கேரள மாநிலம் திருச்சூர் மரோட்டிச்சாலில் பகுதியைச் சேர்ந்தவர் எலியாஸ்(76). இவர் அப்பகுதியில் உள்ள டீ கடையில், டீ குடிப்பதற்காக சென்றிருந்தார். டீ சொல்லிவிட்டு அங்கிருந்த இருக்கையில் காத்திருந்திருக்கிறார். அப்போது அவரின் சட்டை பாக்கெட்டில் கிடந்த செல்போன் திடீரென வெடித்து தீ பற்றியது. இதில் அவரின் சட்டை பாக்கெட்டில் தீ பிடித்தது. அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியான நிலையில், எலியாஸ் உடனடியாக எழுந்து பாக்கெட்டில் இருந்த செல்போனை கைகளால் தட்டிவிட்டார். தீ எரிந்தபடியே செல்போன் கீழே விழுந்து சிறிதுநேரம் எரிந்தது.
அவரின் சட்டை பாக்கெட்டில் எரிந்த தீயை கைகளால் தட்டி அணைத்தார் எலியாஸ். அவர் உள் பனியன் போட்டிருந்ததால் உடலில் பெரிய அளவில் தீ காயம் ஏற்படவில்லை என எலியாஸ் தெரிவித்துள்ளார். முதியவரின் பாக்கெட்டில் கிடந்த மொபைல் வெடித்து எரியும் காட்சி டீக்கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது.
முதியவர் எலியாஸின் பாக்கெட்டில் இருந்து வெடித்த செல்போன் ஐ-டெல் கம்பெனியைச் சேர்ந்தது எனவும், ஒரு வருடத்துக்கு முன்பு ஆயிரம் ரூபாய்க்கு அந்த செல்போனை வாங்கியதாகவும் எலியாஸ் தெரிவித்தார். அந்த செல்போனுக்கு வாரண்டி இல்லை எனவும், உயிர் தப்பியது கடவுள் செயல் எனவும் எலியாஸ் அதிர்ச்சியுடன் தெரிவித்தார்.
கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு திருச்சூர் பட்டிப்பறம்பு பகுதியில் அசோக் என்பவரின் மகள் ஆதித்ய ஸ்ரீ என்பவர் செல்போனில் வீடியோகேம் விளையாடிக்கொண்டிருந்தபோது மொபைல்போன் திடீரென வெடித்ததில் மரணம் அடைந்த சம்பவம் நடந்த நிலையில் திருச்சூரில் முதியவரின் பாக்கெட்டில் கிடந்த செல்போன் வெடித்து சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
source https://www.vikatan.com/crime/accidents/cell-phone-exploded-in-old-mans-pocket-luckily-escaped
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக