Ad

சனி, 27 மே, 2023

``மண் வளம் பெருகும்; மகசூல் கூடும்” - ஆட்டுக்கிடை அமைக்க ஆர்வம் காட்டும் டெல்டா விவசாயிகள்!

டெல்டா மாவட்ட விவசாயிகள் மண் வளம் பெருகவும், நல்ல விளைச்சல் கிடைக்கவும் தரிசாக கிடக்கும் வயல்களில் நடவுக்கு முன்பாக ஆட்டுக்கிடை அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதன் மூலம் ரசாயன உரத்தின் பயன்பாடு, இடுபொருள்களின் அளவு மற்றும் செலவு குறைந்து உடனடி பலன் கிடைப்பதாக தெரிவிக்கின்றனர்.

ஆடு

டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்ட விவசாயிகள் குறுவை சாகுபடிக்கு தயாராகி வருகின்றனர். மேட்டூரில் திறக்கப்படும் தண்ணீர் கல்லணை வந்தடைந்து அங்கிருந்து கடைமடை வரை தடையின்றி தண்ணீர் செல்கின்ற வகையில் தமிழகஅரசு தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. குறுவை சாகுபடிக்காக ஜூன் மாதம் தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில் விவசாயிகள் நடவு தொடர்பான விவசாய பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

அறுவடை முடிந்து பெரும்பாலான வயல்கள் தரிசாக கிடப்பதால் மண்ணை வளமாக்கும் வேலைகளை செய்யத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக ஆட்டுக்கிடை அமைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் ஆட்டுக்கிடை அமைத்து வருகின்றனர். இதற்காக இராமநாதபுரம் பகுதிகளிலிருந்து செம்மறி ஆடு வளர்ப்பவர்கள் ஆட்டுக்கிடை அமைப்பதற்காக இப்பகுதிக்கு வந்துள்ளனர்.

ஆட்டுக்கிடை

மயிலாடுதுறை அருகே உள்ள கொள்ளிடம் பகுதியை ஒட்டியுள்ள எடமணல், வடகால், கடவாசல், திருக்கருக்காவூர், பழைய பாளையம், மாதாணம் உள்ளிட்ட பல கிராமங்களில் ஆட்டுக்கிடை அமைக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஆட்டுக்கிடை அமைத்திருக்கும் முனிரத்தினம் என்பவரிடம் பேசினோம், "ராமநாதபுரத்திலிருந்து 230 செம்மறி ஆடுகளுடன் ஆட்டுக்கிடை அமைப்பதற்காக வந்துள்ளோம். நெல், உளுந்து அறுவடை முடிந்து விவசாய நிலங்கள் தரிசாக கிடக்கிறது.

எங்களை அழைக்கும் விவசாயிகளின் வயல்களுக்கு சென்று டெண்ட் அடித்து தங்குகிறோம். பகல் நேரத்தில் மேய்ச்சலுக்கு விடும் ஆடுகளை இரவு நேரத்தில் வயலின் மைய பகுதியில் வட்ட வடிவில் வலை அமைத்து அதற்குள் விடுவோம். திறந்த வெளியில் நல்ல மேய்ச்சலில் ஈடுப்பட்ட ஆடுகள் அதிகளவில் புழுக்கை போடும் சிறுநீர் கழிக்கும். இவை இரண்டுமே மண்ணுக்கு நல்ல உரமாகும்.

கீதாரி முனிரத்தினம்

நாற்று விடுவதற்கு சுமார் 15 தினங்களுக்கு முன்பு ஆட்டுக்கிடை அமைக்க வேண்டும். மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகள் மாலை நேரத்தில் வயல்களில் மேயும். இதன் மூலம் தேவையில்லாத புல், பூண்டுகளை தின்றுவிடும். அதே போல் இரவில் நிலத்தின் மைய பகுதியில் படுத்திருக்கும். இதனால் ஆடு போடும் புழுக்கை மற்றும் சிறுநீர் உரமாக மாறி உழவு ஓட்டுவதன் மூலம் வயல்களின் அனைத்து பகுதிக்கும் கிடைக்கும்.

ஒரு ஏக்கருக்கு ஆட்டுக்கிடை போட வேண்டும் என்றால் இரண்டு நாள்கள் ஆகும். மண்ணுக்கு ஏற்ற உரம் இயற்கையில் கிடைப்பதன் மூலம் மண் வளமாக மாறும். அதில் பயிரிடும் போது ஆரம்பத்திலேயே பயிரின் வளர்ச்சி அமோகமாக இருக்கும், மகசூலும் எதிர்பார்த்தபடி கிடைக்கும் என்பதால் விவசாயிகள் இதனை செய்கின்றனர்.

இது குறித்து டெல்டா பகுதியை சேர்ந்த விவசாயிகள் சிலரிடம் பேசினோம். "கொள்ளிடம், சீர்காழி பகுதிகளில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் ஒவ்வொரு முறையும் நடவு நடுவதற்கு முன்பு ஆட்டுக்கிடை அமைப்பதை கடைப் பிடிக்கின்றனர். தற்போது குறுவை சாகுபடிக்கு விவசாயிகள் விளை நிலங்களை தயார்படுத்த தொடங்கியுள்ளனர். தொடர்ந்து இராசயனம் உரம் பயன்படுத்துவதால் மண் தன் வளத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கும்.

ஆடு

இயற்கை உரத்தை பயன்படுத்தி விவசாயம் செய்தால் ஒரே நிலையாக மண்வளம் பாதுக்காப்படும். எனவே நடவு பணிகள் தொடங்கும் முன்பே ஆடு வளர்க்கும் கீதாரிகள் மூலம் வயலில் ஆட்டுக்கிடை அமைப்போம். பின்னர் ஏர் உழுவுவதன் மூலம் ஆட்டு சாணம், கோமியம் ஆகியவை நிலம் முழுக்க பரவி மண் வளமாக மாறும். நடவு நட்டதுமே நெற்பயிருக்கு தேவையான சத்துக்கள் கிடைத்து விடுவதால் பயிர்கள் செழித்து வளரும். விளைச்சல் பெருகி மகசூல் அதிகம் கிடைக்கும். இதன் மூலம் உரம் உள்ளிட்டவையின் தேவை குறைவதால் பயிர் உற்பத்திக்கான செலவு கணிசமாக குறைகிறது. நாங்கள் எதிர்பார்க்கின்ற லாபம் கிடைக்கிறது" என்றனர்.



source https://www.vikatan.com/agriculture/farming/goat-4

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக