திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த வேலப்பக்கவுண்டன்பாளையத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். சிவகுமார் தன்னுடைய அண்ணன் விஜயகுமார், அண்ணன் மகன் ராகுல் பாலாஜி, பல்லடத்தைச் சேர்ந்த தமிழரசன், பிரவீணா ஆகியோரை வைத்துக்கொண்டு நிலம் மற்றும் வீட்டை அடமானம் வைத்து வங்கியில் கடன் தேவைப்படுவோரின் விவரங்களை இடைத்தரகர்கள் மூலம் பெற்றுக்கொண்டு, அவர்களைச் சந்தித்து சொத்துகள்மீது கடன் பெற்றுத் தருவதாகக் கூறியிருக்கிறார். மேலும், கூடுதலாக வங்கியில் கடன் பெற்று அதை தனது ஸ்பின்னிங் மில் தொழிலில் முதலீடு செய்தால், மாதந்தோறும் லட்சக்கணக்கில் வருவாய் கிடைக்கும் என்று கூறி 60-க்கும் மேற்பட்டோரிடம் சிவக்குமார் கும்பல் ரூ.300 கோடிக்கும் மேல் மோசடியில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது.
இது தொடர்பாக பல்லடம் போலீஸார் வழக்கு பதிவுசெய்து மோசடியில் ஈடுபட்ட சிவக்குமார் உள்ளிட்டோரைத் தேடி வந்தனர். இதையறிந்த சிவக்குமார், விஜயகுமார், ராகுல் பாலாஜி, பிரவீணா ஆகியோர் தலைமறைவான நிலையில், தமிழரசன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து, பிரவீணாவை பல்லடம் போலீஸார் அண்மையில் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். சிவக்குமார் உள்ளிட்டோரைக் கைதுசெய்ய தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், பல்லடத்தில் பதுங்கியிருந்த சிவக்குமாரை போலீஸார் நேற்று கைதுசெய்தனர்.
இது குறித்து போலீஸாரிடம் பேசினோம். "சிவக்குமார் தனது செல்போனை ஆஃப் செய்து வைத்திருந்ததால், அவரைப் பிடிப்பதில் சிக்கல் இருந்து வந்தது. மேலும், அவர் வெளிமாநிலங்களில் சுற்றித் திரிந்திருக்கிறார். பல்லடத்திலுள்ள ஒரு வீட்டில் சிவக்குமார் இருப்பதாகத் தகவல் கிடைத்ததையடுத்து, அங்கு சென்று அவரைக் கைதுசெய்தோம். சிவக்குமாரின் அண்ணன் விஜயகுமார், அவர் மகன் ராகுல் பாலாஜி ஆகியோரைத் தேடி வருகிறோம்" என்றனர்.
இது குறித்து சிவக்குமாரிடம் ஏமாந்த கோவை எஸ்.பி காலனியைச் சேர்ந்த குமரேசன் நம்மிடம் பேசுகையில், ``ஃபைனான்ஸ் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை சரிசெய்ய வங்கியில் கடன் கேட்டு 2017-ம் ஆண்டு விண்ணப்பித்திருந்தேன். நண்பர் ஒருவர் மூலம் சிவக்குமார் அவருடைய தொழில் பாட்னர்கள் என்று கூறி தமிழரசன், பிரவீணா ஆகியோரின் தொடர்பு கிடைத்தது. `இவ்வளவு பெரிய சொத்தை வெறும் ரூ.25 லட்சத்துக்கு ஏன் அடமானம் வைக்கிறீர்கள்... நான் தாராபுரம், பல்லடம் பகுதிகளில் ஸ்பின்னிங் மில், கோழிப்பண்ணை, ஃபர்னிச்சர் கடை வைத்திருக்கிறேன். உங்கள் நிலத்தின்மீது வங்கியில் கூடுதலாகக் கடன் பெற்று, அதை என்னுடைய ஸ்பின்னிங் தொழிலில் முதலீடு செய்தால், மாதந்தோறும் லட்சக்கணக்கில் வருவாய் கிடைக்கும்' என்றார் சிவக்குமார்.
இதையடுத்து தமிழரசனும், நானும் ஸ்பின்னிங் மில்லில் தொழில் பாட்னர்கள் என்பதுபோல் டாக்குமென்ட்டுகளை தயார் செய்தார் சிவக்குமார். இதற்காக கோவையிலுள்ள என்னுடைய 10 சென்ட் நிலப்பத்திரத்தை சிவக்குமாரிடம் கொடுத்தேன். அதில், 2,400 சதுர அடியை மட்டும் ஈரோட்டிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வைத்து, தொழிலுக்காக நானும், தமிழரசனும் இணைந்து தொடங்கப்பட்ட வங்கிக் கணக்கு மூலம் ரூ.2 கோடி கடன் பெறப்பட்டது. `கடன் தொகை நம் கையில் வர ஆறு மாதங்களாகும். அதுவரை ஸ்பின்னிங் மில் தொழிலிலிருந்து மாதத்துக்கு இரண்டு லட்சம் ரூபாய் லாபம் தருகிறேன்' என்று சிவக்குமார் கூறினார். முதல் மூன்று மாதங்கள் லாபத்தைத் தராமல் இழுத்தடித்த நிலையில்தான், வங்கியிலிருந்து வட்டி கட்டுமாறு எனக்கு நோட்டீஸ் வந்தது. வங்கியில் விசாரிக்கையில், தமிழரசன் வரவு செலவை கையாளுவது போன்று டாக்குமென்ட் தயாரித்திருப்பது தெரியவந்தது.
மேலும், கடன் தொகையான ரூ.2 கோடியையும் 10 நாள்களுக்குள் சிவக்குமார் தன்னுடைய அண்ணன் விஜயகுமார், அவர் மகன் ராகுல் பாலாஜி, பிரவீணா ஆகியோர் பெயருக்கு மாற்றியிருப்பதும் தெரியவந்தது. இது குறித்து அவரிடம் கேட்டதற்கு, `தொழிலுக்காகப் பணத்தை அவர்கள் பெயருக்கு மாற்றியிருக்கிறேன். விரைவில் பணம் வந்துவிடும்' என்று கூறினார்.
அத்துடன் கொரோனா காலத்தில் நஷ்டமான தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கிய ரூ.40 லட்சம் கடனைப் பெற்றிருக்கிறார். 2,400 சதுர அடி போக மீதமுள்ள எனது நிலத்தை வெள்ளகோயிலைச் சேர்ந்த தாமு என்பவரிடம் அடமானமாக வைத்து சிவக்குமார் ரூ.15 லட்சம் பெற்றிருக்கிறார். அவரை நம்பி பல கோடி மதிப்புள்ள எனது சொத்தை இழந்துவிட்டு, இன்று ரூ.2.5 கோடி கடனாளியாகவும் இருக்கிறேன். என்னைப்போன்று 63 பேரிடம், `தொழில் பார்ட்னராகச் சேர்த்துக் கொள்கிறேன்' என்று கூறி அவர்களின் சொத்துகளை வங்கியில் அடமானம் வைத்து சுமார் ரூ.300 கோடி அளவுக்கு சிவக்குமார் கும்பல் மோசடி செய்திருக்கிறது. கைதுசெய்யப்பட்டிருக்கும் பிரவீணாவை தொழில் பார்ட்னராகச் சேர்த்துக் கொள்வதாகக் கூறி, அவரது வீட்டை வங்கியில் அடமானம் வைத்து ரூ.35 லட்சத்தை சிவக்குமார் பெற்றிருக்கிறார்.
ஏமாற்றப்பட்டதை அறிந்து பணத்தை திருப்பிக் கேட்ட பிரவீணாவை தன்னுடனே வைத்துக் கொண்டார் சிவக்குமார். பிரவீணா உடுமலையில் ஸ்பின்னிங் மில் நடத்துவதுபோல், ஜி.எஸ்.டி எடுத்து பலருடன் தொழில் பார்ட்னராகவும் டாக்குமென்ட்டுகளைத் தயாரித்திருக்கிறார். நான் அளித்த புகாரில் போலீஸார் கைதுசெய்துவிடக் கூடாது என்று தன்னை சிவக்குமார் கடத்தியதாக பிரவீணா வீடியோ வெளியிட்டு நாடகம் நடத்தினார். அதன் பின், பிரவீணா கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்த பிரவீணா, சிவகுமாருடன் இணைந்து எனக்குக் கொலை மிரட்டல் விடுத்ததால், அவரது ஜாமீனை நீதிமன்றம் ரத்துசெய்தது. இதையடுத்து, அவரை பல்லடம் போலீஸார் கைதுசெய்தனர்" என்றனர்.
source https://www.vikatan.com/crime/rs-300-crore-fraud-case-police-arrested-tiruppur-sivakumar
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக