தஞ்சாவூர் டாஸ்மாக் பாரில் மது குடித்த இருவர் உயிரிழந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை, பாரில் தடய அறிவியல் மற்றும் கைரேகை நிபுணர்கள் நான்கு மணி நேரம் வரை சோதனை நடத்தினர்.
தஞ்சாவூர், கீழஅலங்கம் மீன் மார்க்கெட் எதிரே டாஸ்மாக் கடையும், அதையொட்டி பாரும் இருக்கின்றன. இந்த பாரில் டாஸ்மாக் கடை மூடப்பட்டிருக்கும் நேரத்திலும் கூடுதல் விலைக்கு கள்ளத்தனமாக மதுப்பாட்டில் விற்பனை செய்யப்பட்டு வந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 21-ம் தேதி காலை டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பாக, சுமார் 11 மணியளவில் பாரில் விற்பனை செய்யப்பட்ட மதுவை வாங்கி கீழவாசலைச் சேர்ந்த மீன் வியாபாரி குப்புசாமி (68), கார் டிரைவர் விவேக் (36) ஆகிய இரண்டு பேர் குடித்திருக்கின்றனர்.
கொஞ்ச நேரத்திலேயே அடுத்தடுத்து இருவரும் உயிரிழந்த சம்பவம், தமிழகம் முழுவதும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. சயனைடு கலந்த மதுவை குடித்ததே இருவரின் உயிரிழப்புக்குக் காரணம் என உடற்கூறாய்வு மூலம் தெரியவந்தது. குடும்பப் பிரச்னை காரணமாக மதுவில் சயனைடு கலந்து குடித்துத் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனவும் கூறப்பட்டது. இது தொடர்பாக தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. ஐந்து டி.எஸ்.பி-கள் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
``மது குடிக்க இருவரும் ஒன்றாகச் செல்லவில்லை, சுமார் 15 நிமிடங்கள் இடைவெளியில் தனித் தனியாகச் சென்று பார் ஊழியரிடம் லூஸில் மது வாங்கி குடித்திருக்கின்றனர். அவர்கள் தற்கொலை செய்துகொள்வதற்கு வாய்ப்பே இல்லை... மதுவில்தான் ஏதோ பிரச்னை இருந்திருக்கிறது" என மீன் மார்கெட் பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் சவுந்தரபாண்டியன், கலால் வட்டாட்சியர் தங்க.பிரபாகரன் முன்னிலையில், மண்டல தடய அறிவியல்துறை துணை இயக்குநர் ஜெயா தலைமையில், நகர காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜா உள்ளிட்டோர் கீழஅலங்கத்தில் சீல் வைக்கப்பட்ட டாஸ்மாக் கடை, பாரை திறந்து சோதனை செய்தனர்.
அதைத் தொடர்ந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத், கூடுதல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் மற்றும் கைரேகை நிபுணர்களும் வந்தனர். காலை 11 மணிக்குத் தொடங்கிய சோதனை மதியம் 2 மணி வரை தொடர்ந்தது. பாரிலுள்ள பொருள்களின் தடயங்கள், கைரேகைகள் ஆய்வுசெய்யப்பட்டன. பின்னர் டாஸ்மாக் கடைக்கு எதிரே உள்ள மீன் மார்க்கெட்டில் இறந்துபோன விவேக்கின் சகோதரர் வினோத்தின் கடைக்குச் சென்று, அங்கு ஏதாவது தடயங்கள் கிடைக்கிறதா எனப் பார்த்தனர்.
மேலும் மீன் வியாபாரிகளிடம் விவேக், குப்புசாமி ஆகியோரின் நடவடிக்கை குறித்து விசாரித்தனர். விவேக்கின் நண்பர்கள் சிலரிடமும் விசாரணை செய்தனர். இதனால் அந்த இடம் பரபரப்புடன் காணப்பட்டது.
source https://www.vikatan.com/crime/tasmac-bar-death-case-investigation-was-on
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக