Ad

திங்கள், 8 மே, 2023

சுதந்திரம் வேண்டிய இந்தியா, பிரிட்டிஷ் ராணுவத்துக்கு உதவியது ஏன்? | முதலாம் உலகப்போரின் அதிர்வுகள்

பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் ஓர் அங்கமாக அப்போது இருந்த இந்தியா முதலாம் உலகப் போரின் தொடக்கக் காலகட்டத்திலேயே அந்தப் போரில் பங்கு கொண்டது. பிரிட்டனுக்கு ஆதரவாக நமது ராணுவம் களத்தில் இறங்கியது.

பிரிட்டனுக்கு எதிரான மனநிலையில் இந்தியா அப்போது இருந்து கொண்டிருந்தது உண்மை. சுதந்திரப் போராட்ட உணர்வு கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியிருந்ததுதான். அந்த நிலையில் 'பிரிட்டனுக்கு எதிர்த் தரப்பில் இந்தியா சேர்ந்து கொண்டிருக்க வேண்டும் அல்லது முதலாம் உலகப்போரில் இந்திய ராணுவம் கலந்து கொண்டிருக்கக் கூடாது' என்ற கருத்து நியாயமானதுதான்.

உலகப்போரில் பங்குபெற்ற இந்திய ராணுவத்தினர்
உலகப்போரில் பங்குபெற்ற இந்திய ராணுவத்தினர்
உலகப்போரில் பங்குபெற்ற இந்திய ராணுவத்தினர்
உலகப்போரில் பங்குபெற்ற இந்திய ராணுவத்தினர்
உலகப்போரில் பங்குபெற்ற இந்திய ராணுவத்தினர்

ஆனால் போரில் பிரிட்டனின் சார்பில் இந்திய ராணுவம் பங்கெடுத்துக் கொண்டால் பிரிட்டன் விரைவிலேயே இந்தியாவுக்குத் தன்னாட்சி வழங்கும். இறுதியில் சுதந்திரத்திற்கும் ஒத்துக்கொள்ளும் என்ற எண்ணமும் வலுவடைந்து வந்தது. முக்கியமாக மகாத்மா காந்தி இந்தக் கருத்தைக் கொண்டிருந்தார்.

தனக்கே உரிய வழியில் ஒரு ஆம்புலன்ஸ் அமைப்பை ஏற்படுத்தி போரில் காயமடைந்த பிரிட்டிஷ் ராணுவ வீரர்களுக்கு மருத்துவ உதவியை அளிக்க முன்வந்தார். தானாகவே ஆம்புலன்ஸ் வண்டியோடு போர்க்களத்துக்குச் செல்லவும் முடிவு எடுத்தார். ஆனால் அவரது உடல் நலக் குறைவு காரணமாக அதற்குத் தடை விதிக்கப்பட்டது.

இந்திய ராணுவத்தில் பெரும்பாலும் சீக்கியர்கள், கூர்க்காக்கள், ஜாட்கள், டோக்ராக்கள் போன்ற இனத்தவர்கள் மிக அதிகமாக இருந்தனர். 1914-ல் இந்திய ராணுவத்தில் 2,40,000 பேர் பணி புரிந்தனர் (பிரிட்டிஷ் ராணுவத்தில் இதைவிட வெறும் 7000 பேர்தான் அதிகம்). அப்போதைய இந்திய ராணுவம் இரண்டு பிரிவுகளாகச் செயல்பட்டது. ஒன்று வடக்கு சைனியம். இது வங்காளத்தின் அருகில் உள்ள வடமேற்கு எல்லைப் பகுதியிலிருந்து செயல்பட்டது.

மற்றொன்று தெற்கு சைனியம். இது ப​லூச்சிஸ்தானிலிருந்து தென்னிந்தியா வரை பரவியிருந்தது. இந்த ஒவ்வொரு சைனியத்திலும் குதிரைப் படை, காலாட்படை ஆகியவை உண்டு. ஒவ்வொரு சைனியத்திலும் சிறு பிரிவுகள் உண்டு அந்த ஒவ்வொன்றிலும் வீரர்கள் இனம், மதம், ஜாதி ஆகிய அடிப்படையில் பிரித்து வைக்கப்பட்டிருந்தனர்!

பிரிட்டிஷ் ராணுவத்தில் கூர்க்காக்கள் மற்றும் ஜாட்கள்
முதலாம் உலகப் போரில் இந்திய ராணுவத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது. ஃபீல்டு மார்ஷல் சர் கிளாட் ஆச்சின்லெக் (Field-Marshal Sir Claude Auchinleck) என்பவர் 1942லிருந்து இந்திய ராணுவத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தவர். இவர், "இந்திய ராணுவத்தின் உதவி இல்லாமல் இருந்திருந்தால் முதலாம் உலகப் போர், இரண்டாம் உலகப் போர் ஆகிய இரண்டிலுமே பிரிட்டன் வெற்றி பெற்றிருக்காது" என்று கூறினார்.

பத்து லட்சத்துக்கும் அதிகமான இந்திய ராணுவத்தினர் வெளிநாடுகளுக்குச் சென்று முதலாம் உலகப் போரில் பிரிட்டிஷ் அணியின் சார்பாகப் போரிட்டனர். குறைந்தது 74 ஆயிரம் இந்திய ராணுவ வீரர்கள் இந்த போரில் இறந்திருப்பார்கள் என்று கணக்கிடப்பட்டது.

குதாதத் கான் (Khudadad Khan) என்பவருக்கு, போரில் அவரது பங்களிப்புக்காக, விக்டோரியா கிராஸ் என்ற உயரிய விருதை பிரிட்டிஷ் அரசு பின்னர் வழங்கியது. இது போரில் மகத்தான வீரத்தை வெளிப்படுத்தியவர்களுக்கு அளிக்கப்படும் வெண்கல விருது. இதில் சம்பந்தப்பட்டவரின் பெயரும் பொறிக்கப்பட்டிருக்கும்.
இந்திய ராணுவ வீரர் நாயக் நாராயண் ஷிண்டேவுக்கு பதக்கமளிக்கும் சர் கிளாட் ஆச்சின்லெக்

பஞ்சாபில் (அதாவது தற்போது பாகிஸ்தான் வசம் உள்ள பஞ்சாபில்) 1888 அக்டோபர் 20 அன்று பிறந்தவர் குதாதத் கான். 129வது பலூச்சி என்ற படைப்பிரிவில் இணைந்து முதலாம் உலகப் போரில் ஈடுபட்டார். விக்டோரியா கிராஸ் விருது வழங்கப்பட்ட முதல் இந்தியர் இவர்தான். மெஷின் கன்களை இயக்குவதில் வல்லவர். 1914 அக்டோபரில் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் நாடுகளில் உள்ள துறைமுகங்களைக் கைப்பற்ற ஜெர்மனிய ராணுவம் முயற்சி செய்த போது அதைத் தடுப்பதற்காக பிரிட்டிஷ் ராணுவத்துக்கு உதவ அனுப்பப்பட்ட 20,000 இந்திய ராணுவ வீரர்களில் இவரும் ஒருவர்.

பெல்ஜியத்தில் உள்ள ஹோலெபேப் (Hollebeke) என்ற கிராமத்தில் மிக மோசமான சூழலில் போரிட வேண்டிய கட்டாயம் இவரது படைப்பிரிவுக்கு ஏற்பட்டது. பிரமாண்டமான பதுங்கு குழிகளில் தண்ணீர் தேங்கிக் கொண்டிருந்தது. கையினால் தூக்கி எறியக் கூடிய வெடிகுண்டுகள் போதிய அளவில் கைவசம் இல்லை. ராணுவ வீரர்களின் எண்ணிக்கையும் போதுமானதாக இல்லை. கிட்டத்தட்ட ஐந்து எதிரணி வீரர்களுக்கு இவர்கள் தரப்பில் ஒருவர்தான் என்கிற அளவில்தான் இருந்தனர்.

ஜெர்மனிய ராணுவம் இவர்களை அக்டோபர் 30 அன்று தாக்கியது. இதில் இவரைத் தவிர அத்தனை பேரும் இறந்துவிட்டனர். இறந்துவிட்டது போல நடித்து இருள் ​சூழ்ந்த பிறகு மெல்லத் தவழ்ந்து தனது ராணுவப் பிரிவுக்கு வந்து சேர்ந்தார்.
குதாதத் கான் (Khudadad Khan)

"1914 அக்டோபர் 31 அன்று பெல்ஜியத்தில் உள்ள ஹோலெபேப் கிராமத்தில் நடைபெற்ற போரில் பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி கடும் காயமடைந்தார். இந்த நிலையில் குதாதத் கான் என்ற ராணுவ வீரர் (அவரே கடும் காயத்துக்கு உள்ளாகி இருந்த போதும்) தொடர்ந்து தனது துப்பாக்கியை இயக்கி எதிரணியைச் சேர்ந்த ஐந்து பேரைக் கொன்றார்" என்று இவர் குறித்த பாராட்டுப் பத்திரத்தில் பின்னர் குறிப்பிடப்பட்டது.

- போர் மூளும்...



source https://www.vikatan.com/government-and-politics/governance/first-world-war-history-why-did-india-serve-british-during-the-first-world-war

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக