தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனான கிரீம் ஸ்மித் நடப்பு ஐ.பி.எல் சீசனுக்காக ஜியோ சினிமாவில் வர்ணனையாளராக மிகச்சிறப்பாகப் பங்காற்றி வருகிறார். கிரீம் ஸ்மித்துடன் ஊடகவியலாளர்கள் சிலர் உரையாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்ட சில விஷயங்கள் இங்கே!
மைதானத்திற்குள் தோனி நுழையும்போது ரசிகர்கள் அவருக்குக் கொடுக்கும் வரவேற்பைக் கவனித்தீர்களா?
"தோனிக்குக் கிடைக்கும் வரவேற்பு அசாத்தியமானதாக இருக்கிறது. அதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. அவர் இந்திய அணிக்காக அளப்பரிய சேவைகளைச் செய்திருக்கிறார். தோனி இவ்வளவு ரசிகர் கூட்டத்தின் அன்பைப் பெற்றவராக இருந்தாலும் அவரிடம் ஒரு பெரும் பணிவு எப்போதும் இருக்கும். தன்னிடம் பேச வருபவர்களுக்கென மதிப்புமிக்க நேரத்தை ஒதுக்குவார். இளைஞர்களுக்குத் தன்னுடைய அனுபவத்தின் வழி நல்ல பாடங்களைக் கற்பித்துக் கொண்டிருக்கிறார்".
நடப்பு சீசனில் உங்களை மிகவும் கவர்ந்த வீரர் யார்?
"யாஷஸ்வி ஜெய்ஸ்வால் உள்ளூர் போட்டிகளில் ஆடுவதையும் பார்த்திருக்கிறேன். கடந்த ஐ.பி.எல் சீசனில் அவர் ஆடிய விதத்தையும் பார்த்திருக்கிறேன். அதைவிட இந்த சீசனில் சிறப்பாக ஆடியிருக்கிறார். இயற்கையாகவே அவரிடம் சிறப்புமிக்க திறமை இருக்கிறது. எல்லாவிதமான பந்துவீச்சாளர்களுக்கு எதிராகவும் சிறப்பாக ஆடுகிறார்.
இப்போதைக்கு அவரால் இந்திய அணியின் கதவுகளை ஓங்கி தட்டத்தான் முடியும். அதைத்தான் அவர் செய்து கொண்டிருந்தார். இந்திய அணிக்காக ஆட பல சீனியர் வீரர்கள் இருக்கிறார்கள். அடுத்தடுத்தக் கட்டத்திலும் இஷான் கிஷன் போன்ற வீரர்கள் இருக்கிறார்கள். ஆனாலும், இந்திய அணிக்கான உரையாடலுக்குள் யாஷஸ்வி புகுந்துவிட்டார் என்றே நினைக்கிறேன்".
மும்பை இந்தியன்ஸ் அணியில் சூர்யகுமார் யாதவ் விளையாடுவதைப் பார்த்தீர்களா?
"சூர்யாவை பார்த்து வெகுவாக ஆச்சர்யப்பட்டிருக்கிறேன். அவரைப் போன்று பேட்டிங் ஆடும் வீரரை நான் பார்த்ததே இல்லை. அவரால் மற்ற வீரர்கள் அடிக்கவே முடியாத கோணத்திலெல்லாம் சிக்ஸர் அடிக்க முடியும். எதிரணியின் கேப்டன்களுக்கு அவர் ஒரு சிம்மசொப்பபனமாக விளங்குவார். சூர்யாவுக்கு ஃபீல்ட் செட் செய்வதே ஒரு புரியாத புதிராகத்தான் இருக்கும். மற்ற பேட்டர்கள் லாங் ஆனில் அடிக்க நினைக்கும் பந்தை சூர்யா ஃபைன் லெக்கில் அடிப்பார். தற்போதைய டி20 சூழலில் மிகச்சிறந்த பேட்டர் அவர்தான்."
தோனியின் கேப்டன்சி குறித்து உங்களின் கருத்து என்ன?
"சேப்பாக்கத்தில் ரசிகர்களின் ஆதரவுடன் ஆடுவது தோனிக்கு மிகப்பெரிய பலத்தைக் கொடுத்திருக்கிறது. அணியில் தொடர்ச்சியாக மாற்றங்களை நிகழ்த்துவது அவரது பாணியில்லை. அதனாலயே அணிக்குள் ஒரு பதற்றமில்லாத நிசப்தமான சூழல் நிலவும்.
தென்னாப்பிரிக்காவிலும் தோனிக்குப் பெரிய ரசிகர் வட்டம் இருக்கிறது. அவர் தென்னாப்பிரிக்கவின் டி20 லீகில் ஆட வந்தால் அதைவிட பெரிய விஷயம் எதுவும் இருக்காது. அவர் எதோ ஒரு அணியின் ஆலோசகராக வந்தால் கூட அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்."
ஐ.பி.எல் போன்ற டி20 போட்டிகளில் ஆங்கரிங் இன்னிங்ஸ் ஆடும் பேட்டர்களை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
"இனி டி20 போட்டிகளில் ஆங்கர் இன்னிங்ஸ் ஆடும் பேட்ஸ்மேனுக்கு வேலையே இல்லை எனும் ரிக்கி பாண்டிங்கின் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன். மாறிவரும் டி20 சூழலில் சூர்யகுமார் மாதிரியான பேட்டர்களின் வருகைக்குப் பிறகு ஆங்கர் இன்னிங்ஸ் ஆடும் பேட்டர்கள் தேவையில்லை என்றே நினைக்கிறேன். இந்திய மைதானங்களில் ஐ.பி.எல்-இல் எடுக்கப்படும் ஹை ஸ்கோர்களை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். 220 ரன்களைக் கூட சுலபமாக அடிக்கிறார்கள். இப்படி ஒரு சூழலில் இந்தியாவில் ஆங்கர் இன்னிங்ஸ் ஆடும் பேட்டர்களுக்கு இடமே இல்லை".
ஆர்.சி.பி மற்றும் டூ ப்ளெஸ்ஸி குறித்து...
"இத்தனை வயதுக்குப் பிறகும் டூ ப்ளெஸ்ஸி ரொம்பவே ஃபிட்டாக இருக்கிறார். ஆக்ரோஷமாக ஆடுகிறார். ஒரு கேப்டனாக அணிக்குள் சௌகரியமான சூழலை உருவாக்கி இளைஞர்களை ஊக்குவிக்கிறார். பெங்களூர் அணியில் டூ ப்ளெஸ்ஸி, கோலி, மேக்ஸ்வெல் ஆகியோரின் மீது அழுத்தம் இருக்கிறது. அவர்களுக்கு மற்றவர்களிடமிருந்து கூடுதல் சப்போர்ட் கிடைத்தால் இன்னும் கொஞ்சம் சுதந்திரமாக அவர்களால் ஆட முடியும்."
ஐ.பி.எல் இல் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் 'Impact Player' விதிமுறை மேல் உங்களுக்கு சில விமர்சனங்கள் இருக்கிறதுதானே?
"கிரிக்கெட் அடிப்படையில் 11 பேர் எதிர் எதிராக ஆடிக்கொள்ளும் ஆட்டம்தான். காலம் காலமாக பல விஷயங்கள் மாறியிருந்தாலும் இந்த ஒரு விஷயம் மட்டும் இன்னும் மாறவில்லை. 'Impact Player' போன்ற விதிமுறைகளைக் கொண்டு வந்து டாஸூக்குப் பிறகு அணியை மாற்றினாலும் இது 11 vs 11 ஆட்டமாகத்தான் இருக்கிறது. ஆல்ரவுண்டர்கள் அதிகமாக இருக்கும் இந்தச் சமயத்தில் அணியின் சமநிலையை பேண அணித்தேர்வில் ஏற்படும் குழப்பத்தை நீக்க இந்த மாதிரியான விதிமுறைகள் பயன்படும்.
ஆனால், தனிப்பட்ட முறையில் என்னிடம் கேட்டால் இதுபோன்ற விதிமுறைகளை மறுபரிசீலனை செய்யச் சொல்வேன். ஆனால், இந்திய வீரர்களுக்குக் கொஞ்சம் அதிக வாய்ப்பு இதன் மூலம் கிடைக்கும் என்பதால் இதை ஏற்றுக்கொள்ளலாம்."
இந்த சீசனின் சிறந்த கேப்டன் யார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
"ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியைப் பார்க்க சுவாரஸ்யமாக இருக்கிறது. பேட்டிங் ஆர்டரில் மேலே வந்து அற்புதமாக ஆடுகிறார். தீர்க்கமான திட்டமிடலுடன் ஒரு நோக்கத்தோடு செயல்படுகிறார். ஒவ்வொரு வீரரிடமிருந்தும் சிறப்பான செயல்பாட்டை வாங்கிவிடுகிறார்."
source https://sports.vikatan.com/cricket/graeme-smith-exclusive-interview-about-ipl-2023-season
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக