Ad

திங்கள், 12 ஜூன், 2023

Doctor Vikatan: காதுக்குள் அரிப்பு; பட்ஸால் குடைந்தால் தான் சரியாகிறது; இதற்கு சிகிச்சை தேவையா?

Doctor Vikatan: எனக்கு எப்போதும் காதுக்குள் அரிப்பு இருக்கிறது. பட்ஸ் வைத்துக் குடைந்தால்தான் சரியாகிறது. காது அரிப்புக்கு என்ன காரணம்... தீர்வு உண்டா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, காது-மூக்கு- தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ்.

காது- மூக்கு - தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ் | சென்னை

காதில் அரிப்பு ஏற்படுவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள இருக்கக்கூடும். முதல் காரணம் காதில் ஃபங்கஸ் (fungus) எனப்படும் பூஞ்சைத் தொற்று. ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதும் இந்தத் தொற்றைத் தீவிரப்படுத்தும். சொட்டு மருந்துகளை அதிகப்படியாக உபயோகம் செய்வதாலும் இந்தத் தொற்று உருவாக வாய்ப்பு உள்ளது.

நீங்களாகவே சுய மருத்துவம் செய்வது ஆபத்தில் முடியலாம். இந்தப் பிரச்னைக்கு, காது-மூக்கு- தொண்டை நோய்களுக்கான சிகிச்சை அளிக்கும் மருத்துவரை அணுகினால் பரிசோதனை செய்து, தேவைப்பட்டால் காதை சுத்தம் செய்து, சொட்டு மருந்து பரிந்துரைப்பார்.

இரண்டாவது காரணம் தலையில் ஏற்படும் பொடுகுத் தொல்லை... தலையில் ஏற்படும் பொடுகானது காதில் உள்ள சருமத்துக்கும் பரவலாம். தொடர்ந்து காதுகளைக் குடைவதால் இந்தப் பொடுகுத் தொந்தரவு அதிகரிக்கலாம். மருத்துவரை அணுகினால் அவர் இந்தப் பிரச்னைக்கான ஆயின்மென்ட் மற்றும் மாத்திரைகளைப் பரிந்துரைப்பார். தலையில் அல்லது உடம்பின் பிற பகுதிகளில் இந்தப் பிரச்னை இருந்தால் சரும மருத்துவரையும் அணுக வேண்டியது அவசியம்.

காது

காரணம் எதுவாக இருந்தாலும் காதுகளை பட்ஸ் வைத்துக் குடைவது நிலைமையை இன்னும் தீவிரமாக்கவே செய்யும். அதனால் காது குடைவதைத் தவிர்ப்பது நல்லது. காது குடைவதால் நிவாரணம் கிடைப்பதாக நினைத்துக்கொண்டு அதைத் தொடராதீர்கள். தாமதிக்காமல் மருத்துவ ஆலோசனை பெற்று, தீர்வு காணுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



source https://www.vikatan.com/health/doctor-vikatan-itching-inside-the-ear-butts-only-make-it-better-does-it-need-treatment

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக