Ad

திங்கள், 1 மே, 2023

Doctor Vikatan: சிலருக்கு மட்டும் ஐஸ்க்ரீம், கூல் டிரிங்ஸ் சாப்பிட்ட உடனே சளி பிடிப்பது ஏன்?

Doctor Vikatan: சிலருக்கு மட்டும் ஐஸ்க்ரீமோ, கூல் டிரிங்ஸோ சாப்பிட்டால் உடனே சளி பிடிப்பது ஏன்? இரவு நேரத்திலும், மழைநாள்களிலும் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதால் சளி பிடிக்குமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, காது-மூக்கு- தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ்.

காது- மூக்கு - தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ் | சென்னை

ஐஸ்க்ரீம், கூல் டிரிங்ஸை பொறுத்தவரை அவற்றின் டெம்ப்ரேச்சரை விடவும் அவை எவ்வளவு சுத்தமாகத் தயாரிக்கப்பட்டவை என்பதுதான் முக்கியம். உதாரணத்துக்கு வெளியிடங்களில் ஜூஸ் குடிக்கும்போது, அதில் ஐஸ்கட்டிகள் சேர்ப்பார்கள். அந்த ஐஸ்கட்டி எவ்வளவு சுகாதாரமாகத் தயாரிக்கப்பட்டது என்பது கேள்விக்குரியதே. தெருவோரங்களில் சுகாதாரமற்ற முறையில் அடுக்கி வைத்து உடைக்கப்பட்டு, இதுபோன்று ஜூஸ் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ஐஸ்கட்டிகள் குறித்த வீடியோ மற்றும் படங்களை நாம் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் பார்க்கிறோம்.

அதுவே வீட்டில் நாம் ஃப்ரெஷ்ஷாக ஜூஸ் தயாரித்துக் குடிக்கும்போது, அது குளிர்ச்சியாக இருந்தாலும் பிரச்னை வராது. வெளியிடங்களில் தயாரிக்கப்படும் ஜூஸில் பயன்படுத்தப்படும் பழம், ஐஸ், தண்ணீர், கிளாஸ், கையாள்பவர் என எல்லாவகையான சுத்தமும் கவனிக்கப்பட வேண்டும்.

மற்றபடி எப்போதுமே அளவுக்கதிக சூடாகவோ, அளவுக்கதிக குளிர்ச்சியாகவோ எதையும் சாப்பிடுவதைத் தவிர்த்து, மிதமான சூடு அல்லது குளிர்ச்சியில் இருக்கும்படி பார்த்துக்கொள்வதுதான் சரியானது. சாப்பிடும்போது எந்த உணவையும் சில நொடிகள் வாயில் வைத்திருந்து, மென்று, ரசித்துச் சாப்பிட வேண்டியதும் மிக முக்கியமானது.

ஐஸ்க்ரீமோ, கூல் டிரிங்ஸோ சாப்பிட்டதும் வெந்நீர் குடிப்பதால் சளியே பிடிக்காது என்ற எண்ணமும் பலருக்கு இருக்கிறது. இதற்கான அறிவியல்ரீதியான காரணங்கள் எதுவும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை. சுகாதாரமற்ற சூழலில் தயாரிக்கப்படும் உணவுகளால் ஏற்படும் தொற்றை, வெறும் வெந்நீர் குடிப்பதால் குணப்படுத்திவிட முடியாது. குளிர்ச்சியாகச் சாப்பிடும்போது தொண்டையில் ஏற்படும் ரத்த ஓட்டக் குறைவை பேலன்ஸ் செய்யுமே தவிர, வெந்நீரால் வேறு ஒன்றும் செய்யாது.

சளித்

பொதுவாகவே வெயில்நாள்களில் தொற்று பாதிப்பு குறைவாகவும், மழை மற்றும் குளிர்காலங்களில் தொற்று பாதிப்பு அதிகமாகவும் இருக்கும். மற்றபடி மழையிலோ, குளிரிலோ ஐஸ்க்ரீம் சாப்பிடக்கூடாது என்று எதுவும் இல்லை. ஆனால் இந்த நாள்களில் கிருமித் தொற்றுக்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் அதைத் தவிர்க்கும்படி பொதுவாக அறிவுறுத்தப்படுகிறது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



source https://www.vikatan.com/health/doctor-vikatan-why-do-some-people-get-cold-immediately-after-eating-ice-cream-and-cool-drinks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக