Ad

சனி, 27 மே, 2023

CSK: ``தோனிக்கு கடைசி சீட்; ஜடேஜாவுக்கு முதல் சீட்; ப்ராவோவின் பாட்டு"- சிஎஸ்கேவின் பஸ் ஓட்டுநர்கள்

ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் ஆடுவதற்காக சென்னை அணி அகமதாபாத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறது. குஜராத் டைட்டன்ஸூக்கு எதிரான இறுதிப்போட்டிக்கு முன்பாக நேற்று மாலை நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இரண்டு அணிகளுமே பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை வலைப்பயிற்சி திட்டமிடப்பட்டிருந்தது. இந்த பயிற்சிக்காக 6 மணிக்கு முன்பாகவே சென்னை அணி வீரர்கள் தங்களது பேருந்தில் ஸ்டேடியத்திற்கு வந்து சேர்ந்துவிட்டனர். வீரர்கள் அந்த முக்கியமான மைதானம் மற்றும் அதனருகே இருக்கும் பிரத்யேக வலைப்பயிற்சி கூடம் என இரண்டு குழுக்களாக பிரிந்து பயிற்சியில் ஈடுபட்டனர்.

வீரர்களை பயிற்சிக்காக அனுப்பிவிட்டு சென்னை அணியின் பேருந்தையும் ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு அணியின் ஓட்டுனர்கள் கிருஷ்ணாவும் ஜெகதீஷூம் பாடல்கள் கேட்டபடியே கதை பேசிக் கொண்டிருந்தார்கள். பயிற்சி செஷனுக்கு நடுவே அவர்களிடமும் கொஞ்சம் பேச்சு கொடுத்தேன்.
சி.எஸ்.கே அணியின் பேருந்து ஓட்டுநர்கள்

``எந்தக் கவலையும் வேணாம் சார்... சிஎஸ்கேதான் ஜெயிக்கும்.' என உறுதியோடு பேசத்தொடங்கினர் இருவரும். ஜெகதீஷூக்கு ஓட்டுநராகவே 30 வருட அனுபவம் இருக்கிறதாம். இதற்கு முன்பாக குஜராத், பஞ்சாப் போன்ற அணிகளுக்கெல்லாம் ஓட்டுநராக இருந்திருக்கிறாராம். ஜெகதீஷ்தான் அணியின் முதன்மை ஓட்டுநர். கிருஷ்ணாவுக்கு ட்ரைவிங்கில் அத்தனை அனுபவம் கிடையாதாம். ஆனாலும் வித்தைக்காரர்தான். ஹோட்டல் துறையிலிருந்தவர் சில வருடங்களுக்கு முன்புதான் ஓட்டுநராக மாறியிருக்கிறார். ``இந்த சென்னை டீமுக்காக வண்டி ஓட்டுறதுல ரொம்ப பெருமைதான் சார். மொத்தம் ரெண்டு டீம் இருக்கோம். சேப்பாக்கத்துல நடக்குற ஹோம் மேட்ச்களை எல்லாம் ஒரு ட்ரைவிங் டீம் பார்த்துப்பாங்க. வெளியூர்ல நடக்குற அவே மேட்ச்களை எல்லாம் நாங்க பார்த்துக்குறோம். இந்த மேட்ச்சுக்கு முன்னாடி சில வேலைகள் இருந்ததால நாங்களுமே சென்னைக்கு வர வேண்டியதா போச்சு. அங்க இருந்துதான் இந்த பஸ் ஓட்டிக்கிட்டு நாலு நாள் முன்ன அகமதாபாத் வந்து சேர்ந்தோம்.

இங்க மோடி ஸ்டேடியத்துல இருந்து ப்ளேயர்ஸ் தங்கியிருக்குற ஹோட்டலுக்கு ஒரு 45 நிமிசம் ட்ராவல் பண்ண வேண்டியிருக்கும். ஹோட்டல்ல இருந்து ஸ்டேடியம் வர்றதுக்கு ஃபைனல்ஸ் அன்னைக்கு மட்டும் 3 பஸ்ஸூம் 8 காரும் சிஎஸ்கே ஏற்பாடு செஞ்சிருக்காங்க. எல்லா ப்ளேயர்ஸூம் வருவாங்க. அவங்களுக்கு பஸ்ஸூ. ப்ளேயர்ஸோட ஃபேமிலிக்கு கார்.

சி.எஸ்.கே அணியின் பேருந்து

என இறுதிப்போட்டிக்கான அவர்களின் பயணத்திட்டத்தை அவர்கள் விளக்கினர்.

'எல்லா ப்ளேயர்ஸூமே அன்பா பேசுவாங்க. நலம் விசாரிப்பாங்க. தோனி எப்பவுமே 'ஹலோ..ஹாய்..' எப்படி இருக்கீங்கனு கேட்பாரு.

கேட்டுட்டு நேரா இருக்குறதுலயே கடைசியா பின் சீட்டுல போயி உட்காந்துப்பாரு. அதுதான் தோனிக்கு ஃபேவரைட் சீட். தோனிக்கு எப்படி பின் சீட்டோ அதேமாதிரி ஜடேஜாவுக்கு முன் சீட்.
பேருந்து

எப்பவுமே முன் வரிசைலதான் உட்காருவாரு. இப்படி எல்லாருக்குமே எதோ ஒரு பிரத்யேக இடம் பஸ்ஸூக்குள்ளயே இருக்குது." என்பவர்கள் பொழுதுபோக்குக்காக வீரர்கள் என்ன செய்வார்கள் என்பதை பற்றியும் கூறினர். ``பஸ்ஸூக்குள்ள பாட்டெல்லாம் போடுறதுக்கு லேட்டஸ்ட் சவுண்ட் சிஸ்டமெல்லாம் இருக்கு. ஆனாலும் ப்ளேயர்ஸ் பெரும்பாலும் பாட்டு போட சொல்றதில்ல. அவங்களோட ஹெட்போன்லயே கேட்டுப்பாங்க. ப்ராவோதான் ரொம்ப ஜாலியா அவரே பாட்டு பாடிக்கிட்டு டான்ஸ் ஆடிக்கிட்டு குஷியா இருப்பாரு." என்றவர்களிடம் இந்த பேருந்தின் சிறப்பம்சம் குறித்து பேசினோம்.

``இது வால்வோ பஸ்ஸூ. 1.40 கோடி ரூபாய்க்கிட்ட வரும். ஏறி உட்கார்ந்தா போறதே தெரியாது அந்தளவுக்கு சௌகரியமா இருக்கு. உள்ளயே ப்ளேயர்ஸூக்கு டாய்லெட் வசதி இருக்கு. அவங்களுக்கு நீர் ஆகாரங்கள் கொடுக்குறதுக்கு ஃப்ரிஜ் வசதி இருக்கு. மொத்தத்துல இது ஒரு சொகுசுத் தேர்." என்றனர்

இருவருமே கிரிக்கெட் சார்ந்த வேலையில் இருந்தாலும் டெல்லியில் இருக்கும் இருவரின் பிள்ளைகளுக்குமே கிரிக்கெட்டை பற்றி தெரியவே தெரியாதாம். கல்லூரி படிக்கும் ஜெகதீஷ் அவர்களின் மகன், மகள் இருவரும் பாக்ஸர்களாம். பாக்ஸிங்கில் எக்கச்சக்க பதக்கங்களை வென்று வருகிறார்கள் என பெருமிதம் பொங்க கூறினார்.

``மகாபாரதத்துல பாண்டவர்களுக்கு கிருஷ்ணரை போல தோனிக்கு இங்க நீங்கதான் வெற்றிகரமான சாரதி போல.." என்றவுடன் மகிழ்ச்சியில் வெடித்து சிரிக்கும் கிருஷ்ணா மற்றும் ஜெகதீஷ்

'கண்டிப்பா கப்பு நமக்குதான்..' என வழியனுப்பி வைத்தனர்.


source https://sports.vikatan.com/cricket/ipl-2023-csk-bus-drivers-interview

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக