விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நேற்றைய தினம் (06.06.2023) நடைபெற்ற அரசு நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி. அப்போது, "தமிழ்நாட்டில், தமிழக முதலமைச்சர் அவர்கள் இரண்டாண்டு காலத்தில் முக்கிய கவனம் செலுத்தியிருந்தது கல்வி மற்றும் சுகாதாரத்துறையில் தான். ஆரம்பக் கல்விக்காக, இல்லம் தேடி கல்வித் திட்டத்தை செயல்படுத்தியுள்ளார்கள். உயர்கல்வித்துறையில், மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டுமின்றி, அவர்களின் திறமையையும் வளர்க்க வேண்டும் என்பதற்காகவும், நான் முதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டத்தை அறிவித்தார்.
சிங்கப்பூருக்கு முதலமைச்சர் சென்றிருந்தபோது, சிங்கப்பூரின் கல்வியமைச்சர்... நான் முதல்வன் திட்டத்தைப் பற்றி அவ்வளவு பாராட்டி பேசியிருக்கிறார். ஆளுநர் எதை வேண்டுமானாலும் சொல்லலாம், அவர் அரசியல் பேசுவதற்காக சொல்கிறார். மாணவர்கள் கல்வி பயிலும் எண்ணிக்கை ஆரம்பத்திலிருந்தே வளர்ந்திருப்பது தமிழ்நாட்டில் தான். அதை தரத்திலும் வளர்க்க வேண்டும் என்ற உணர்வோடுதான், 'என்னுடைய காலத்திலே உயர் கல்வித்துறை பொற்காலமாக திகழவேண்டும்' என்று சொல்லி கல்வி வளர்ச்சிக்காக முதலமைச்சர் பாடுபட்டு கொண்டிருக்கிறார். இதெல்லாம் ஆளுநருக்கு தெரிகிறதா, தெரியவில்லையா என்றே தெரியவில்லை. குறைந்தபட்சம் தின பேப்பரையாவது அவர் படிக்க வேண்டும். இல்லை, விஷயங்களை முழுமையாக தெரிந்து கொண்டு பேசவேண்டும்.
அவர் ஒரு அரசியல்வாதியை போல, தமிழக ஆளுங்கட்சிக்கு, எதிர்க் கட்சியைப் போல பேசிக் கொண்டிருப்பது வருந்தத்தக்கது. வெயில் அதிகம் இருப்பதால், காற்று வாங்க ஊட்டிக்கு அவர் தனியாக போயிருக்கலாம். ஆனால், துணைவேந்தர்களை அழைத்து வைத்து பேசி இது போன்ற அரசியல் செய்வதற்கான இடங்களாக அவர் பயன்படுத்தக் கூடாது. நேற்று வெளியிட்ட என்.ஐ.ஆர்.எஃப் பட்டியலில் கூட, தமிழ்நாடு மிகச்சிறப்பாக பல்வேறு துறைகளில் முன்னேறி இருப்பதை பார்க்க முடிகிறது. தமிழக முதலமைச்சர் அவர்கள் உயர்கல்விக்காக பல நன்மைகளை செய்து கொண்டிருக்கிறார். ஆனால், 'தமிழகத்தில் கல்வி குறைந்துவிட்டது, தரம் குறைந்துவிட்டது' என்கிறார் ஆளுநர். எங்கே போய் எதை பார்த்தார் இவர். எந்தக் கல்லூரிக்கு போனார்...
தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சி எண்ணிக்கை 51.4%-ல் இருந்து 53 ஆக வளர்ந்திருக்கிறது. உயர் கல்வித்துறையை பொருத்தவரை இந்த இரண்டு ஆண்டு காலத்தில் பெற்றிருக்கின்ற வளர்ச்சி சாதாரணமானது அல்ல. ஆனால், ஆளுநர் அரசியல் செய்யும் நோக்கத்தோடு தான் செய்து கொண்டிருக்கிறார். எங்களுக்கு கல்வியிலே அரசியல் செய்ய வேண்டும் என்பதல்ல... ஆனால், இந்த ஆளுநர் இங்கே கல்வி துறையில் அரசியலை புகுத்த வேண்டும் என்றுதான் செய்து கொண்டிருக்கிறார். இதனை மக்கள் அறிவார்கள். அவர் ஆங்கிலத்தை தரக்குரவாக பேசியிருக்கிறார். ஆங்கிலம் என்பது சர்வதேச மொழி. இங்கே அம்மொழி வளர்ந்த்ருக்கிறது என்று தரக்குறைவாக பேசுகிறார்.
அவர்களெல்லாம், அவர்களுடைய மாநிலத்திலே அவர்களுடைய மாநில மொழியையே சரியாக படிக்காதவர்கள். அதனால்தான் அவர்களெல்லாம் இங்கே வேலை தேடிக் கொண்டிருக்கின்ற ஒரு சூழ்நிலை உருவாகியிருக்கிறது. ஆகவே, ஆளுநர் அரசியல் செய்வதற்காக பேசுகிறாரே தவிர, கல்வி வளர்ச்சிக்காக பேசவில்லை. அவர் இருக்கின்ற பீகார் மாநிலத்திற்கு முதலில் சென்று அங்கே கல்வித்தரம் எப்படி இருக்கிறது என்பதை அறிந்து அவர் செயல்பட வேண்டும். தமிழ்நாட்டில் பாஜக-வை ஏற்றுக்கொள்ள யாருமே கிடையாது. அந்த பாஜக-வை எப்படியாவது ஆளுநர் மூலமாக கொண்டு வர வேண்டும் என்பதற்காக ஏதேதோ இங்கு நடக்கிறது.
மோடி அவர்கள் வெளிநாடு சென்றதே கிடையாதா... பலமுறை சென்றிருக்கிறார். 8000 கோடி ரூபாய் முதலீடு தமிழகத்தில் செய்யப்பட்டிருக்கிறது என்று சொன்னால் அது முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தின் விளைவுதான். அதே போலதான் இன்று சிங்கப்பூர், ஜப்பானுக்கு அவர் சென்று உலக தொழிற்சாலை நிறுவனர்களை அழைத்து வைத்து பேசியிருக்கிறார். அவர்களுடைய ஆதரவோடு இங்கு இன்னும் தொழிற்சாலைகள் பெருக வேண்டும் என்பதுதான் இந்த திராவிட மாடல் ஆட்சி. ஆகவே பன்னாட்டு அளவிலே தொழிற்சாலை மற்றும் கல்வி வளர வேண்டும் என்ற உணர்வோடு செயல்பட்டுக் கொண்டிருப்பவர்தான் தமிழ்நாடு முதலமைச்சர். இதை எல்லாம் பாராட்ட மனமில்லை என்றாலும், அரசியல் செய்யும் அளவிற்கு ஆளுநர் இறங்குவார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அவர் செய்கிற இந்த அரசியலை தமிழக மக்கள் நிச்சயமாக புரிந்து கொள்வார்கள். ஆளுநர் ஊட்டிக்கு போனதால்தான் சென்னையில் மழை பெய்திருக்கிறது" என்றார் கலகலப்பாக.
source https://www.vikatan.com/government-and-politics/politics/minister-ponmudi-spoke-to-reporters-in-villupuram-condemning-the-governors-speech
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக