Ad

திங்கள், 15 மே, 2023

கள்ளச்சாராய விவகாரம்: "விசாரணை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்படும்" - முதலமைச்சர் ஸ்டாலின்

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பத்தில், கள்ளச்சாராயம் குடித்த 10 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில் (மதியம் நிலவரம்), 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், விழுப்புரம் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். அதன் பின்னர், மருத்துவமனை வளாகத்திற்குள்ளாகவே இந்தச் சம்பவம் குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே இருக்கக் கூடிய எக்கியார் குப்பம் மீனவர் கிராமத்தைச் சேர்ந்த பலர் கள்ளச்சாராயம் அருந்தியதால் உடல்நிலை பாதிக்கப்பட்டனர். இது அரசினுடைய கவனத்திற்கு வந்தவுடன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை,  பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனை போன்ற பல்வேறு மருத்துவமனைகளுக்கு அவர்கள் அனுப்பிவைக்கப்பட்டு, உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

பாதிக்கப்பட்டோரை பார்வையிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.

மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் இதுவரை 9 பேர் இறந்திருக்கிறார்கள். மேலும், 40 பேர் முண்டியம்பாக்கம் மருத்துவமனையிலும், 3 பேர் ஜிப்மர் மருத்துவமனையிலும் , ஒருவர் புதுச்சேரி அரசு மருத்துவமனையிலும் தற்போது சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்குத் தேவையான அனைத்து சிசிச்சைகளையும் வழங்கி, உயிர்களை காப்பாற்றிடுமாறு மருத்துவர்களை நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். இந்தச் சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணையில், கள்ளச்சாராயம் விற்ற குற்றவாளிகள் மெத்தனால் எரிசாராயத்தை பயன்படுத்தியதால் இந்தத் துயரச் சம்பவம் ஏற்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. இதில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினரின் நடவடிக்கையால் உடனடியாக கைதும்செய்யப்பட்டிருக்கிறார்கள். மேலும், இந்தச் சம்பவம் நடைபெற காரணமாக இருந்த அனைவரையும் கைதுசெய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் காவல்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

செங்கல்பட்டு மாவட்டம், பெருக்கரணை கிராமத்தில் ஐந்து பேர் கள்ளச்சாராயம் குடித்து இறந்த துயரச் சம்பவமும் நிகழ்ந்திருக்கிறது. மேலும், 7 நபர்கள் தற்போது செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். சம்பவத்தில் ஈடுபட்டவர்களும் உடனடியாக காவல்துறையால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். விசாரணையின்போது, இங்கும் கள்ளச்சாராயம் விற்பனை செய்துள்ளவர்கள் மெத்தனால் பயன்படுத்தியுள்ளதாகவும், டாஸ்மாக் நிறுவனத்தினுடைய பாட்டில்களில் கள்ளச்சாராயத்தை ஊற்றி விற்பனை செய்திருப்பதாகவும் தெரியவந்திருக்கிறது. இரு சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை உழங்கிட உத்தரவிட்டிருக்கிறேன். மேலும், பாதிக்கப்பட்டு சிசிச்சை பெற்றுக் கொண்டிருக்கக் கூடியவர்களின் குடும்பங்களுக்கு 50,000 ரூபாய் நிதி உதவியும் வழங்கப்பட்டிருக்கிறது.

மு.க.ஸ்டாலின் பேட்டி

இந்த சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளது மட்டுமின்றி, இதற்குக் காரணமானவர்கள் அனைவரையும் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டிருக்கிறது . இது தவிர, தொழிற்சாலைகளில் பயன்படுத்தக் கூடிய மூலப்பொருள்கள் இத்தகைய கள்ளச்சாராய நிகழ்வுகளில் பயன்படுத்தப்படுவதை முழுமையாக தடுத்திடும் பொருட்டு, இந்தப் பிரச்னையின் மூலக்காணத்தை கண்டுபிடித்து ஒழித்திட ஏதுவாக இந்த இரு சம்பவங்கள் குறித்த விசாரணை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்படும். மேலும், 'கள்ளச்சாராய விற்பனையை முழுமையாக தடுத்திட வேண்டும்' என்ற அரசின் கடுமையான உத்தரவை உரிய முறையில் நடைமுறைப்படுத்தாமல் கள்ளச்சாராய விற்பனையை கண்காணிக்க தவறியவர்கள் மீதும் இந்த அரசு தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை எடுக்கும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார். 

விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ஸ்ரீநாதா

அவரிடம், 'உரிய சிகிச்சை அளிக்கப்படாததே உயிரிழப்பு அதிகரிப்பதற்குக் காரணம்' என்று உறவினர்கள் குற்றம்சாட்டியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஸ்டாலின், "அவர்கள் பதட்டத்தில் சொல்கிறார்கள். உரிய சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கிறார்கள். சில பேருக்கு டிரிப்ஸ் ஏற்ற வேண்டும், அதற்குப் பிறகுதான் மருந்து மாத்திரைகள் கொடுக்க வேண்டும். இதில் முறைகள் இருக்கிறது. அதனால் மருத்துவரீதியாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். நன்றாக விசாரித்துவிட்டேன், ஓரிருவர் இதுபோல புகார் செய்தார்கள், அது உண்மையல்ல" என்றார். 

இதனிடையே, கள்ளச்சாராய விவகாரத்தில், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, விழுப்புரம் மதுவிலக்கு பிரிவு டி.எஸ்.பி பழனி, கள்ளக்குறிச்சி மதுவிலக்கு பிரிவு டி.எஸ்.பி துரைப்பாண்டி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/chief-minister-stalin-personally-visited-the-patients-who-were-treated-in-the-hospital-due-to-drinking-alcohol

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக