Ad

வெள்ளி, 12 மே, 2023

புதுப்புது மோசடிகள்... மக்களே உஷார்!

முன்பெல்லாம் வீட்டுக்குள் திருடர்கள் புகுந்து திருடுவதுதான் வழக்கம். ஆனால், செல்போன், ஆன்லைன் பணப் பரிமாற்றம் என்று வந்த பிறகு, நம்மை அறியாமலேயே நம் பாக்கெட்டுக்குள்ளும் வங்கிக் கணக்குக்குள்ளும் இருக்கும் பணத்தைக் கொள்ளை அடிக்கும் வேலைகள் பக்காவாக நடந்துகொண்டிருக்கின்றன. இந்த மோசடிகளில் வலியப்போய் சதிவேலையில் சிக்கி பெரும் பணத்தை இழந்து கொண்டிருக்கிறார்கள் அப்பாவி மக்கள்!

அண்மையில் நடந்த பல சம்பவங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். புனேவில் பன்னாட்டு பொறியியல் நிறுவனத்தின் துணை மேலாளர் ஒருவருக்கு வந்த குறுஞ்செய்தியில், ‘‘நாங்கள் அனுப்பும் வீடியோக்களை நீங்கள் ‘லைக்’ செய்தால் போதும், ஒரு ‘லைக்’குக்கு ரூ.50 கிடைக்கும்’’ என்று இருந்துள்ளது. அதை அவர், ‘க்ளிக்’ செய்து ‘லைக்’ செய்ய ஆரம்பிக்க, உடனே அவருக்குப் பணம் வரத் தொடங்கியது. ‘‘மேற்கொண்டு பணம் சம்பாதிக்க வேண்டுமெனில், இந்த அக்கவுன்டில் பணம் கட்டுங்கள்; உங்களுக்கு இருமடங்காகக் கிடைக்கும்’’ என்று, குறுஞ்செய்தி அனுப்பியவர்கள் தகவல் அனுப்ப, இந்தத் துணை மேலாளரும் அவர்களுக்குப் பணம் அனுப்பி இரு மடங்காகப் பணத்தைப் பெற்றுள்ளார். ஆனால், கடைசியாக அவர் அனுப்பிய ரூ.40 லட்சம் பணம் திரும்ப வரவே இல்லை.

இதே போல, சென்னையில் 30-க்கும் மேற்பட்ட புகார்கள் சைபர் க்ரைம் போலீஸுக்கு வந்துள்ளன. ‘‘ரூ.100 தந்தால், ரூ.150 உங்களுக்குக் கிடைக்கும்’’ என டெலிகிராம் என்னும் குறுஞ்செய்தித் தளத்தில் ஒரு விளம்பரம் வர, ‘ரூ.100-தானே...’’ என்று சிலர் அனுப்பினார்கள். அடுத்த சில நிமிடங்களில் அவர்கள் கணக்கில் ரூ.150 வந்தது. அடுத்து ரூ.1,000 அனுப்ப, ரூ.1,500 வந்தது. கடைசியில் ரூ.30 லட்சத்தை அனுப்பிவிட்டு, ரூ.45 லட்சம் திரும்ப வரும் எனக் காத்திருந்தவருக்கு எந்தப் பணமும் வரவில்லை. இப்படி 30 பேர் ரூ.5 கோடி வரை பணத்தை இழந்திருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் எழுத்தறிவு இல்லாத ஏழைகள் அல்ல. நன்கு படித்தவர்கள். ரூ.30 லட்சத்தை இழந்தவர் ஐ.டி கம்பெனியில் வேலை பார்க்கும் இன்ஜினீயர். ரூ.1.2 கோடி இழந்தவர் ஒரு தொழில்முனைவோர்.

அளவுக்கு அதிகமாக லாபம் கிடைக்கும் என்று ஆசை காட்டி குறுஞ்செய்திகளை அனுப்புவதுதான் மோசடிக்காரர்கள் விரிக்கும் வலையாக இருக்கிறது. ‘வீட்டில் உட்கார்ந்தபடியே பணத்தை அள்ளலாம் போல இருக்கே!’ என்று நினைத்து, இந்த வலையில் வலியச்சென்று விழுந்துவிட்டு, பிற்பாடு ‘பணம் பறிபோச்சே’ என்று புலம்புவதுதான் வாடிக்கையான விஷயமாக மாறிவிட்டது. ஒருவர் நமக்கு ஏன் அதிக லாபம் தர வேண்டும், பகுதி நேர வேலையில் இப்படி எல்லாம் பணம் சம்பாதிக்க முடியுமா என்கிற கேள்விகளை எல்லாம் கேட்காமலே, பணத்தைப் போட்டுவிட்டு, பிற்பாடு ‘நான் அப்பாவி, தெரியாமல் பணம் போட்டு விட்டேன்’ என்று புலம்புவதில் என்ன பயன்?

எதுவும் நமக்கு சும்மா கிடைக்காது; அப்படிக் கிடைக்கும் என்று சொன்னால், அது நம்மை ஏமாற்றுவதற்குப் போடும் தூண்டில் என்பதை உணர்ந்து, கவனமாக நடந்துகொண்டால் மட்டுமே இது மாதிரியான மோசடிகளில் இருந்து தப்பிக்க முடியும். பேராசையால் இனியும் பணத்தை இழக்காதீர்கள் மக்களே!

- ஆசிரியர்



source https://www.vikatan.com/personal-finance/fraud-schemes-for-careful-tips

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக