மனிதன் உழைப்பதற்கு முக்கியமான காரணம் உணவு. ஆனால், பெரும்பாலான மக்களுக்கு சத்தான உணவு கிடைப்பதில்லை. ஒரு வேளை மட்டும் சாப்பிட்டுவிட்டு உழைக்கும் தொழிலாளியும், தண்ணீர் மட்டும் குடித்துவிட்டு உறங்கும் தாய்மார்களும், காலையில் காசு இல்லாமல் 2 இட்லி மட்டும் அல்லது டீ குடித்துவிட்டு கல்லூரிக்குச் செல்லும் மாணவர்களும் இங்கு ஏராளம்.
ஒரு வேளை உணவுக்காக யாசிக்கும் கைகளைத் தினமும் பேருந்து நிலையங்களில், கடற்கரைகளில், தெருக்களில் பார்க்கலாம். இவர்களுடைய நிலைக்கு அவர்களா காரணமாக இருக்க முடியும்? கண்டிப்பாக இல்லை.
இங்கு இருக்கக்கூடிய ஏற்றத்தாழ்வு நிறைந்த சமூக கட்டமைப்பு. வருடா வருடம் மே 28 அன்று உலகப் பட்டினி தினம் அனுசரிக்கப்படுகிறது. உணவு பாதுகாப்பை உறுதி செய்யவும், ஊட்டச்சத்து குறைபாடு போன்றவற்றை உலக நாடுகள் சரிசெய்ய வலியுறுத்தியும் உலக பட்டினி தினம் அனுசரிக்கப்படுகிறது.
மக்கள் உணவின்றி தவிப்பதற்கு போர், உள்நாட்டு நெருக்கடி, பருவநிலை மாற்றம், இயற்கை பேரிடர், பெருந்தொற்று, உணவு பங்கீட்டில் குறைபாடு, சுரண்டல் போன்றவை முக்கிய காரணமாக இருக்கின்றன. போரும், சுரண்டலும், உணவுப் பங்கீட்டில் குறைபாடும் மனிதர்களால் ஏற்படக்கூடியது. 1943 - 1944 ஆண்டுகளில் உலக மக்களின் கவனத்தைப் பெற்ற பெங்கால் வறட்சியில் (Bengal Famine) லட்சக்கணக்கான மக்கள் இறந்தனர். இதற்கு உணவுப் பற்றாக்குறையைக் காட்டிலும் முறையான உணவுப் பங்கீடு இல்லாததுதான் காரணம் என்று பொருளாதார வல்லுநர் அமர்த்தியா ஷென் தெரிவித்திருந்தார்.
உலகில் பட்டினியும் வறுமையும் நிறைந்திருக்க காரணம் உணவும், பொருளாதாரமும் குறிப்பிட்ட மக்களிடம் குவிந்து கிடைப்பதே. பசியும் பட்டினியும் வளரும் நாடுகளிலே பெரும் பிரச்னையாக உள்ளது. 2022 ஆண்டில் உலக பட்டினிக் குறியீட்டில் இந்தியா 107-வது இடத்தில் உள்ளது.
இந்தியாவில் தற்போதைய ஆட்சியில் மக்களின் நலன் சார்ந்த திட்டங்கள் பல இருந்தும் நடைமுறை சிக்கல்கள் ஏராளம். ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்காக, பசியால் தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு இருக்கின்றன. ஆனால், மக்களும் அதைச் சரியாகப் பயன்படுத்துவதில்லை; நிர்வாகமும் சரியாக இல்லை.
பெருந்தொற்று, பேரிடர் போன்ற காலங்களில் உணவு பற்றாக்குறையை சமாளிப்பதற்கான முறையான மேலாண்மை திட்டம் அரசிடம் இல்லை. கொரனா காலங்களில் தொழில்கள் முடங்கியபோது எண்ணற்ற மக்கள் உணவுக்கும் பாலுக்கும்கூட காசு இல்லாமல் தவித்தனர். ஆனால், இவர்களுக்கு அரசால் என்ன செய்ய முடிந்தது. சிறிய நிவாரணம் மட்டுமே கொடுக்க முடிந்தது.
அரசாங்கத்திடம் பணம் இல்லை என்று கூறுவது மக்களை ஏமாற்றும் வேலை. அரசுக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கலாம், பெரும்பணக்காரர்களிடம் தேக்கி வைக்கப்பட்ட பணத்தை எல்லாருக்குமானதாக பங்கிட்டிருந்தாலே வறுமை ஒழிந்திருக்கும். இந்தியா பட்டினிக் குறியீட்டில் 107-வது இடத்தில் இருப்பதற்கு அரசியல் முக்கியமான காரணமாக இருக்கலாம். வேலை வாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு போன்றவற்றால் மக்களின் அடிப்படை தேவைகளே கேள்விக்குறியாக இருப்பதைக் கையாள்வதற்கு தற்போதைய அரசு அரசியலை கையிலெடுக்கிறது.
மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் உணவு, உடை, இருப்பிடம், சுகாதாரம், கல்வி ஆகியவை சமமாகக் கிடைக்கும் சமூகத்துக்காக செயல்படுவதே பட்டினி தினத்தில் நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதிமொழியாகும்.
source https://www.vikatan.com/government-and-politics/policy/may-28-world-hunger-day-what-is-the-real-cause-of-food-shortages
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக