையில் பயணித்து மலையில் சுமார் மூன்று மணிநேரம் பயணித்து கீழே இறங்குவது என்பது எளிதல்ல. பார்க்கலாம், மாஞ்சோலை மலைப்பகுதி, அரிசிக் கொம்பனுக்கு, அரிசியின் மீதான காதலை மடை மாற்றுகிறதா என்று.
அடர்ந்த வனத்தின் நடுவே இருக்கும் எஸ்டேட் பகுதியில் யானை, சிறுத்தை, புலி, கரடி, செந்நாய், மிளா, முள்ளம்பன்றி, மலைப்பாம்பு, ராஜநாகம் உட்பட பலவகைப் பாம்புகள், சிங்கவால் குரங்கு, கருமந்தி, காட்டெருமை, கீரி, உடும்பு, காட்டுப்பன்றி எனப் பல மிருகங்கள் வாழ்கின்றன.
அவைகளில் சில அவ்வப்போது குடியிருப்பு பகுதிக்கும், வேலைசெய்யும் காட்டுப் பகுதிக்கும் வந்துசெல்வது வழக்கமானது. கடந்த ஏப்ரல் முதல் வாரத்தில் மாஞ்சோலையில் 12ஆம் காட்டுப்பகுதியில் கரடி உலாவியது. செய்தி அறிந்ததும் அந்த சமயத்தில் அந்தப்பகுதிக்கு வேலைக்குச் செல்லாமல் தொழிலாளர்கள் தவிர்த்து வந்தனர். 6ஆம் காட்டிலுள்ள பஞ்சுமரம் அருகில் 2005ம் ஆண்டு கரடி கடித்ததைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் கழித்து இறந்துபோனார் தொழிலாளி யாகம்மாள். காக்காச்சி எஸ்டேட்டைச் சேர்ந்த முருகனின் மகன் விறகு பொறுக்கச் சென்றபோது, இரட்டை வங்கிக்கு அருகில் கரடி தாக்கியதால் தலையில் ஒரு பகுதியில் படுகாயமேற்பட்டு அதன் காரணமாய் 5 ஆண்டுகள் கழித்து இறந்துபோனார். மாஞ்சோலையில் 2003ஆம் ஆண்டு வாக்கில் தேவதாஸ் என்பவர் சட்டித்தலை பாம்பு கடித்து, மருத்துவமனை அழைத்து செல்லப்படும் வழியில் இரத்த அழுத்தம் அதிகரித்து இறந்துவிட்டார்.
எஸ்டேட்டில் ஒப்பந்த தொழிலாளியான இராஜூ 1990களின் துவக்கத்தில் ஒருநாள் காணிக்குடியிலிருந்து குதிரைவெட்டிக்கு கப்பைக்கிழங்கு சுமந்து வந்துகொண்டிருந்த சமயத்தில் அவர் முகத்தில் பெரிய அடி விழுந்தது. திடீர் தாக்குதலில் தடுமாறி கீழே விழுந்துவிட்டார். பின்னர் தான் தெரியவந்தது அவரைத்தாக்கியது கரடி என்று. சிகிச்சை எடுத்துக்கொண்ட போதிலும் அவரது முகத்தின் அமைப்பு கொஞ்சம் மாறிப்போனது. அதன் காரணமாய் அவர் எஸ்டேட் மக்களால் `கரடி' இராஜூ என்று அழைக்கப்பட்டார்.
அடிக்கடி யானைகள் வந்துபோகும் நாலுமுக்கு யானைக்காட்டுக்கு அருகிலுள்ள காட்டில் 04.03.2023 அன்று காலையில் வேலைசெய்ய ஆரம்பித்த நேரத்தில் அந்த காட்டுக்குள், கீழே இருந்த சிறுத்தை ஒன்று, மனிதர்களைப் பார்த்த நிலையில் அங்கிருந்து நகர வேண்டி வெளியே பாய்ந்தது. அப்போது அதன் நகங்கள் அருகே வேலை செய்துகொண்டிருந்த ஜெஸ்ஸி எனும் தொழிலாளியின் முகத்தில் உரசி அவருக்கு காயம் ஏற்பட்ட நிகழ்வு பரவலாக ஊடங்களில் செய்தியானது.
2021 ஏப்ரல் முதல் வாரத்தில் ஊத்து எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள வாழைத்தோட்டத்தில் நுழைந்தது வயதான பெண் யானை ஒன்று. ஊரிறங்கும் விலங்குகள் வழக்கமாக ஓரிரு நாட்களில் காட்டுக்குள் திரும்பிவிடும். ஆனால் விதிவிலக்காக அம்முறை ஒரு வாரகாலமாய் குடியிருப்பு பகுயிலேயே சுற்றித்திரிந்தது.
மாஞ்சோலை மற்றும் ஊத்து குடியிருப்புப் பகுதியில் கரடியும், காட்டுப்பன்றியும் அடிக்கடி தென்படுகின்றன என்றும், நாலுமுக்கு பேருந்துநிறுத்தத்தில் இரவு வேளையில் வாடிக்கையாக சிறுத்தை வந்துபோனதாலும் தொழிலாளர்கள் அச்சம் கொண்டனர். அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கிடக்கோரி 19.07.2014ல் அப்போதைய மணிமுத்தாறு பேரூராட்சித் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனுகொடுக்கும் அளவுக்கு நிலைமை விபரீதமாக இருந்தது. நாளடைவில் குடியிருப்புப் பகுதிகளில் இயல்பாக விலங்குகளின் நடமாட்டம் எதுவுமின்றி இயல்புநிலை நிலவ ஆரம்பித்தது.
தேனீ போல இருக்கும் ஒருவகை உயிரினம் `செந்தலை'. அவை தேனீக்களைவிட அளவில் கொஞ்சம் பெரியது. தேனீ போலவே மொத்தமாக ஒரேகூட்டமாக வரும். செந்தலை கூட்டமாக கொட்டினால் மரணம் நிச்சயம். அவ்வப்போது அவைகள் தேயிலைக்காட்டில் தலைகாட்டும்.
அப்போதெல்லாம் தொழிலாளர்கள் கோணிச் சாக்குகளால் உடலை முழுவதும் மூடிக்கொண்டு தேயிலைச்செடிகளுக்கு அடியில் மறைந்து கொள்வார்கள். செந்தலை கொட்டினால் பொதுவாக அந்த இடத்தில் சுண்ணாம்பு வைத்து தடவிக்கொள்வார்கள். இல்லையென்றால் கடிபட்ட இடம் பலூன்போல வீங்கிவிடும். 2002 ஆகஸ்ட்டில் நாலுமுக்கில் வேலைபார்த்துக் கொண்டிருந்த சீனிப்பாண்டி கங்காணி செந்தலை கடித்த கொஞ்ச நேரத்திலேயே மரித்துவிட்டார்.
தேனீ வகையில் மற்றொன்றான `கடந்தல்' தேயிலை மூட்டில் மண்வைத்து கூடு கட்டியிருக்கும். 1979 ஆகஸ்டில் நாலுமுக்கு தேயிலைக்காட்டில் வேலைபார்த்துக் கொண்டிருந்த சொர்ணமரியா என்பவரை கடந்தல் கடித்தது. தப்பிக்கவேண்டி அவர் வழக்கம்போல தேயிலைச்செடிக்குள் ஒளிந்துகொண்டார். ஆனால் பரிதாபம் அவர் ஒளிந்த இடத்தில்தான் கடந்தல் அதிகமாக இருந்தது. அதிகமாக கடிபட்டதால் உடல் வீங்கி மரித்தார். எஸ்டேட்டை கடுமையாக பாதித்தது அந்த துன்பியல் நிகழ்வு.
ஊத்து எஸ்டேட்டில் தொழிலாளர் குடியிருப்புக்கு அருகே மசூதி உள்ளது. 2004ஆம் ஆண்டில் ஒரு அதிகாலையில், மசூதிக்குக் கிளம்பினார் தொழிலாளி அஹமது குட்டி. அன்று கடுமையாக மழையும், பனியும் பொழிந்து கொண்டிருந்தது. அந்த சமயங்களில் நமக்கு ஓரடிக்கு முன்பாக என்ன இருக்கிறது என்பதைக்கூட பார்க்கமுடியாது. பட்டப்பகலிலும் எஸ்டேட் பகுதியில் அடிக்கடி இதுபோன்ற சூழல் நிலவும். வழக்கமாக அவர் மசூதியிலிருந்து திரும்பும் நேரம் கடந்தபிறகும் அவர் திரும்பவில்லை. மசூதிக்குப்போகும் பாதையில் நின்று கொண்டிருந்த யானை மீது தெரியாமல் அவர் மோத, யானை தும்பிக்கையால் சுழற்றி எறிந்ததில் அவர் இறந்துபோனார்.
2004ஆம் ஆண்டில் ஒருநாள் ஊத்து எஸ்டேட் தொழிலாளர்கள் வழக்கம்போல தேயிலை பறிக்கக் கிளம்பினார்கள். தொழிலாளியான இசக்கியம்மாளுக்கு ஒதுக்கப்பட்ட தேயிலை நிறை, சோலை ஓரத்தில் இருந்து ஆரம்பித்தது. சோலை பகுதிக்கு முதுகை காட்டியபடி, தேயிலைக்காட்டை பார்த்துக்கொண்டு காலை உணவைச் சாப்பிட ஆரம்பித்தார். அப்போது அவருக்குப் பின்னால் சோலைக்குள் இருந்து வெளியே வந்த காட்டுயானை ஒன்று, வந்த வேகத்தில் இசக்கியம்மாளை ஒரு முட்டு முட்டித் தூக்கி எறிந்தது. தனக்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை உணரும் முன்னரே யானையிடம் அகப்பட்டு அங்கிருந்த மற்ற தொழிலாளர்களின் கண்முன்பாகவே பரிதாமாக உயிரிழந்தார் இசக்கியம்மாள்.
எஸ்டேட்டில் அதிக எண்ணிக்கையில் தோட்டங்கள் இருந்த 1990களின் துவக்க காலம் வரையிலும் காய்கறி, கிழங்கு வகைகள் மற்றும் கரும்பு தோட்டங்களை அழித்து தின்றுவிட்டுப் போகும் யானை, பன்றி போன்ற விலங்குகள். ஆனால் அப்போது அவைகள் மனிதர்களை எதுவும் செய்ததில்லை.
நாலுமுக்கு எஸ்டேட்டில் வசித்துவரும் பாத்திமா ராணி 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கோதையாறு மேல்தங்கல் கிளையில் 1997 முதல் தபால் அலுவலராக பணியாற்றி வருகிறார். வனவிலங்குகள் அதிகம் வாழும் அடர்ந்த காட்டு வழியே தன்னந்தனியாய் நாலுமுக்கில் இருந்து கோதையாறுக்கு கடந்த 26 ஆண்டுகளாக தினமும் பத்து கிலோமீட்டர் தொலைவு நடந்தே பயணித்து வருகிறார். அவரை இதுவரையிலும் எந்த விலங்கும் தாக்கியதில்லை.
எஸ்டேட்டில் அப்பா போன்ற தொழிலாளர்கள் சிலர் யானை போன்ற விலங்குகளின் வாசத்தை தொலைவில் இருந்தே கண்டு பிடித்துவிடுவார்கள். அதனால் வால்பாறை, மேகமலை, குன்னூர் போன்ற இதர தேயிலைத் தோட்டப்பகுதிகளை ஒப்பிடும்போது இங்குள்ள மக்களுக்கும் விலங்குகளுக்கும் இடையேயான மோதல்கள் சொற்பமே. இருப்பினும் எஸ்டேட் பகுதியில் ஆங்காங்கே காட்டு விலங்குகள் தொழிலாளர்களைத் தாக்கியுள்ளது. அவைகளில் பெரும்பாலும் வனத்துறையால் வெளியிலிருந்து எஸ்டேட் பகுதியில் கொண்டுவந்து விட்ட விலங்குகளாகவே இருந்துள்ளன.
தற்போது அரசிக் கொம்பன் யானையைக் கருவி மூலம் இணைத்து அதன் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறது வனத்துறை. அதுபோல வெளியிலிருந்து மாஞ்சோலை பகுதிக்குக் கொண்டுவந்து விடப்படும் எல்லா விலங்குகளுக்கும் கண்காணிப்பு கருவி பொருத்த வேண்டியது அத்தியாவசியம். அந்த விலங்குகள் தங்கள் பக்கத்துக்கு வருவதை தொழிலாளர்களும் அறிந்துகொள்ளும் வகையில், குடியிருப்புக்கு அருகே எச்சரிக்கை செயலிகளை நிறுவிட வேண்டும். அதன் வாயிலாக விலங்குகள் - மனிதர்கள் இடையேயான மோதல் பெரும்பகுதி தடுக்கப்படுவதுடன் மக்களும் அச்சமின்றி நிம்மதியாக வாழ வழி ஏற்படும்.
மாஞ்சோலை பகுதி `காப்புக்காடாக' அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அங்கு வாழும் வரையிலும் மக்களுக்கு அச்சமில்லா வாழ்வினை உறுதிசெய்ய வேண்டியது அரசுகளின் கடமை.
படங்கள்: மாஞ்சோலை செல்வகுமார் ; இராபர்ட் சந்திரகுமார்
source https://www.vikatan.com/features/human-stories/13492-ennum-naan-part-13
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக