Ad

செவ்வாய், 23 மே, 2023

Doctor Vikatan: சரும அழகை மேம்படுத்துமா ஆட்டுப்பால், கழுதைப்பால் சோப்?

Doctor Vikatan: கழுதைப் பால் மற்றும் ஆட்டுப்பாலில் தயாரிக்கப்படும் சோப்புகள் இப்போது விற்பனையாகின்றன. அவை உண்மையிலேயே சருமத்துக்கு நல்லதா? எல்லோரும் பயன்படுத்தலாமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த அரோமாதெரபிஸ்ட் கீதா அஷோக்

அரோமாதெரபிஸ்ட் கீதா அஷோக் | சென்னை

பாலுக்கு இயல்பிலேயே 'டீப் கிளென்சிங்' எனப்படும் ஆழமாகச் சுத்தப்படுத்தும் தன்மை உண்டு. அதிலுள்ள லாக்டிக் அமிலமானது நம் சருமத்தை சுத்தமாக வைத்திருக்க உதவும். அந்த வகையில் பால் சருமத்துக்கு நல்லது.

ஆட்டுப்பால், கழுதைப் பால் போன்ற பிரத்யேக பால்களில் கொழுப்புச்சத்து அதிகமிருக்கும். கொழுப்புச்சத்து அதிகமிருப்பதால் அவை சரும வறட்சியைப் போக்கும். இந்தப் பால்களில் உள்ள கொழுப்புச்சத்தானது சருமத்தின் இறந்த செல்களை நீக்கி, முதுமைத் தோற்றத்தைத் தள்ளிப்போடச் செய்து, இளமையாக வைத்திருக்க உதவும்.

ஆட்டுப்பால், கழுதைப் பாலில் செய்யப்பட்ட சோப் என மார்க்கெட்டில் கிடைப்பவற்றில் கெமிக்கல்கள் சேர்க்கப்படுகின்றன. அந்த கெமிக்கல்கள் எப்படிப்பட்டவை என்பதைப் பொறுத்தே அந்த சோப்புகளின் தரம் முடிவு செய்யப்படும். ஆபத்தில்லாத கெமிக்கல்கள் என்றால் சோப்பில் சேர்க்கப்படும் பாலின் பலன் அதிகமாக இருக்கும்.

ஆனால் அதுவே பெயருக்கு பால் சேர்த்து, கெமிக்கல்களை அதிகம் சேர்க்கும் பட்சத்தில் பாலின் பலன் மறைந்துபோய்விடும். அந்த வகையில் இவற்றின் தரம் பார்த்தே தேர்வு செய்ய வேண்டும்.

கழுதைப்பால் சோப்

கொழுப்புச்சத்து இல்லாத பால் கிளென்சராக செயல்படாது. வறண்ட சருமத்துக்குதான் பால் பிரதானமாகப் பயன்படுகிறது. ஆனால் அது சோப்பாக மாறும்போது அதன் பலன் எப்படி இருக்கும் என்பதை உறுதியாகச் சொல்வதற்கில்லை. சோப்பின் தரம், தயாரிப்பு முறை, அதில் சேர்க்கப்படும் பொருள்கள் போன்ற தகவல்கள் தெரியாமல் கவர்ச்சியான விளம்பரங்களை நம்பி அவற்றைப் பயன்படுத்துவது தேவையற்றது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



source https://www.vikatan.com/health/doctor-vikatan-does-donkey-milk-soap-improve-skin-beauty

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக