Doctor Vikatan: என் தோழிக்கு வீஸிங் பாதிப்பு இருக்கிறது. அதனால் அவள் சத்தமாகப் பேசவோ, சிரிக்கவோ பயப்படுவாள் இனிப்பு சாப்பிடுவது, பலமாகச் சிரிப்பது, சத்தமாகப் பேசுவது போன்ற செயல்களால் ஆஸ்துமாவும் வீஸிங் பாதிப்பும் அதிகரிக்குமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நுரையீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் திருப்பதி
உங்கள் கேள்விக்கான பதில், நீங்கள் சாப்பிடும் இனிப்பைப் பொறுத்தது. ப்ரிசர்வேட்டிவ் சேர்க்கப்பட்ட இனிப்புகள் என்றால் அவை ஏற்படுத்தும் ஒவ்வாமையால் ஆஸ்துமா பாதிப்பு தீவிரமாகலாம். கடைகளில் வாங்கும் இனிப்புகளில் இதற்கான வாய்ப்பு அதிகம்.
உணவு அலர்ஜி என்றால் ஒவ்வொரு முறை அந்த உணவைச் சாப்பிடும்போதும் அடுத்த சில மணி நேரத்தில் ஒவ்வாமையை ஏற்படுத்த வேண்டும்.
அதாவது மீன் சாப்பிட்ட அடுத்த 4- 5 மணி நேரத்துக்குள் சளி பிடிப்பதோ, மூச்சு வாங்குவதோ இருக்கும். ஆனால் வேறு காரணத்தால் ஏற்பட்ட அலர்ஜியை உணவு ஒவ்வாமை என புரிந்துகொள்ளக்கூடாது.
உணவினால் உண்டாகும் ஒவ்வாமையைக் கண்டுபிடிக்க பல பரிசோதனைகள் உள்ளன. நீங்களாகவும் கண்டுபிடிக்கலாம். குறிப்பிட்ட ஓர் உணவை சாப்பிடும்போதெல்லாம் உடனடியாக மூச்சுத்திணறல், ஆஸ்துமா பாதிப்புகள் வந்தால் அந்த உணவைத் தவிர்ப்பதுதான் சிறந்தது.
மற்றபடி சத்தமாகப் பேசுவது, பலமாகச் சிரிப்பது போன்ற செயல்கள் ஆஸ்துமா மற்றும் வீஸிங் அறிகுறிகளைத் தீவிரப்படுத்த வாய்ப்பில்லை.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
source https://www.vikatan.com/health/doctor-vikatan-does-laughing-increase-wheezing
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக