Ad

வியாழன், 25 மே, 2023

கருணாநிதி பிறந்தநாள் விழாவும் ரத்தான குடியரசுத் தலைவர் வருகையும் - திமுக பிளான் என்ன?!

தமிழ்நாட்டை ஐந்து முறை முதலமைச்சர் பொறுப்பிலிருந்து ஆட்சி செய்தவர் கருணாநிதி. இவரின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட தி.மு.க அரசு பெரும் முயற்சிகளை எடுத்துவருகிறது. வரும் ஜூன் மாதம் இந்தியாவின் முக்கியத் தலைவர்களை நூற்றாண்டுக் கொண்டாட்டத்தில் ஒன்றிணைக்கத் திட்டமிட்டிருக்கிறது. இதன் முதல்கட்டமாக கிண்டியில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை திறந்துவைக்க இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. சுமார் 4.89 ஏக்கர் அளவில் ரூ.230 கோடி மதிப்பில் புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு, அறுவை சிகிச்சைப் பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு, கதிரியக்க நோய் கண்டறிதல் என பல்வேறு வசதிகளுடன் இந்த மருத்துவமனை கட்டப்பட்டிருக்கிறது. இந்த மருத்துவமனையைத் திறந்துவைக்க ஜனாதிபதி திரௌபதி முர்மு வருகை தரவிருந்தார். வரும் 5-ம் தேதி திறப்பு விழா நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

கலைஞர்

ரத்தான வருகை!

இந்த நிலையில் ஜனாதிபதி திரௌபதி முர்மு சென்னை கிண்டியில் கட்டப்பட்டிருக்கும் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை திறப்பு விழா, நந்தனத்தில் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறவிருந்த கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா ஆகியவற்றில் கலந்துகொள்வது ரத்து செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

புதிய நாடாளுமன்றக் கட்டடம்

இதற்கான காரணம் குறித்து பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. குறிப்பாக புதிதாகக் கட்டியிருக்கும் நாடாளுமன்றக் கட்டடத்தைத் திறக்க இந்தியாவின் முதல் குடிமகளான திரௌபதி முர்முவுக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால், அவரை அழைக்காமல் பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்கவிருப்பது சர்ச்சையாகியிருக்கிறது. இதனால், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து திறப்பு விழாவைப் புறக்கணித்திருக்கின்றனர். இந்த நிலையில், தமிழகத்துக்கு அவர் வரவிருந்த பயணம் ரத்து செய்யப்பட்டது அரசியல் நோக்கத்துக்குதான் என விமர்சிக்கப்படுகிறது.

காரணம் என்ன?

ஆனால், இதை மறுத்துப் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஜூன் முதல் வாரத்தில் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்கிறார். எனவே, மருத்துவமனை திறப்பு விழாவை ஒத்திவைக்குமாறு ஏற்கெனவே எங்களிடம் கேட்டுக்கொண்டார். இந்த அடிப்படையில்தான் விழா ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. விழா ஜூலை முதல் வாரத்துக்குள் நடந்த திட்டமிடப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றத் திறப்பு விழாவுக்கு  இதற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை” எனப் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இது குறித்து விசாரித்தபோது, ``கடந்து சில தினங்களுக்கு முன்பாகவே குடியரசுத் தலைவர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வதாலும், மேலும் சில தனிப்பட்ட காரணங்களாலும் திறப்பு விழாவை மாற்றி அமைக்கக் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்றுதான் திறப்பு விழா மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. வரும் ஜூன் மாதம் 20-ம் தேதிக்குள் திறப்பு விழா நடக்கும்” எனவும் கூறுகின்றனர்..

கடந்த முறை குடியரசுத் தலைவராக இருந்த ராம்நாத் கோவிந்த் (பட்டியலினத்தைச் சேர்ந்தவர்) நாடாளுமன்றத்துக்கு அடிக்கல் நாட்டியபோது அழைக்கப்படவில்லை என்னும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நாடாளுமன்றத் திறப்பு விழாவுக்கு தற்போதைய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு (பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர்) புறக்கணிக்கப்பட்டிருப்பது மீண்டும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது. ஆகவே, எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து திறப்பு விழாவைப் புறக்கணித்திருக்கின்றனர்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுத்தபோது பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு பா.ஜ.க வாய்ப்பு தந்தது கவனம் ஈர்த்தது. எதிர்க்கட்சியினரும் இவருக்கு ஆதரவளித்தனர். ஆனால், அவரை நாடாளுமன்றத் திறப்பு விழாவுக்குப் புறக்கணித்திருப்பது பா.ஜ.க-மீது குற்றச்சாட்டை சுமத்த வழி செய்திருக்கிறது.

இது போன்ற நியமனங்களில் எங்கள் கட்சி வேற்றுமை பார்ப்பதில்லை. அனைத்து சமூகத்தினருக்கும் வாய்ப்பு வழங்குகிறது என்கின்றனர் பா.ஜ.க-வினர். ஆனால், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய மதிப்பும் மரியாதையும் இவர்கள் ஆட்சியில் கிடைத்ததா... என்னும் கேள்வியை எதிர்க்கட்சியினர் முன்வைக்கின்றனர். இந்தச் சூழலில் தமிழகத்துக்கு அவர் வருவது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அதனால், தி.மு.க அரசும் அவரின் வருகையை உறுதிசெய்ய தீவிரம் காட்டுகிறது.

இது குறித்து பத்திரிகையாளர் ப்ரியனிடம் பேசினோம். அவர் ”நாடாளுமன்றத் திறப்பு விழாவில் புறக்கணிக்கப்பட்டதில் அவருக்கு வருத்தமிருக்கும், இதை அவர் நேரடியாகச் சொல்லவில்லையென்றாலும் உள்ளுக்குள் அவருக்கு ஆதங்கம் இருக்கிறது என்பதுதான் உண்மை. பா.ஜ.க அரசால் புறக்கணிக்கப்படுவதை அவர் விரும்பவில்லை. எனவே, தொடர்ந்து எதிர்க்கட்சிகள் சார்பாக அழைக்கும் அனைத்து விழாக்களிலும் அவர் கலந்துகொள்கிறார்.

ப்ரியன், பத்திரிகையாளர்

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜார்க்கண்ட் மாநிலத்தில் உயர் நீதிமன்றத்தைத் திறந்துவைத்தார். அதைத் தொடர்ந்து தமிழகத்துக்கு வர ஒப்புக்கொண்டிருக்கிறார். அனைத்து மாநிலங்களுக்குச் சென்றாலும், எதிர்க்கட்சிகள் அழைக்கும் மாநிலத்துக்குச் செல்வதில் கூடுதல் அக்கறை செலுத்துகிறார். ஆனால், அவர் வருகையை உறுதிசெய்யவில்லை எனில் மாற்று வழியைத்தான் தி.மு.க தேர்ந்தெடுக்க வேண்டும். தமிழக ஆளுநர் ரவியைத் திறந்துவைக்க தி.மு.க அழைப்பு விடுக்க மாட்டார்கள். மற்ற முக்கியத் தலைவரை வரவைக்க முயல்வார்கள். எதுவுமே கைகூடாத நிலையில், ஸ்டாலினே திறந்துவைக்கும் சூழலும் உருவாகலாம்” என்றார்.

சிவ ஜெயராஜ்

இது குறித்து தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர் சிவ ஜெயராஜ் பேசியதாவது, ``அவர் வெளிநாட்டுப் பயணம் செல்கிறார். மேலும் உடல் பரிசோதனையும் செய்துகொள்வதால் திறப்பு விழா தேதி மாற்றப்பட்டிருக்கிறது. முதலமைச்சர் முதலீட்டுப் பயணத்தை முடித்துவிட்டு வந்த பிறகு, திறப்பு விழா தேதி முடிவுசெய்யப்பட்டு முதலமைச்சர் மீண்டும் அவரை நேரில் சென்று அழைக்க வாய்ப்பிருக்கிறது. நாங்கள் அவரின் வருகையை அரசியல் நோக்கங்களைத் தாண்டி கலைஞருக்கு மரியாதை செலுத்தும் விதமாகவே பார்க்கிறோம்” என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/what-is-the-plan-of-the-dmk-after-the-president-cancelled-the-trip-to-tamil-nadu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக