2,000 ரூபாய் நோட்டுகளை, மத்திய ரிசர்வ் வங்கி 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் அறிமுகம் செய்தது. அது முதலே 2,000 ரூபாய் நோட்டுகள் குறித்த பல்வேறு வதந்திகளும் சர்ச்சைகளும் உலவிக்கொண்டிருந்தன. அதைத் தொடர்ந்து, `2,000 ரூபாய் நோட்டுகள் அதிகம் புழக்கத்தில் இல்லை என்பதால், புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணியானது நிறுத்தப்பட்டுவிட்டது' என்ற அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில், தற்போது புழக்கத்திலிருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெற ரிசர்வ் வங்கி முடிவுசெய்திருக்கிறது. மே.23-ம் தேதி முதல் வங்கிகளில் 2,000 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. ஒரு முறைக்கு 20,000 ரூபாய் வரை... (10) 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், செப்டம்பர் 30-ம் தேதி வரை மக்கள் வங்கிகளுக்குச் சென்று 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என்று கூறப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்து இருக்கும் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், ``எதிர்பார்த்தது போலவே, அரசாங்கம்/ஆர்பிஐ ரூ.2,000 நோட்டை திரும்பப் பெற்று, நோட்டுகளை மாற்ற செப்டம்பர் 30 வரை அவகாசம் அளித்துள்ளது. 2,000 ரூபாய் நோட்டு பண பரிமாற்றத்துக்கான சரியான தொகை அல்ல. 2016 நவம்பரிலே நாங்கள் இதைச் சொன்னோம். நாங்கள் சரியாக கணித்திருக்கிறோம்.
அதிக அளவில் பரிமாற்றத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 பணமதிப்பு நீக்கம் என்ற முட்டாள்தனமான முடிவை மறைக்க ரூ.2000 நோட்டு கட்டுக்கட்டாக அறிமுகம் செய்யப்பட்டது. பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு, அரசாங்கம்/ஆர்பிஐ ரூ.500 நோட்டை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
1000 ரூபாய் நோட்டை அரசாங்கம்/ஆர்பிஐ மீண்டும் அறிமுகம் செய்தாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன். 2000 ரூபாய் நோட்டு ஒருபோதும் 'சுத்தமான' நோட்டாக இருக்கவில்லை. இது பெரும்பான்மையான மக்களால் பயன்படுத்தப்படவில்லை. மக்கள் தங்கள் கறுப்புப் பணத்தை, தற்காலிகமாக வைத்திருக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டது!” என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/p-chidambaram-statement-on-2000-denominations-announcment-by-rbi
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக