Ad

திங்கள், 1 மே, 2023

இரு ஆடியோக்கள்; இருமுறை சந்திப்பு... ஸ்டாலின் - பி.டி.ஆர் சந்திப்பும் அரசியலும்!

தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பேசியதுபோல் இரு ஆடியோக்கள் வெளியானது. அதில் விளையாட்டுத்துறை அமைச்சரும் முதல்வரின் மகனுமான உதயநிதி ஸ்டாலின், முதல்வரின் மருமகன் சபரீசன் ஆகியோர் பற்றி பேசுவது போல் சில தகவல்கள் இடம் பெற்றிருந்தது. இது திமுக-வினரிடையே அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த ஆடியோ இட்டுக்கட்டப்பட்டது என்று விளக்கமளித்திருந்தார் பழனிவேல் தியாகராஜன்.

பி.டி.ஆர் உதயநிதி ஸ்டாலின்

இதற்கிடையே, பிடிஆர் குறித்த ஆடியோக்களை மத்திய அரசு விசாரிக்க வேண்டும் என்று தமிழக பாஜக-வினர் ஆளுநரை சந்தித்து முறையிட்டனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்தபோதும் இதே கோரிக்கையை முன் வைத்தார். இந்த நிலையில் கடந்த 25-ஆம் தேதி இரண்டாவது ஆடியோ வெளியான மாலையே முதலமைச்சர் வீட்டுக்கு சென்றார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். அவரிடம், ‘ரிசைன் பண்ணிட்டு விளக்கம் கொடுங்க’ என முதல்வர் கோபமாக பேசியதாக எல்லாம் தகவல்கள் வெளியானது. அதற்கு மறுநாளே வீடியோ வடிவில் விளக்கம் கொடுத்தார் நிதியமைச்சர்.

பி.டி.ஆரிடம் முதல்வர் கோபமாக பேசியதை சமாதானப்படுத்தும் விதமாக மூத்த அமைச்சர்கள் சிலர், ‘பிடிஆரை ரிசைன் பண்ண வச்சா, அது பாஜக-வுக்கு வெற்றியாகாதா. இன்னும் சில ஆடியோக்களை அவர்கள் வெளியிட்டால் அந்த அமைச்சர்களும் ரிசைன் பண்ண வேண்டிய கட்டாயம் ஏற்படுமே’ என பேசி சமாதானம் செய்திருக்கிறார்கள். இதையடுத்து பிடிஆர்-மீது சற்று கோபம் தனிந்த முதல்வர் நேற்று (மே-1) காலை அவரை வீட்டுக்கு வரச் சொல்லி சந்தித்திருக்கிறார்.

டி.கே.எஸ். இளங்கோவன்

முதல்வர், பிடிஆர் சந்திப்புக் குறித்து செய்தியாளர்களை சந்தித்த திமுக செய்தித் தொடர்புத்தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன், “ஆடியோ விவகாரம் தனிப்பட்டது என்பதால் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தான் வழக்கு தொடுக்க வேண்டும், திமுக தொடுக்காது. ஆடியோ போலியானது என பிடிஆர் பழனிவேல் தியாகராஜனே விளக்கம் கொடுத்துள்ளார். மேற்கொண்டு சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பது தொடர்பாக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தான் புகார் கொடுக்க வேண்டும். பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவினர் மீது பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்” என்று கூறியவரிடம்,

‘நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அமைச்சரவையிலிருந்து நீக்கப்படுவார் எனச் சொல்லப்படுகிறதே’ என்ற கேள்விக்கு, “நிதியமைச்சர் முதல்வரிடம் என்ன விளக்கம் கொடுத்திருக்கிறார் என்று எனக்குத் தெரியாது. நான் அங்கு இல்லை என்பதால் எனக்கு அதுகுறித்துத் தெரியாது” என்று தெரிவித்திருக்கிறார் டி.கே.எஸ். இளங்கோவன்.

இந்த சந்திப்பு, பிடிஆரின் அடுத்த நகர்வுகள் குறித்து நம்மிடம் பேசிய திமுக நிர்வாகிகள் சிலர், “திமுக-வினரது மனதில் புழுங்கி கிடக்கும் விஷயங்களைத்தான் பிடிஆர் பேசி இருக்கிறார். மற்றவர்களால் பேச முடியவில்லை. ஏனென்றால் பிடிஆர் போல் பதவி போனாலும் பரவாயில்லை என்று செயல்பட கூடியவர்கள் இங்கில்லை. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே பிடிஆர் டெல்லி சங்கரி லால் ஹோட்டலில் தங்கியிருந்த போது தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார். எப்போது டெல்லி சென்றாலும் தமிழ்நாடு இல்லத்தில் தங்காமல் இந்த ஹோட்டலில்தான் அதிகம் தங்குவார். அங்கு ஊடகத்துறையினர், மாற்று அமைப்பை சார்ந்தவர்கள் என பலரையும் சந்திக்கும் பிடிஆர் தன் மனதில் பட்டதை பேசுவார். அதுதான் இப்போது அவருக்கு நெருக்கடியாக வந்து நிற்கிறது.

இன்று டி.கே.எஸ்.இளங்கோவன், ‘ஆடியோ விவகாரம் தனிப்பட்டது என்பதால் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தான் வழக்கு தொடுக்க வேண்டும், திமுக தொடுக்காது’ என்று, கட்சிக்கும் பிடிஆர் ஆடியோக்கும் தொடர்பில்லை என்பது போல் தான் பேசி இருக்கிறார். அதுவும் கவனிக்கப்படவேண்டிய ஒன்று.

அதே நேரம் நடைப்பெறவிருக்கும் அமைச்சரவை கூட்டத்தில் வைக்க வேண்டிய சில அஜெண்டாக்கள் தொடர்பாக ஆலோசிக்கத்தான் முதல்வர் பிடிஆரை அழைத்திருக்கிறார் என்ற தகவலும் ஓடுகிறது” என்கிறார்கள்.

இதற்கிடையே சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “தொலைபேசி ஆடியோ விஷயத்தில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் எந்த தவறும் செய்யவில்லை. அவர் தந்துள்ளது ஒப்புதல் வாக்குமூலம்தான். ஒருவேளை அந்த ஆடியோ தவறானது என்று என் மீது வழக்கு தொடர்ந்தால் நிதி அமைச்சரின் தொலைபேசி உரையாடல் குறித்த ஒரிஜினல் ஆடியோவை வெளியிட நான் தயார். எந்த ஆய்வகத்திற்கும் அதை பரிசோதனைக்கு உட்படுத்தலாம்” என்று கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

அண்ணாமலை

இன்று உங்களில் ஒருவன் நிகழ்ச்சியில் ஸ்டாலின் இந்த ஆடியோ விவகாரம் குறித்து பேசியிருப்பதும் கவனிக்கத்தக்கது. ``ஆடியோ விவகாரத்தில் மட்டமான அரசியல் செய்வோருக்கு விளம்பரம் அளிக்க விரும்பவில்லை. ஆடியோ குறித்து அமைச்சரே இரண்டு முறை விளக்கம் அளித்துள்ளார்” என பதிலளித்துள்ளார் முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/ptr-met-stalin-at-his-residence-what-is-the-politics-behind

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக