Ad

வெள்ளி, 12 மே, 2023

வொர்க் லைஃப் பேலன்ஸ் இல்லை: மோசமான மனநிலைக்கு உள்ளாகும் கார்ப்பரேட் ஊழியர்கள்; ஆய்வில் அதிர்ச்சி!

இந்தியாவில், வொர்க் லைஃப் பேலன்ஸ் இல்லாமல் 80 சதவிகிதம் கார்ப்பரேட் ஊழியர்கள் கடந்த ஆண்டில் மோசமான மனநிலைக்குத் தள்ளப்பட்டதாக, ஆய்வு தெரிவிக்கிறது.

வேலைக்குச் செல்லும் மக்களின் எண்ணிக்கை இன்று அதிகரித்துவிட்டது. அதே நேரம், வொர்க் லைஃப் பேலன்ஸ் செய்யத் தெரியாமல் பலவித அவதிக்குள்ளாகின்றனர். வேலைக்காகச் செலவிடும் நேரத்தையும், குடும்பத்திற்காக மற்றும் தனக்குப் பிடித்தமான விஷயங்களுக்காகச் செலவிடும் நேரத்தையும் சமநிலையாக வைத்துக் கொள்வதுதான் வொர்க் லைஃப் பேலன்ஸ். இதில், எந்த ஒரு விஷயத்தைத் தவிர்க்க நேரிடுவதாலும், வாழ்வில் மிகவும் அவசியமான விஷயங்களுக்கு நேரமில்லாமல் போவதாலும், மக்களால் வொர்க் லைஃபை பேலன்ஸ் ஆக வைத்துக்கொள்ள முடியாமல் போகலாம். இது அவர்களை அதீத மன அழுத்தத்திற்கு ஆளாக்கும்.

பணிச்சுமை

மொபைல் தொழில்நுட்பம் மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் போன்ற மென்பொருள்களின் பயன்பாடு தற்போதைய கார்பரேட் பணியிடங்களில் கட்டாயமாகிவிட்டது. அதனால் வீட்டிலிருந்தே வேலை செய்வது, வேலைநேரம் முடிந்த பிறகும் தொடர்ந்து வேலையைத் தொடர்வது என, பணியில் அதிகநேரம் செலவிடுவதால், மற்ற விஷயங்களுக்கு நேரமில்லாமல் போய்விடுகிறது.

சமீபத்தில், மென்டல் ஹெல்த் அண்ட் வெல்னெஸ் கோஷன்ட் @ வொர்க்பிளேஸ் - 2023 (Mental health and wellness Quotient @ workplace 2023) எனும் மனநலம் சார்ந்த கணக்கெடுப்பானது மும்பை, கொல்கத்தா, டெல்லி, சென்னை, அகமதாபாத், ஹைதராபாத், புனே, பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களில், கார்ப்பரேட்டில் பணிபுரியும் 3000 பணியாளர்களைக் கொண்டு நடத்தப்பட்டது. அவர்களில் 90% பேர், விடுமுறை நாள்களிலும் வேலை செய்யக் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இதில் கிட்டத்தட்ட 80 சதவிகிதம் ஊழியர்கள் கடந்தாண்டில் மோசமான மனநலம் காரணமாக வேலையில் இருந்து சுமார் இரண்டு வாரங்களுக்கு விடுப்பு எடுத்துள்ளனர்.

stress & relax

ஆரோக்கியத்தைச் சீராக வைத்துக் கொள்ள இயலாமல் 81 சதவிகிதம் மற்றும் குடும்பக் கடமைகளைச் சரியாகச் செய்ய முடியவில்லை என்று 75 சதவிகித ஊழியர்களும், தங்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டிருப்பதாக, ஆதித்யா பிர்லா கல்வி அறக்கட்டளையில் ஒரு முன்னெடுப்பாக எம் பவர் ‌‌(MPower) நடத்திய கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்பரேட் ஊழியர்களில் 48 சதவிகிதம் மோசமான மன ஆரோக்கியத்தால், ஆபத்தில் உள்ளனர் என்றும், குறிப்பாக பெண் ஊழியர்களின் இடையே இது அதிகமாக இருப்பதாகவும், 56 சதவிகிதம் பெண் ஊழியர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், ‌ இக்கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. 50 சதவிகிதத்திற்கும் மேலானோர், மன அழுத்தம் தங்களில் உற்பத்தித் திறனை பாதிப்பதாக ஒப்புக்கொண்டனர்.

ஆதித்யா பிர்லா கல்வி அறக்கட்டளை மற்றும் எம்-பவர் (MPower) நிறுவனத்தின் தலைவரான டாக்டர் நீரஜா பில்லா, ``இந்தியாவில் கார்ப்பரேட் ஊழியர்களுக்கு இடையே மனச்சோர்வு மற்றும் மன அழுத்தங்கள் ஆபத்தான நிலையில் உள்ளன. இளைஞர்களை நம்பி இருக்கும் இந்தியா போன்ற நாட்டிற்கு, பொருளாதார வளர்ச்சிக்கும் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் ஆரோக்கியமான பணியாளர்கள் மிகவும் முக்கியம். மன ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்போம் மற்றும் நமது தேசத்தின் முன்னேற்றத்திற்காக ஆரோக்கியமான, அதிக உற்பத்தித் திறன் கொண்ட பணியாளர்களை உருவாக்க, தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்" என்று கூறியுள்ளார்.

மன அழுத்தம் | Representational image

ஒரு நல்ல வொர்க் லைஃப் பேலன்ஸை உருவாக்க, உறவுகளுக்காகச் செலவிடும் நேரம், குடும்பப் பொறுப்புகள் மற்றும் பொழுதுபோக்கு என்று பல விஷயங்கள் உள்ளன. எனவே, வேலை வேலையென்று ஒரே விஷயத்தில் கவனத்தைச் செலுத்தாமல் இப்படி நம்மை சுற்றி இருக்கும் பல விஷயங்களில் கவனத்தைச் செலுத்தினால், நம் உடல்நலமும் மனநலமும் நன்றாக இருக்கும். அதுவே நல்ல வொர்க் லைஃப் பேலன்ஸுக்கு வழிவகுக்கும்.

-பிரியதர்ஷினி.‌ அ



source https://www.vikatan.com/health/mental-health/no-work-life-balance-corporate-employees-prone-to-bad-moods-says-study

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக