நாம் டென்ஷனாக இருக்கும்போது நகத்தைக் கடித்துத் துப்புவதும், மகிழ்ச்சியாக இருக்கும்போது நகப்பூச்சுகளை பூசுவதும் என நமது மனநிலை நகங்களிலும் பிரதிபலிக்கும். நமது கை மற்றும் கால் விரல்களில் உள்ள நகம், உடலில் ரத்த ஓட்டம் இல்லாத பகுதிகளில் ஒன்று. விரலுக்கு கவசமாக இருக்கும் நகம், `ஆல்ஃபா கெரட்டின்' (Alpha-keratin) என்னும் புரதப் பொருளால் ஆனது. அழகை மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்தையும் சொல்லும் நகத்தைப் பராமரிப்பது எப்படி, எந்த நகத்தில் எந்த அடையாளம் இருந்தால், அது எந்த நோயின் அறிகுறி? பொதுநல மருத்துவர் தினகரன் வழங்கிய தகவல்கள்...
நகத்தின் அமைப்பு, அதன் பணிகள்!
கை, கால்களில் வளரும் நகத்தின் மிகப்பெரிய வேலையே, விரலின் முனைகளைப் பாதுகாப்பதுதான். நகத்தில் பல பாகங்கள் இருக்கின்றன. இந்த அமைப்புகள் கை மற்றும் கால்விரல் நகங்களுக்குப் பொதுவானவை. மேற்புறத்தில் பளிச்சென்றும் வழுவழுப்பாகவும் இருக்கும் பாகமே நகத்தின் உறுதியான பாகம். இதில் நரம்புகளும் ரத்தக்குழாய்களும் இல்லை.
வெளிநகத்துக்கு அடியில் உள்ள நகத் தளத்திலேயே திசுக்களால் ஆன ரத்த ஓட்டப் படுக்கை இருக்கிறது. நகத்துக்குத் தேவையான ஊட்டச்சத்தை அளிப்பதே இந்த படுக்கையின் பிரதானமான பணி. இந்த நகத்தளத்தைத் தாண்டி வளரும் நகப்பகுதியைத்தான் நாம், `வேண்டாம்’ என்று வெட்டிவிடுகிறோம். இது இறந்த நகப்பகுதியாகக் கருதப்படுகிறது. இதற்குக் காரணம், இந்தப் பகுதியை வெட்டும்போது எந்த வலியும் ஏற்படாததுதான்.
நகமும் சதையும் சேரும் இடத்தில், சதைக்குக் கீழே மறைந்திருப்பது நக வேர். இந்தப் பகுதியில்தான் நகம் முளைக்கும். இந்தப் பகுதியை அழுத்தினால் வலி உண்டாகும். அதற்குக் காரணம், நரம்புகளும் ரத்தக்குழாய்களும் இருப்பது. நகத்தைச் சுற்றியிருப்பது, `U’ வடிவத் தோல் அமைப்பு (Nail fold).
நகத்தின் அடியில் காணப்படும் பிறை போன்ற அமைப்பு `லுனுலா’ (Lunula) என்றும், நகத்துடன் இணைந்த தோல் பகுதி `எபோனைச்சியம்’ (Eponychium) என்றும், நகத்தைச் சுற்றியுள்ள உள்தோல் `பெரியோனைசியம்’ (Perionychium) என்றும், நகத்தைச் சுற்றியுள்ள மேல்தோலுக்கு `க்யூட்டிக்கிள்’ (Cuticle) என்றும் பெயர்.
நகம் வளரும் காலம்
நான்கு முதல் எட்டு மாதங்களில் ஒரு நகம் முழுவதுமாக வளர்ச்சியடைந்துவிடும். கோடை காலத்தில் வேகமாக வளரும். ஒரு மாதத்துக்கு, கை விரலில் மூன்று மில்லி மீட்டரும், கால் விரலில் ஒரு மில்லி மீட்டரும் நகம் வளரும்.
நக வளர்ச்சி குறைவுக்குக் காரணம்...
* தொடர்ந்து நோய்வாய்ப்படுதல்
* சில வகையான மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிடுதல்
* வயது முதிர்ச்சி
* ஊட்டச்சத்து குறைபாடு
நகமும் நோயும்
50-க்கும் அதிகமான நோய்களுக்கு முக்கியமான அறிகுறி நகத்தில் ஏற்படும் மாற்றங்கள்தான். அவற்றில் சில...
* நகம் நீல நிறமாக இருந்தால், சீரற்ற ரத்த ஓட்டமாக இருக்கலாம்.
* நகத்தின் மேல் பகுதியின் நிறம் மாறாமல் கீழ்ப்பகுதியில் மாறியிருந்தால், அது சிறுநீரக நோயாக இருக்கலாம்.
* நகத்தின் மேல் பகுதி வழக்கமான நிறத்திலும், கீழ்ப்பகுதி வெள்ளையாகவும் இருந்தால் `சிரோசிஸ்’ (Cirrhosis) என்னும் கல்லீரல் நோய் மற்றும் இதயச் செயலிழப்பு நோயாக இருக்கலாம்.
* கைவிரல் நகங்கள் மிகவும் வெண்மையாகவும், ஸ்பூன் போன்று குழி விழுந்தும் இருந்தால் இரும்புச்சத்து குறைபாடாக இருக்கலாம்.
* கைவிரல் நகங்கள் வீங்கியிருத்தல். இதை `கிளப்பிங் நெய்ல்ஸ்’ (Clubbing Nails) என்பார்கள். இதயக் கோளாறுகள், நுரையீரல் கோளாறுகள், குடல் நோய், கல்லீரல் நோய், பிறவிக் கோளாறு, இதய உறை அழற்சி நோய், புற்றுநோய், செரிமானக் கோளாறு போன்ற நோய்களின் பிரதான அறிகுறி இது.
* லுனுலாவில் சிவப்புப் புள்ளிகள் இருந்தால் `சொரியாசிஸ்’ என்னும் சரும நோயாக இருக்கலாம்.
* நகம் மஞ்சள் நிறமாக இருந்தால், மஞ்சள் காமாலை, நுரையீரல் நோய், நிணநீர்த்தேக்க நோய் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றின் அறிகுறியாக இருக்கலாம்.
* நகத்தில் கறுப்புக்கோடுகள் இருந்தால் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.
கால்சியம், வைட்டமின், புரதம், இரும்புச்சத்து போன்ற வைட்டமின் குறைபாடுகளாலும் நகத்தின் குறுக்கே வெள்ளைக்கோடுகள், வெள்ளைப் புள்ளிகள் தோன்றும்.
ஆரோக்கியமான நகங்களுக்கு...
* அடிக்கடி விரல்களைச் சோப்பு போட்டுக் கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். கழுவிய பின்னர் ஈரம் போக நன்றாகத் துடைக்க வேண்டும்.
* நகம் கடிக்கும் பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும். இதனால், நகத்தில் உள்ள கிருமிகள் வாய்க்கும், வாயில் உள்ள கிருமிகள் நகத்துக்கும் செல்லும்.
* கெமிக்கலைப் பயன்படுத்தும்போது தகுந்த கையுறைகளை அணியவேண்டும்.
* நகப்பூச்சு பயன்படுத்துபவர்கள், அடிக்கடி பாலீஷ் ரிமூவரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்.
* வறண்ட நகம் கொண்டவர்கள் மாய்ச்சுரைசரைப் பயன்படுத்தலாம்.
* பாட்டில் மூடி, டப்பாக்களைத் திறப்பதற்கு நகங்களைப் பயன்படுத்த வேண்டாம்.
* நீளமாக நகம் வளர்ப்பதைத் தவிர்க்கலாம். இது பல காயங்களுக்கு வழிவகுக்கும்.
* சரியான அளவு ஷூ, செருப்பைப் பயன்படுத்த வேண்டும்.
* நகவெட்டியைக் கொண்டு நகங்களை வெட்டலாம். பிளேடு, கத்தரிக்கோல், கத்தி போன்றவற்றைக் கொண்டு நகம் வெட்டக் கூடாது.
* நகங்களின் நிறத்திலும் வளர்ச்சியிலும் திடீரென மாற்றம் இருந்தால், உடனடியாக மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது.
source https://www.vikatan.com/health/nail-that-reflects-body-health-condition
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக