Doctor Vikatan: என் வயது 49. உடல் எடை அதிகமாக உள்ளது. மெனோபாஸ் நெருங்குவதால் இப்போதே எடையைக் குறைக்க வேண்டும், மெனோபாஸுக்கு பிறகு அது சாத்தியமில்லை என்கிறார்கள்... அது உண்மையா?
பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி
மாதவிடாய் சுழற்சி முற்றிலும் நின்றுபோவதையே நாம் மெனோபாஸ் என்கிறோம். நம் உடலிலுள்ள ஈஸ்ட்ரொஜென் மற்றும் புரொஜெஸ்ட்ரான் ஹார்மோன்கள் முற்றிலும் தம் சுரப்பை நிறுததிக்கொண்ட பிறகு ஒரு வருடத்துக்கு பீரியட்ஸ் வராமலிருந்தால்தான் நமக்கு மெனோபாஸ் வந்துவிட்டதை உறுதிசெய்ய முடியும். மெனோபாஸ் அடையும் சராசரி வயது 51 முதல் 52 வரையாக இருக்கிறது. இது ஒவ்வொருவருக்கும் வேறுபடலாம். சில பெண்களுக்கு 48 வயதிலும் மெனோபாஸ் வரலாம். சிலருக்கு 53 வயதிலும் வரலாம். நம்முடைய மரபியல், உணவுப்பழக்கம் என பல விஷயங்களைப் பொறுத்து இது வேறுபடும்.
மெனோபாஸுக்கு பிறகு எடைக்குறைப்பு என்பது ஏன் சிரமமாகிறது என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். மெனோபாஸ் ஆனதும் பெண் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜெஸ்ட்ரான் ஹார்மோன்கள் முற்றிலும் நின்றுவிடுகின்றன. ஈஸ்ட்ரோஜென் குறைவதால் உடலின் வளர்சிதை மாற்றச் செயல்பாடும் மந்தமாகிறது. அதன் விளைவாக எடை அதிகரிப்பது தொடருமே தவிர, எடையைக் குறைப்பது சிரமமாகிறது. அதனால்தான் கொஞ்சமாக சாப்பிட்டால்கூட எடை அதிகரிப்பதுபோலத் தோன்றும். அதற்காக மனம் தளரத் தேவையில்லை.
உடலியக்கம், உணவுப்பழக்கம் போன்றவற்றின் மூலம் எடையைக் குறைக்க முடியும். முதல் வேலையாக உடலியக்கத்தை அதிகப்படுத்துங்கள். இதற்கு முன் நீங்கள் ஜாகிங், ரன்னிங் என உடற்பயிற்சிகள் செய்திருந்தாலும், மெனோபாஸுக்கு பிறகு அவற்றைத் தொடர்வதில் சிக்கல் இருந்தால், வெறும் நடைப்பயிற்சியை மட்டுமாவது தொடர வேண்டியது முக்கியம். கூடவே வாரத்துக்கு இரண்டரை மணி நேரம் என மிதமான ஏரோபிக்ஸ் பயிற்சிகளையும் செய்தாலே போதுமானது. வாரத்துக்கு 2-3 நாள்களுக்கு ஸ்ட்ரென்த் டிரெய்னிங் பயிற்சிகளையும் செய்யலாம்.
உங்களுக்குப் பயிற்சியாளர் வைத்துக்கொள்ள வசதி இருந்தால் வைத்துக் கொண்டு அவரது அறிவுரையின் பேரில் இந்தப் பயிற்சிகளைச் செய்யலாம். கன்னாபின்னா உணவுமுறையைப் பின்பற்றி எடையைக் குறைக்க முயல வேண்டாம்.
பழங்கள், காய்கறிகள், முழுத் தானியங்கள் என எல்லாம் கலந்த பேலன்ஸ்டு டயட்தான் சரியானது. கொழுப்பில்லாத புரதச்சத்து எடுத்துக்கொள்ளுங்கள். கார்போஹைட்ரேட் அதிகமுள்ள பிரெட், கேக், பேக்கரி உணவுகள், ஜூஸ், காபி போன்றவற்றைத் தவிருங்கள்.
மெனோபாஸுக்கு பிறகு பெரும்பாலும் வயிற்றைச் சுற்றிதான் அதிகம் சதை போடும். சுவாசம் தொடர்பான பிரச்னைகள் வரலாம். புதிதாக இதயநோயும் நீரிழிவும் வரலாம். மெனோபாஸுக்கு பிறகு ஈஸ்ட்ரோஜென் இல்லாததால் எலும்புகளின் ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கப்படும். மெனோபாஸுக்கு பிறகு மார்பகப் புற்றுநோய், குடல் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து அதிகரிப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. அதற்காக பயப்படத் தேவையில்லை. குறிப்பிட்ட இடைவெளியில் டெஸ்ட் செய்து பார்ப்பது போதும்.
எடைக்குறைப்பு என்பதை இலக்காக வைத்துக் கொண்டு எதையும் செய்ய வேண்டாம். அதை உங்கள் ரெகுலர் நடவடிக்கையாக மாற்ற வேண்டும். ஏனென்றால் அது காலத்துக்கும் தொடர வேண்டிய ஒன்று. என்ன சாப்பிடுகிறீர்கள், எப்போது, எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என உணவு டைரி ஒன்றைப் பின்பற்றலாம். உணவு விஷயத்தில் எங்கே தவறு செய்கிறீர்கள், தேவையான கலோரிதான் சாப்பிடுகிறீர்களா என்றெல்லாம் தெரியும். உங்களுடைய எடை, உயரம், உடலியக்கத்துக்கேற்ப கலோரிகளை கணக்கு செய்து உணவு உட்கொள்ள வேண்டும்.
எல்லாவற்றையும்விட ஸ்ட்ரெஸ் இல்லாத வாழ்க்கை மிக முக்கியம். 7 முதல் 8 மணி நேரத் தூக்கம் பாதிக்கப்படக்கூடாது. இவற்றையெல்லாம் செய்தும் எடை அதிகரித்துக்கொண்டே போனால், ஏதேனும் ஹார்மோன் பிரச்னைகள் இருக்கின்றனவா, வேறு பிரச்னைகளுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் பக்க விளைவா என்பதையும் மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
தேவைப்பட்டால் ஊட்டச்சத்து ஆலோசகரின் உதவியையும் நாடலாம். 20- 30 வயதில் எடையைக் குறைக்க முடிந்தது போல மெனோபாஸுக்கு பிறகு குறைக்க முடியாது என்பதையும் உணர வேண்டும். தொடர் முயற்சியாலும் மெள்ள மெள்ளவும்தான் எடையைக் குறைக்க முடியும். மனம் தளராதீர்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
source https://www.vikatan.com/health/women/doctor-vikatan-is-it-impossible-to-lose-weight-after-menopause-2
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக