பாஜக எம்.பி-யும், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து, அவர் கைது செய்யப்பட வேண்டும் என்றக் கோரிக்கையுடன் சுமார் 30-க்கும் மேற்பட்ட மல்யுத்த வீரர்கள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆரம்பத்தில் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வழக்கு பதிவு செய்யாமல் இருந்த மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லி காவல்துறைக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் மல்யுத்த வீரர்கள் வழக்கு தொடுத்தனர்.
இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டப் பிறகே பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது போக்சோ உள்ளிட்ட 2 எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டன. ஆனாலும், அவர் கைது செய்யப்படாததை எதிர்த்து மல்யுத்த வீரர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து 5 மாதங்களாக விசாரணை நடத்தப்படுவதாக மத்திய அரசு தரப்பு கூறிவருகிறது. இந்த நிலையில், மல்யுத்த வீரர்கள் கடந்த 28-ம் தேதி புதிய நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தை முன்னெடுத்தபோது டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டு 7 பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மல்யுத்த வீரர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் இந்திய அளவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகும் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், ஒலிம்பிக் உள்ளிட்ட போட்டிகளில் கலந்துக்கொண்டு பெற்ற மெடல்களை கங்கை நதியில் வீசுவதாக மல்யுத்த வீரர்கள் அறிவித்து நேற்று அதற்கான போராட்டத்தை முன்னெடுத்தபோது பொதுமக்கள் மற்றும் விவசாய சங்கத் தலைவர்கள் சூழ்ந்துக்கொண்டு மெடல்களை கங்கையில் வீசவேண்டாம் என அவர்களை தடுத்து 5 நாட்கள் பொறுத்திருக்கும்படி கேட்டுக்கொண்டனர். அதனால், அந்தப் போராட்டம் நிறுத்தப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், உலக மல்யுத்தக் கூட்டமனைப்பு மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், "இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரின் பாலியல் தொல்லை தொடர்பான விவகாரத்தில் கடந்த சில மாதங்களாக இந்தியாவில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராடி வருகின்றனர். இதனை உலக மல்யுத்த கூட்டமைப்பு கவனித்து வருகிறது. ஆரம்பத்திலேயே இந்தப் பிரச்னைக்கு தீர்வு கண்டிருந்தால் இந்த சூழலை தவிர்த்திருக்கலாம். மல்யுத்த வீரர், வீராங்கணைகள் பேரணி செல்ல முயன்றபோது கைது செய்தது மற்றும் ஒரு மாதமாக அவர்கள் போராடிய இடத்திலிருந்து வெளியேற்றியது பெரும் துயரளிக்கும் செய்தியாகும்.
இந்த செயல்களுக்கு உலக மல்யுத்த கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது. குற்றம்சாட்டப்பட்ட மல்யுத்த சங்க தலைவர் மீதான விசாரணையில் முன்னேற்றம் இல்லாதது இந்த பிரச்னைக்கு முக்கிய காரணம். உலக மல்யுத்த கூட்டமைப்பு மல்யுத்த வீரர்களுடன் மீண்டும் ஒரு சந்திப்பை நடத்தி அவர்களின் பிரச்னையை கேட்றிந்து பாதுகாப்பு பற்றியும் ஆலோசனை நடத்தும். மல்யுத்த வீரர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். மேலும், ஒருங்கிணைந்த உலக மல்யுத்த கூட்டமைப்பு, இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு (ஐஓஏ) மற்றும் இந்திய மல்யுத்த சம்மேளனம் ஆகியவற்றின் கமிட்டியிடமிருந்து அடுத்த பொது கூட்டமைப்பு தேர்வு குறித்து 45 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும்.
இதனை செய்ய தவறும் பட்சத்தில் உலக மல்யுத்த கூட்டமைப்பு, இந்திய மல்யுத்த சம்மேளத்தை இடைநீக்கம் செய்யும். மேலும் மல்யுத்த வீரர்களை ‛நியூட்ரல் பிளாக்' உடன் போட்டியில் பங்கேற்க வழிவகை ஏற்படுத்தப்படும்.இந்த விஷயத்தில் ஏற்கனவே உலக மல்யுத்த கூட்டமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது என்பதையும், இந்த ஆண்டு தொடக்கத்தில் டெல்லியில் நடைபெற இருந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கான இடம் மாற்றப்பட்டது என்பதையும் நினைவூட்டுகிறோம்'' என தெரிவித்திருக்கிறது.
source https://www.vikatan.com/government-and-politics/politics/world-wrestling-body-condemns-detention-of-wrestlers
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக