சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிய ப்ளே ஆப்ஸின் முதல் தகுதிச்சுற்று போட்டி நடந்திருந்தது. இதில் சென்னை 15 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது.
குஜராத் அணி இலக்கை சேஸ் செய்கையில் சென்னை அணியின் சார்பில் பதிரனா 16 வது ஓவரை வீச வந்தார். அப்போது கள நடுவர்கள் பதிரனாவை பந்து வீச அனுமதிக்கவில்லை. உடனே தோனி நடுவர்களிடம் சில நிமிடங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார். இந்த சம்பவத்தில் என்ன நடந்தது? எதற்காக நடுவர்கள் பதிரனாவை பந்துவீச அனுமதிக்கவில்லை? நடந்தது இதுதான்...
அந்த 16 வது ஓவரை வீசுவதற்கு முன் பதிரனா 12 வது ஓவரை வீசியிருந்தார். அந்த ஓவரில் நிறைய எக்ஸ்ட்ராக்களை கொடுத்த பதிரனா 10 பந்துகளை வீசியிருந்தார். இதனால் களைப்படைந்தவர், இந்த ஓவர் முடிந்தவுடன் பெவிலியனுக்கு ஓய்வெடுக்க சென்றார். மீண்டும் 16 வது ஓவரை வீசத்தான் களத்திற்குள் வந்தார். இந்த சமயத்தில் நடுவர்கள் பதிரனா பந்துவீச முடியாது எனக் கூறி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதற்கு அவர்கள் ஒரு காரணத்தையும் கூறினர், 'ஒரு வீரர் பெவிலியனுக்கு ஓய்வு எடுக்க சென்றால் 8 நிமிடங்களுக்குள் மீண்டும் களத்திற்குள் வந்தால் மட்டுமே உடனடியாக பந்துவீச முடியும்.
அதற்கு மேல் நேரமெடுத்து ஓய்வெடுத்தால் எவ்வளவு நேரம் களத்திற்கு வெளியே இருந்தாரோ, களத்திற்குள் வந்த பிறகு அவ்வளவு நேரத்தை ஃபீல்டில் செலவளித்த பிறகே பந்துவீச முடியும்.' என்றனர். 12 வது ஓவரில் வெளியே சென்ற பதிரனா 9 நிமிடங்களுக்கு பிறகுதான் களத்திற்குள் வந்தார். 8 நிமிடங்களுக்கு மேலாக கூடுதலாக 1 நிமிடம் எடுத்துக் கொண்டதால்தான் நடுவர்கள் பதிரனா பந்துவீச வந்தபோது ஆலோசனையில் ஈடுபட்டனர். தோனி உட்பட சிஎஸ்கேவின் முக்கியமான வீரர்கள் அத்தனை பேரும் நடுவரிடம் உரையாடிய நிலையில் சில நிமிடங்களுக்குப் பிறகு பதிரனா பந்துவீச அனுமதிக்கப்பட்டார்.
source https://sports.vikatan.com/cricket/the-conversation-between-dhoni-and-umpire-regarding-pathiranas-over
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக