Ad

செவ்வாய், 16 மே, 2023

மகரஜோதி தெரியும் பொன்னம்பலமேட்டில் அனுமதி இன்றி பூஜை - வழக்கு பதிவு செய்து விசாரிக்கும் போலீஸ்!

பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலுடன் சம்பந்தப்பட்ட எருமேலி, பம்பா, பந்தளம் உள்ளிட்ட பல இடங்கள் பக்தர்களால் புனிதமாக கருதப்படுகிறது. அதில் சபரிமலை சன்னிதானத்தின் எதிர் பக்கம் அமைந்துள்ள பொன்னம்பல மேடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தை மாதம் ஒன்றாம் தேதி பொன்னம்பலமேட்டில் தெரியும் மகரஜோதியை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் கூடுவார்கள். ஐயப்பன் ஜோதி வடிவில் காட்சிதரும் பொன்னம்பல மேடு பக்தர்களுக்கு மிகவும் புனிதமான பகுதியாக கருதப்படுகிறது. வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் பொன்னம்பல மேடு பாதுகாப்பு மிகுந்த பகுதியாகும்.

சபரிமலை

இந்த நிலையில் பொன்னம்பல மேட்டில் ஒருவர் பூஜை செய்வது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதையடுத்து தேவசம்போர்டு அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டிருந்தார்.

திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் அனந்தகோபன் புகார் அளித்ததன் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தினர். அதில், சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் கீழ் சாந்தியின் உதவியாளராக இருந்த நாராயணன் என்பவர் தலைமையில் சுமார் 6 பேர் கொண்ட டீம் பொன்னம்பல மேட்டில் கடந்த வாரத்தில் பூஜையில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுடன் சென்ற ஒருவர் அந்த பூஜையை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

பொன்னம்பல மேட்டில் அனுமதி இந்தி பூஜை செய்த நாராயணன்

நாராயணன் சென்னையைச் சேர்ந்தவர் எனவும், அவர் திருச்சூரில் வசிப்பதாகவும் கூறப்படுகிறது. வனத்துறை அனுமதி இல்லாமல் அத்துமீறி வனத்தில் புகுந்து பூஜை செய்ததாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாராயணன் சபரிமலை தந்திரி என காரில் போர்டு வைத்துக்கொண்டு சுற்றியதாக அவர் மீது ஏற்கனவே புகார் உள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பொன்னம்பல மேடு பகுதியில் ஒரு திருவிழாவுக்கு பூஜை செய்ய சென்றதாகவும், செல்லும் இடங்களில் எல்லாம் பூஜை செய்யும் வழக்கம் உள்ளதாகவும், ஐயப்பனின் அருள் இருந்ததால் பொன்னம்பல மேட்டில் பூஜை செய்ததாகவும் நாராயணன் தெரிவித்துள்ளார். மேலும், அந்த பூஜை நடந்தபோது வனத்துறையைச் சேர்ந்த சிலர் அங்கு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



source https://www.vikatan.com/crime/pooja-in-ponnambala-medu-without-permission-case-filed

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக