Ad

திங்கள், 8 மே, 2023

Motivation Story: `1,500 புஷ்அப்ஸ், 2,000 சிட்அப்ஸ்'- அமெரிக்க ராக்கி பாய் ஹெர்ஸ்செல் வாக்கரின் கதை!

`ஏதாவது ஒன்றை அர்ப்பணிப்பு உணர்வோடு பின்பற்றினால், உங்களாலும் சாதிக்க முடியும்.’ - ஹெர்ஸ்செல் வாக்கர் (Herschel Walker).

குறைகளில்லாத மனிதர்களே இல்லை. சிலருக்கு உடல் குறைபாடு இருக்கும். அவர்களில் பலர் அதை நினைத்துக் குமைந்துபோவார்கள்; பிறரின் கேலியைத் தாங்க மாட்டார்கள். மன உறுதியும், விடா முயற்சியும் இருக்கும் சிலரால்தான் அது போன்ற சூழ்நிலைகளைக் கடந்து வர முடியும். அப்படித் தன் குறைபாடுகளையெல்லாம் பொருட்படுத்தாமல், அமெரிக்காவின் என்.எஃப்.எல் அணியில் (National Football League) விளையாடி கால்பந்தில் பல சாதனைகளைச் செய்தவர் ஹெர்ஸ்செல் வாக்கர். இன்று அமரிக்காவின் ரிபப்ளிக் கட்சியின் மிக முக்கியமான அரசியல் பிரமுகராகவும் உயர்ந்திருக்கிறார். ஆனால், அந்த உயரத்தை அவ்வளவு எளிதாக அடைந்துவிடவில்லை.

1962-ம் ஆண்டு ஜார்ஜியாவிலுள்ள அகஸ்டாவில் பிறந்தவர் ஹெர்ஸ்செல் வாக்கர். வளர்ந்ததெல்லாம் ரைட்ஸ்வில்லியில் (Wrightsville). கீழ்நடுத்தரக் குடும்பம். கூடப் பிறந்தவர்கள் ஆறு பேர். சிறு வயதிலேயே உடல்பருமன் பிரச்னை. கூடவே திக்குவாய் வேறு. கேட்க வேண்டுமா... சக சிறார்களின் கேலிக்கு ஆளானார் வாக்கர். ஒவ்வொரு நாளும் பள்ளிக்குப் போவதும் வருவதும் அவரைப் பொறுத்தவரை நரக வேதனை. அவர் கறுப்பினத்தைச் சேர்ந்தவர். அதனாலேயே வெள்ளையின மாணவர்கள் அவரைச் சீண்டினார்கள்; அவருடைய குண்டு உருவத்தைக் கேலி செய்தார்கள்; அவரைப்போலவே திக்கித் திக்கிப் பேசி வெறுப்பேற்றினார்கள். மனதளவில் மிகவும் குமைந்துபோயிருந்த வாக்கரை தலை நிமிரச் செய்தவர் அவருடைய அம்மா.

`நான் என்னைப் பற்றி நல்லவிதமாக உணரும்போதுதான் எனக்கான நல்ல விஷயங்கள் நிகழத் தொடங்குகின்றன. நீங்கள் உயரே பார்க்கும்போதுதான், நீங்களும் உயரத் தொடங்குவீர்கள்.’ - ஹெர்ஸ்செல் வாக்கர்.
ஹெர்ஸ்செல் வாக்கர் (Herschel Walker).

சக மாணவர்கள் கேலி ஒருபக்கம் இருக்கட்டும். ஆசிரியர்களுமேகூட வாக்கரைக் கொண்டாடவில்லை. கொண்டாடாவிட்டாலும் பரவாயில்லை... அக்கறையோடு அவரின் படிப்பு குறித்துப் பேசவோ, அவரைப் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்தவைக்கவோ ஓர் ஆசிரியர்கூட அவருக்கு வாய்க்கவில்லை. அதனாலேயே `மிக மோசமான ஸ்டூடன்ட்’, `மக்குப் பையன்’, `இவனுக்கெல்லாம் படிப்பு எங்கே மண்டையில ஏறப்போகுது?’ போன்ற விமர்சனங்களை எதிர்கொண்டார். அவர்மேல் வீசப்பட்ட சுடுசொற்கள் அவரை மேலும் மேலும் நோகச் செய்தன. திக்கித் திக்கிப் பேசுவது இன்னும் அதிகமானது. தன் மீதிருந்த நம்பிக்கையைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துகொண்டிருந்தார் வாக்கர்.

அது ஒரு கோடைக்காலம். பள்ளியிலிருந்து வீடு திரும்பினார் வாக்கர். தூரத்திலேயே தன் மகன் வருவதைப் பார்த்துவிட்டார் அம்மா கிறிஸ்டின் (Christine). வயதுக்குப் பொருந்தாத குண்டு உருவம். தளர்ந்த நடை. அந்த சின்னஞ்சிறு வயதிலேயே பெரிதாக எதையோ பறிகொடுத்தது போன்ற முகத்தோற்றம். அம்மா கிறிஸ்டினுக்கு, வாக்கரைப் பார்க்கப் பார்க்க என்னவோ செய்தது. வீட்டுக்குள் நுழைந்ததும் வாக்கரிடம் பேச்சுக்கொடுத்தார்.

``வாக்கர்... ஏன் டல்லா இருக்கே... என்ன நடந்துச்சு?’’

``அம்மா... நான் இனிமே ஸ்கூலுக்குப் போகலைம்மா.’’

வாக்கரின் கண்களில் நீர் திரண்டது.

ஹெர்ஸ்செல் வாக்கர் (Herschel Walker).

``தினம் தினம் வெளியில போறதே அவஸ்தையா இருக்கும்மா. என் வயிறை, என் நடையை, என் உடம்பைப் பார்த்து எல்லாரும் சிரிக்கிறாங்கம்மா. என்னை மாதிரியே திக்கித் திக்கிப் பேசிக் காட்டி கிண்டல் பண்றாங்கம்மா. அதுவுமில்லாம... அதுவுமில்லாம...’’

``அதுவுமில்லாம... என்ன... சொல்லு?’’

``நான் கறுப்பினத்தவன்கிறதுனாலேயே நிறைய பேர் ஒதுக்கிவைக்கிறாங்கம்மா...’’

துடித்துப்போனார் அம்மா. ஆனால், சிறுவன் வாக்கரிடம் என்ன பேச வேண்டும், எப்படி அவரை ஆற்றுப்படுத்துவதென்பது அந்தத் தாய்க்குத் தெரிந்திருந்தது.

`வெற்றி என்பது எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது... அவ்வளவுதான்.’ - ஹெர்ஸ்செல் வாக்கர்.

அம்மா ஹெர்ஸ்செல் வாக்கரைக் கூர்ந்து பார்த்தார். ``முதல்ல ரெஃப்ரெஷ் பண்ணிக்கிட்டு வந்து டீ சாப்பிடு. உனக்கு ஒரு விஷயம் சொல்றேன்’’ என்றார்.

வாக்கர் டீ சாப்பிட்டு முடித்ததும் அம்மா பேச ஆரம்பித்தார். ``இப்போ உனக்கு முன்னால இருக்குற பிரச்னையெல்லாம் ஒண்ணுமேயில்லை’’ என்றார்.

வாக்கர், அம்மாவை ஆச்சர்யமாகப் பார்த்தார்.

``ஆமாண்டா கண்ணு. வாழ்க்கையில நீ இன்னும் என்னென்னவோ பார்க்கவேண்டியிருக்கு. முதல்ல இந்தப் பிரச்னைகள்ல இருந்து உன்னை மாத்திக்க, திசைதிருப்பிக்கப் பழகிக்கோ. உன்னுடைய உடல்பருமனைக் குறைக்க என்ன செய்யலாம்னு பாரு. திக்குவாய் சரியாக ஏதாவது வழியிருக்கான்னு யோசி... அதையெல்லாம் விட்டுட்டு, `அவங்க கிண்டல் பண்றாங்க... இவங்க கேலி பேசுறாங்க’ன்னு காரணம் எதையும் சொல்லாத. புரிஞ்சுச்சா?’’

தலையில் அடித்ததுபோல் அம்மா சொன்ன வார்த்தைகள் வாக்கரின் மனதில் ஆழமாகப் பதிந்துபோயின. அன்று இரவெல்லாம் யோசித்தார்.

அடுத்த நாள் தன்மேல் அக்கறைகொண்ட வயதில் மூத்த உறவினர் ஒருவரிடம் ஆலோசனை கேட்டார். அதற்குப் பிறகு அவர் மேற்கொண்டதெல்லாம் அசாத்தியமான உடற்பயிற்சிகள்! புஷ்அப், சிட்அப் இரண்டு பயிற்சிகளையும் தீவிரமாகச் செய்ய ஆரம்பித்தார். வெறித்தனமான பயிற்சி. ஒருகட்டத்தில் ஒரு நாளைக்கு 1,500 புஷ்அப்ஸ், 2,000 சிட்அப்ஸ் என அசுரத்தனமான பயிற்சிகள். `அந்த நேரத்துல எக்சர்ஸைஸ் பண்றது எனக்கு ஒரு போதையாவே ஆகிடுச்சு’ என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் வாக்கர். அதன் பிறகு உடல்பருமன் குறைந்து காணாமலேபோனது. உடம்பு கட்டுக்கோப்பாக மாறியது. அம்மாவின் அறிவுரைப்படி தடகள விளையாட்டுகளிலும், கால்பந்து விளையாட்டிலும் கவனம் செலுத்த ஆரம்பித்தார் வாக்கர். பள்ளியில் அதற்காகவே இருந்த அணிகளில் சேர்ந்தார்.

ஹெர்ஸ்செல் வாக்கர்
`நீங்கள் கடினமாகப் பயிற்சி செய்தால் உங்கள் உடல் மட்டும் கடினமாக இருக்காது; உங்களைப் பிறர் வெல்வதும் கடினமாக இருக்கும்.’’ - ஹெர்ஸ்செல் வாக்கர்.

உடலை மட்டும் சரிப்படுத்த நினைக்கவில்லை வாக்கர். தன் திக்குவாய் போகவும் கடுமையாகப் பயிற்சி செய்தார். ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு ஓர் இடத்தில் உட்கார்ந்துகொள்வார். சத்தம்போட்டுப் படிப்பார். சுற்றுச்சூழல், யார் அருகிலிருக்கிறார்கள் என்பதையெல்லாம் கவனிக்கவே மாட்டார். முடிந்தவரை சத்தமாகப் படிப்பார். படிக்கப் படிக்க நாக்குக் குழறுவது கொஞ்சம் கொஞ்சமாக சரியானது. சரளமாகப் படிக்க முடிந்தது. மற்றவர்களிடம் பேசும்போது சாதாரணமாகப் பேசவும் முடிந்தது.

அமெரிக்காவின் நேஷனல் ஃபுட்பால் லீக் அணிக்காக, கால்பந்து விளையாட ஆரம்பித்தார். 1980-ம் ஆண்டு கல்லூரியில் தொடங்கிய அவருடைய கால்பந்து விளையாட்டுப் பயணம், 1997-ம் ஆண்டுவரை தொடர்ந்தது. பிறகு அரசியலில் ஆர்வம் பிறந்தது. 2022-ம் ஆண்டு ஜார்ஜியாவில் ரிபப்ளிக் கட்சி சார்பாக செனட் சபை உறுப்பினருக்குப் போட்டியிடும் அளவுக்கு வளர்ந்தார். அதில் தோற்றுவிட்டாலும், அமெரிக்கா முழுவதும் ஒரு பிரபலமாக அடையாளம் காணப்பட்டார். செனட் தேர்தலில் போட்டியிட்டபோது அவர் மேல் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

ஹெர்ஸ்செல் வாக்கர் (Herschel Walker).

`ரொம்ப வயலன்ட்டான ஆள்...’, `நடத்தை சரியில்லாதவர்...’ என்றெல்லாம் கொட்டித்தீர்த்தன எதிர்க்கட்சிகளும் சில பத்திரிகைகளும். அவையெல்லாம் அதிகம் விவாதிக்கப்படவேண்டியவை; ஆராயப்படவேண்டியவை. அவை ஒருபுறம் இருக்கட்டும். நமக்கு ஹெர்ஸ்செல் வாக்கரின் வாழ்க்கை உணர்த்தும் செய்தி ஒன்றுதான். `எவ்வளவு இடர்வரினும் துணிந்து நில். துன்பம் ஓடிப்போகும்!’



source https://www.vikatan.com/lifestyle/motivation/motivation-story-of-former-american-footballer-herschel-walker

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக