இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் தன் மீதான பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில், உண்மை கண்டறியும் சோதனைகளில் ஒன்றான நார்கோ சோதனைக்குத் தயார் என்றும், ஆனால் அந்த சோதனையில் வினேஷ் போகட் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோரும் உட்படுத்தப்பட வேண்டும் என நிபந்தனை விதித்திருக்கிறார்.
முன்னதாக பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது சிறுமி உட்பட மல்யுத்த வீராங்கனைகள் சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் மல்யுத்த வீராங்கனைகள், வீரர்கள் நீதி கேட்டு, போராட்டம் நடத்தி உச்ச நீதிமன்றம் சென்றனர்.
அதன் பிறகு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது டெல்லி போலீஸார் போக்சோ உட்பட இரண்டு எஃப்.ஐ.ஆர்களை பதிவு செய்தது. பின்னர் போலீஸ் விசாரணைக்கு முன்பாகவே, `என் மீதான குற்றச்சாட்டுகள் போலியானவை. எத்தகைய விசாரணைக்கும் தயார்' என பிரிஜ் பூஷன் சரண் சிங் கூறிவந்தார்.
அதன் தொடர்ச்சியாக, பிரிஜ் பூஷன் சரண் சிங்கை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும், புகாரளித்த ஏழு வீராங்கனைகளையும் கூட அந்த சோதனைக்கு உட்படுத்தலாம் என மல்யுத்த வீராங்கனைகள் தெரிவித்தனர். இந்த நிலையில் நார்கோ சோதனைக்குத் தயார் என்றும், ஆனால் வினேஷ் போகட், பஜ்ரங் புனியாவும் இதற்கு உட்படுத்தப்பட வேண்டும் என பிரிஜ் பூஷன் சரண் சிங் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து பிரிஜ் பூஷன் சரண் சிங் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில், ``நார்கோ சோதனை, பாலிகிராஃப் சோதனை அல்லது பொய் கண்டறியும் கருவியின் சோதனைக்கு நான் தயார். ஆனால், வினேஷ் போகட் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோரும் இந்த சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே எனது நிபந்தனை. அவர்கள் இந்த சோதனையை முடிக்கத் தயாராக இருந்தால், பத்திரிகையாளர்களை அழைத்து அறிவிப்பேன். அதோடு நானும் இதற்கு தயாராக இருக்கிறேன் என அவர்களுக்கு உறுதியளிக்கிறேன். மேலும், நான் இன்னும் என்னுடைய வார்த்தைகளில் உறுதியாக நிற்கிறேன்" எனப் பதிவிட்டிருக்கிறார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/i-am-ready-for-narco-test-but-vinesh-phogat-and-bajrang-punia-must-should-do-that-brij-bhushan-condition
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக