சல்மா, செய்தித் தொடர்பாளர், தி.மு.க,
``சாதி ஆதிக்கத்துக்கு எதிராக, சமூகநீதிக் கொள்கையைத் தமிழ்நாட்டில் நிலைநிறுத்திய இயக்கம் தி.மு.க. சாதிய மனநிலையை இந்தச் சமூகத்திலிருந்து வேரறுக்க, சமத்துவபுரம் உள்ளிட்ட பல்வேறு முன்னோடித் திட்டங்களை ஏற்படுத்தி, சமூக மாற்றத்துக்கு வித்திட்ட நீண்ட வரலாற்றைக் கொண்டது தி.மு.கழகம். குறிப்பாக பாப்பாபட்டி, கீரிப்பட்டியில் பஞ்சாயத்துத் தலைவர்கள் பதவி, பட்டியல் சமூகத்தினருக்காக ஒதுக்கப்பட்டதால், அங்கு உள்ளாட்சித் தேர்தலே நடந்த முடியாத சூழல் நிலவியபோது, வெற்றிகரமாகத் தேர்தலை நடத்தி, பட்டியல் சமூகத்தவர்களை அதிகாரப் பதவிகளில் அமரச்செய்ததும் தி.மு.க அரசுதான். ஆனால் இன்றைக்கு, சீமான் போன்றவர்கள் மாற்று அரசியல் என்கிற பெயரில், சாதிப் பெருமை பேசுவதையே குடிப்பெருமை என்று தங்களுக்கு வசதியாக அடையாளப்படுத்திக்கொண்டு, அதைவைத்தே அரசியலும் செய்துவருகிறார்கள். சீமான் போன்றவர்களின் இந்த இரட்டை வேடங்களை மக்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். மேல்பாதி விவகாரத்தில் இரு தரப்பினரிடையேயும் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களுக்குள் சுமுகமான நிலையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில்தான் அரசின் நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன. தி.மு.க-வுக்கு சீமான் போன்றவர்கள் சமூகநீதி பாடம் எடுக்க முயல்வது வேடிக்கை.’’
இடும்பாவனம் கார்த்திக், இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் நா.த.க
``சாதி வாக்குகளுக்கு பயந்து கோயிலைப் பூட்டுவதற்குப் பெயர் சமூகநீதி அல்ல, அப்பட்டமான ஏமாற்று வேலை. பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நின்று, அவர்களைக் கோயிலுக்குள் அழைத்துச் சென்றால் கலவரம் ஏற்படும் எனப் பொய் பிம்பத்தைக் கட்டமைக்கிறார்கள். வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்றுப் பேசுகிறார் முதல்வர் ஸ்டாலின். இன்னொரு பக்கம், அவர் தலைமையிலான அரசு பட்டியல் சமூகத்தினரின் வழிபாட்டு உரிமையை உறுதிசெய்யாமல், கோயிலைப் பூட்டுகிறது. இதையெல்லாம் எதிர்த்து கேட்டால், ‘நாம் தமிழர் சாதி பெருமை பேசுகிறது’ என்று பொய்ப் பிரசாரம் செய்கிறார்கள். சாதியக் கட்சிகளுக்கு சீட்டு கொடுத்து, அவர்களை வளர்த்து விட்டதே தி.மு.க-தானே... `சமூகநீதி, சமூகநீதி’ என்கிறார்களே... ஆணவக்கொலை தனிச்சட்டம் இயற்ற ஏன் தயக்கம் காட்டுகிறது தி.மு.க. வேங்கைவயல் விவகாரத்தில் நடவடிக்கை எடுத்தார்களா... ஆறுதல் தெரிவிக்கவாவது அந்தப் பக்கம் சென்றாரா முதல்வர்... மேல்பாதியில், ‘பட்டியல் சமூகத்தினர் கோயிலுக்குள் வருவார்களேயானால், கோயிலை இழுத்துப் பூட்டு...’ என்பதுதான் அதை எதிர்க்கும் தரப்பின் வாதம். அதே நிலைப்பாட்டைத்தான் தி.மு.க-வும் எடுத்திருக்கிறது. ஆகவேதான் கேட்கிறோம், இதுதான் தி.மு.க-வின் சமூகநீதிக் கொள்கையா?’’
source https://www.vikatan.com/government-and-politics/politics/discussion-about-seeman-statement-about-melpathi-village-issue
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக