உத்தரப்பிரதேசத்தின் பெரோஷாபாத் மாவட்டத்தில் உள்ள மதிய நாடியா என்ற கிராமத்தை சேர்ந்தவர் அசோக் குமார்(40). இவரது நண்பர் கெளரவ் சிங்(42). இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள்.
திருமண நிகழ்ச்சிகளில் இருவரும் சேர்ந்து டிரம்ஸ் அடிப்பது இவர்களின் தொழில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அசோக் புற்று நோயால் பாதிக்கப்பட்டார். அதற்காக சிகிச்சை எடுத்து வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
அவர் இறந்தது குறித்து கேள்விப்பட்டு பக்கத்து ஊரில் வசிக்கும் கெளரவ் அசோக் குமார் ஊருக்கு வந்தார். வேதனையில் துடித்திருக்கிறார். தன் நண்பனைவிட்டு எப்படி இருக்கப்போகிறேன் என கதறி அழுதிருக்கிறார். அசோக்குமாரின் உடல் இறுதிச்சடங்கிற்காக எடுத்துச்செல்லப்பட்டு எரியூட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கிருந்து அனைவரும் செல்ல ஆரம்பித்தனர். ஆனால் கெளரவ் மட்டும் அங்கு நின்று கொண்டிருந்தார். திடீரென கெளரவ் தன் நண்பரின் சிதையில் குதித்துவிட்டார். இதனை பார்த்தவர்கள் ஓடி வந்து கெளரவை மீட்டனர்.
ஆனால் கெளரவ் 90 சதவிகித காயம் அடைந்தார். அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கெளரவ் இறந்து போனார். இதையடுத்து கெளரவ் உடல் அவரது சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது. இது குறித்து கெளரவ் சகோதரர் கமல் சிங் கூறுகையில், ``அசோக்குமாரும், கெளரவ் சிங்கும் சிறு வயதில் இருந்தே நண்பர்களாக இருந்தனர். இருவரும் ஒரே பள்ளியில் படித்தனர். அதோடு ஒரே நாளில் திருமணமும் செய்து கொண்டனர்.
இருவரும் சேர்ந்தே திருமணம் போன்ற காரியங்களில் டிரம்ஸ் இசைக்க செல்வர். கடந்த 6 மாதத்திற்கு முன்பு அசோக்குமாருக்கு புற்று நோய் வந்தது. அவர் சனிக்கிழமை இறந்து போனார். அவரது பிரிவை தாங்க முடியாமல் எனது சகோதரரும் சிதையில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்" என்று தெரிவித்தார். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
source https://www.vikatan.com/trending/man-jumps-into-pyre-of-friend-dies
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக