புதுக்கோட்டையிலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் இருக்கிறது பொற்பனைக்கோட்டை. சங்ககால தொன்மைமிக்க இடங்களில் ஒன்றாகக் கருதப்படும் இங்கு கறுப்பு, சிவப்பு பானை ஓடுகள், கோட்டை கொத்தளங்கள் இருந்ததற்கான கட்டுமானங்களை நாம் காண முடிகிறது. அகழிகள், உலோக உருக்கு, சுடுமண் குழாய்கள், இரும்பு உருக்கு உலைகள் இருந்ததற்கான அடையாளங்களும் காணப்படுகின்றன. சமீபத்தில், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகப் பேராசிரியர் இனியன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்ததில், அரிய வகை பொருள்களும், (நீர்த் தடக் கால்வாய் அமைப்பு போன்ற) சங்க கால கட்டுமானமும் கண்டுபிடிக்கப்பட்டன.
தமிழக அரசின் தொல்லியல்துறையே தொடர்ந்து, பொற்பனைக்கோட்டையில் அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தொல்லியல் ஆய்வுக் கழகத்தினர் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில்தான், `பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு மேற்கொள்ளப்படும்' என்ற அறிவிப்பை, தமிழக அரசு வெளியிட்டிருந்தது. அதன்படி, புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக்கோட்டையில், தமிழக தொல்லியல்துறையின் சார்பில், அகழாய்வுப் பணிகள் தொடங்கியிருக்கின்றன. மாநில நிதி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் கலந்துகொண்டு, பணிகளைத் தொடங்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, ``பொற்பனைக்கோட்டையில் மேற்கொள்ளப்படும் அகழாய்வு என்பது முக்கியத்துவம் வாய்ந்த அகழாய்வாகும். பொற்பனைக்கோட்டையின் தெற்கு பகுதியில் குறிப்பிட்ட இடத்தில் ரேடார் மூலம் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இந்தப் பகுதி, ஏறத்தாழ 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என அனுமானிக்கப்படுகிறது. இதனை நிரூபிக்கக்கூடிய வகையில் இந்த ஆய்வு அமையும். குறிப்பாக, இந்தப் பகுதியில் வாழ்ந்த மக்கள் எந்த அளவுக்கு நாகரிகம் படைத்தவர்களாக இருந்திருக்கிறார்கள். இந்தப் பகுதியில் மக்கள் எப்படி வாழ்ந்திருக்கிறார்கள் என்பதெல்லாம் தெரியவரும்.
அகழாய்வு செய்யப்படும் இடங்களில் கிடைக்கும் தொல் பொருள்களின் அடிப்படையில், இங்கு புதிய அருங்காட்சியகம் அமைக்கப்படும். தமிழர்களின் மொழி தொன்மையானது. நீண்ட காலமானது என நிரூபிக்கப்பட்டிருக்கிறது. தமிழ் மொழியின் தொன்மை என்பது வேறு எந்த இந்திய மொழிகளைக் காட்டிலும், மிக, மிக தொன்மையானது என நிரூபிக்கப்பட்டிருக்கிறது" என்றார்.
முன்னதாகச் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர், ``2,000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவது என்ற முடிவை, ரிசர்வ் வங்கி எடுப்பதற்கு முன்பாக, மாநில அரசுகளிடம் கேட்டு கலந்தாலோசனை செய்திருக்க வேண்டும். இனி வரும் காலங்களிலாவது ரிசர்வ் வங்கி இதனை கவனித்தில் வைத்துக் கொள்ள வேண்டும்" என்றார்.
source https://www.vikatan.com/literature/arts/tamilnadu-finance-minister-thangam-thennarasu-about-rbi-decision-to-withdraw-2000-rupees-currency-notes
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக