Ad

வியாழன், 8 ஜூன், 2023

Doctor Vikatan: விழித்திரை விலகுமா... அதற்கு சிகிச்சை உண்டா?

Doctor Vikatan: ரெட்டினா டிடாச்மென்ட் எனப்படும் விழித்திரை விலகல் பாதிப்பு ஏன் ஏற்படுகிறது... அதற்கு சிகிச்சை உண்டா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர்.

கண் மருத்துவர் விஜய் ஷங்கர்

கண்களில் உள்ள விழித்திரையானது, தன்னிடத்தில் இருந்து விலகுவதையே 'ரெட்டினல் டிடாச்மென்ட்' (Retinal detachment) என்கிறோம். இதன் விளைவாக, உள்ளே திரவம் சேர்ந்து, சம்பந்தப்பட்ட நபரின் பார்வைத் திறன் குறைகிறது.

விழித்திரை விலகல் பிரச்னைக்கான முக்கிய காரணம் மயோபியா பாதிப்பு. அதாவது மைனஸ் பவர் உள்ளவர்களுக்கு இந்தப் பிரச்னை வரலாம். நீரிழிவு நோயாளிகளுக்கு வரலாம். கண்களில் அடிபடுவதன் காரணமாக வரலாம். முதுமையின் காரணமாகவோ, குடும்ப பின்னணியில் யாருக்காவது அதே பிரச்னை பாதித்திருந்தாலும் வரலாம்.

இந்தப் பிரச்னை வரப்போவதன் அறிகுறியாக, கண்களைச் சுற்றி ஃப்ளாஷ் அடிப்பதுபோல் உணர்வார்கள். கண்களில் ஏதோ பறக்கிற மாதிரி உணர்வார்கள். விழித்திரையின் நடுவில் மேகுலா என்ற பகுதி இருக்கும். அது பாதிக்கப்பட்டால் ஒட்டுமொத்தமாக பார்வை இழப்பு ஏற்படும். பார்வை திடீரென குறைவதை வைத்து விழித்திரை விலகுவதை சம்பந்தப்பட்ட நபரால் உணர முடியும்.

சற்றும் தாமதிக்காமல் அந்த நபர் உடனடியாக கண் மருத்துவரை அணுக வேண்டும். இந்தப் பிரச்னைக்கு ஒரே தீர்வு அறுவை சிகிச்சை மட்டுமே.

விழித்திரை

விழித்திரை விலகல் பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்து எந்த வகையான அறுவை சிகிச்சை தேவை என்பது முடிவு செய்யப்படும். கேஸ் (Gas) அல்லது சிலிக்கான் ஆயில் கொண்டு இந்தப் பிரச்னைக்கு சிகிச்சை கொடுக்கப்படும்.

விழித்திரை விலகல் பாதிப்பு என்பது எமர்ஜென்சியாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய பிரச்னை. எனவே எவ்வளவு சீக்கிரம் சிகிச்சையைத் தொடங்குகிறோமோ, அவ்வளவு நல்லது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



source https://www.vikatan.com/health/doctor-vikatan-is-there-a-cure-for-retinal-detachment

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக