Ad

வெள்ளி, 3 மார்ச், 2023

உழவர் சந்தையை உருவாக்கிய உரை..! குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் வியக்க வைக்கும் விவசாய அனுபவம்!

பசுமை விகடன், தென்னை வளர்ச்சி வாரியம், குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் இணைந்து நடத்திய `லாபகரமான தென்னை சாகுபடி!' குறித்த களப் பயிற்சி, அண்மையில் சிவங்கை மாவட்டம், பிரான்மலை அருகே மேலப்பட்டி குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் பண்ணையில் நடைபெற்றது. குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தின் தலைவர் பேராசிரியர் செந்தூர்குமரன் கலந்துகொண்டு தென்னையில் லாபம் எடுக்கும் தொழில்நுட்பங்கள் குறித்து, விவசாயிகளுக்கு விரிவான பயிற்சிகளை வழங்கினார். தென்னை வளர்ச்சி வாரியத்தின் வளர்ச்சி அலுவலர் சசிக்குமார் கலந்துகொண்டு, தென்னை வளர்ச்சி வாரியத்தின் திட்டங்களை விளக்கியதோடு, விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். 

தொடர்ந்து, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். 

அப்போது, பேசிய அவர், ``நாம் படித்து வளர்ந்தது எல்லாம் மதுரையில்தான். அப்போதெல்லாம், விவசாயத்தில் எந்த அனுபவமும் இல்லை. குழாய்த் தண்ணீரைத்தான் பார்த்திருக்கிறேமே தவிர, கிணற்று நீரை, குளத்து நீரை, ஆற்று நீரை எல்லாம் பார்த்ததில்லை. 30 ஆண்டுகளுக்கு முன்பு குன்றக்குடி ஆதீனத்துக்கு வந்த பிறகுதான், இந்தத் தோட்டத்தையும், இதுபோன்று நம் ஆதீனத்தின் நில விவசாய நிலங்களை, நேரடியாகப் பார்க்கும் ஆர்வம் ஏற்பட்டது. குறிப்பாக, ஆன்மிகத்தோடு, விவசாயம் குறித்தும் நிறையவே கற்றுக்கொண்டோம்.

பொன்னம்பல அடிகளார்

இதில், பெரிய பின்னடைவு என்னவென்றால், விவசாயமோ, ஆன்மிகமோ, சமூகப்பணியோ இவற்றில் எல்லாம், என்னால் முழுநேரமாகப் பணியாற்ற முடியவில்லை. இவை அனைத்துக்கும், சமச்சீராக நேரத்தை ஒதுக்கி பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். 

விவசாயத்தின் மீது எனக்கு ஈடுபாடு ஏற்படுவதற்கு, குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையமும், அங்கு பணியாற்றும் பேராசிரியர் செந்தூர்குமரன் உள்ளிட்ட விஞ்ஞானிகளும் ஒரு முக்கிய காரணம். குன்றக்குடியில் 200 ஏக்கர் பரப்பளவில் மானாவரி நிலத்தில் முந்திரி நடவு செய்யப்பட்டிருந்தது.

வறட்சியாலும் பராமரிப்பு குறைவாலும், மரங்கள் எல்லாம் காயத் தொடங்கி விளைச்சல் இல்லாமல் போய்விட்டது. குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தின் ஆராய்ச்சியாளர்களின் ஆலோசனைகளால், அவை மீட்டுருவாக்கம் செய்யப்பட்டு, இன்று அவை நல்ல விளைச்சலை தந்துகொண்டிருக்கின்றன. 

குன்றக்குடி மகாசந்நிதானம் பல தொழில்கள் தொடங்க ஊக்கப்படுத்தி வந்தார். அதில் முக்கியமானது முந்திரி ஓடு தொழில்.

முந்திரிக் கொட்டைகளை, இன்று நேரடியாக அறுவடை செய்து, ஏலத்தில் விற்று, அதில் கணிசமான லாபம் கிடைத்துக் கொண்டிருக்கிறது. முந்திரியின் மேல் ஓட்டை உடைத்தால், வரும் பருப்பு விற்பனைக்கு போய்விடும்.

முந்திரியின் மேல் ஓட்டை எரித்தால், ஒரு விதமான ஆயில் கிடைக்கும். `ரெட்டாக்ஸைடு பிரமைர்' என்ற அந்த ஆயில் தயாரிப்புக்கு முந்திரி ஓடு, ஒரு முக்கியமான ராமெட்டீரியல். அந்தத் தொழிற்சாலையை நம், குன்றக்குடி மகாசந்நிதானம், தந்தை பெரியார் முந்திரி தொழில் கூட்டுறவு தொழிற்சங்கம் என ஒன்றை ஆரம்பித்தார். இது, இன்றும் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. பலரும் வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொண்டிருக்கின்றனர்'' என்று சொல்லியபோது, கைத்தட்டல்கள் மூலம் தோப்பு அதிர்ந்தது. மேலும், தொடர்ந்தார் அடிகளார்.

``1998-ம் ஆண்டு  சென்னை பல்கலைக்கழகத்தில் ' எக்கனாமிக் இன்ஸ்டிபிலிட்டி ஆப் அக்ரிகல்சர் (Economic instability of agriculture) என்ற நூல் வெளியிட்டு விழா நடைப்பெற்றது. நூலை அந்த பல்கலைக்கழத்தின் பொருளாதாரத் துறை தலைமைப் பேராசிரியர் நாகநாதன் எழுதியிருந்தார். இவர் பின்நாளில் திட்டக்குழு துணைத் தலைவராகவும் இருந்தார். அந்த நிகழ்ச்சியில் அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதியும் கலந்துகொண்டிருந்தார்.  இந்த நிகழ்ச்சிக்கு நம்மையும் அழைத்திருந்தனர்.

நிகழ்வில்

ஆதீன மடத்தின் சார்பில், நாம் ஆற்றிய உரையில், `ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலோட விலை ரூ.30. ஒரு லிட்டர் பாலோட விலை ரூ.10. ஐயா, இனிக்கும் கரும்பை பயிரிட்டவன், கசந்து போய் கிடக்கிறான். புத்துணர்வு தரும் தேயிலையைப் பயிரிட்டவன் சோர்ந்து போய் கிடக்கிறான். வாழையைப் பயிரிட்டவன், வாழையைவிட தலைசாய்ந்து கிடக்கிறேன். எனவே தான் மண்ணைப் பொன்னாக்கி, ரத்தத்தை வியர்வாக்கி, இரவு பகலாக உழைக்கிற விவசாயி, தான் பயிரிட்ட விவசாய பொருள்களுக்கு விவசாயியே தான் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்' என்று அழுத்தமாகப் பதிவு செய்தேன். அப்போது, முதல்வர் சொன்னார், `காலம் மாறும். அப்போது அடிகளாரின் கவலை தீரும்' என்றார். அதன்பிறகு கலைஞரால் உழவர் சந்தை ஆரம்பிக்கப்பட்டது. நம் உரை, உழவர் சந்தை வருவதற்கு ஒரு காரணியாகவும் இருந்தது. 

முதல் உழவர் சந்தை- மதுரை

இன்று படித்த இளைஞர்கள் பலரும் சிங்கப்பூர், மலேசியா, துபாய் என வெளி நாடுகளில் விரவிக் கிடக்கின்றனர். இளைஞர்கள் யாரும் விவசாயம் செய்ய முன்வருவதில்லை. முடியாதவர்களும், வயசானவர்களும்தான் விவசாயத்தைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். 

2008-ல் சிங்கப்பூரில் நடந்த மாநாட்டுக்குச் சென்றிருந்தேன். அப்போது, நம்மூரைச் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான இளைஞர்கள் கலந்துகொண்டிருந்தனர். உங்க நாட்டில் இளைஞர்களே இருக்க மாட்டாங்களா..? என்று கேட்ட கேள்வி சுளீர் என்று இருந்தது. ``நான் எல்லாம் படிச்சிருக்கேன்... நானெல்லாம் விவசாய வேலை செய்யிறதா..! என்று கேட்ட இளைஞர்கள், வெளி நாடுகளில், இயந்திரம் போல உழைத்துக் கொண்டிருக்கின்றனர். 

அப்போது விழாவை நடத்தியவர் ஒரு தகவல் சொன்னார். `சிங்கப்பூரில் அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகம். பார்க்க அழகாக இருக்கும். ஆனால், குடிக்க தண்ணீர் இல்லை. மலேசியாவில் இருந்து பைப் போட்டு தண்ணீர் கொண்டு வருகிறோம். ஒரு கோப்பை டீக்கு 6 நாடுகளை நம்பி இருக்கிறோம். ஒரு டீக்கு, பால் டென்மார்க், தேயிலை இலங்கையிலிருந்தும், ரொட்டித் துண்டுகள் தாய்லாந்தில் இருந்தும் வருகிறது. கடல் தண்ணீரை மட்டும் நம்பியிருக்கும் நாங்கள், ஒரு கோப்பை டீக்கும், சில ரொட்டி துண்டுகளுக்கும் 6 நாடுகளை நம்பி இருக்கிறோம். உங்கள் காலுக்குக் கீழே காபிக் கொட்டை முதல் கடல் முத்துவரை எல்லாமும் கிடைக்கிறது' என்று சொன்னார். 

நிகழ்வில்

எனவேதான் இளைஞர்கள் நம் மண்ணைப் பொன்னாக்க முன்வர வேண்டும். விவசாயத்தை சவாலாக எடுத்துக்கொண்டு அதில் வெற்றி காண வேண்டும்.  

தென்னை, புனிதமான செயல்களை செய்வதற்கான முதல் அடையாளம். நான் இந்த மேலப்பட்டி பகுதிக்கு முதலில் வரும் போது எல்லாம், இந்த மண் வளமாக இருந்தது. ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்துப் போகும். கிணறுகளில் எல்லாம் நீர் இருந்தது. காலப்போக்கில் அந்த நிலை அப்படியே மாறிப்போனது. மழைப்பொழிவு குறைந்து தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டபோது, இந்தத் தென்னை மரங்களைக் காப்பாற்றுவது சவாலாகிப் போனது. சொட்டுநீர் பாசனத்தை அறிமுகப்படுத்தி தென்னைகளைக் காப்பாற்றினோம்.

அதன்பின்பு, வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் மற்றும் காசர்கோடு தென்னை ஆராய்ச்சி நிலையத்துடன் சேர்ந்து 10 ஏக்கரில் வறட்சியைத் தாங்கி வளரும் தென்னை மரங்களை உருவாக்கி, ஆய்வு நடைபெற்று வருகிறது. இனி வரும் காலங்களிலாவது இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும்'' என்று அக்கறையுடன் குறிப்பிட்டார் பொன்னம்பல அடிகளார்.

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். சுவையான மதிய உணவுக்குப் பின், மாலை 5 மணிவரை தென்னை சாகுபடி நுணுக்கங்களைத் தெளிவாகக் கற்றுக்கொண்டு ஊருக்குப் புறப்பட்டனர் விவசாயிகள்.



source https://www.vikatan.com/agriculture/policy/young-people-should-get-into-agriculture-kundrakudi-ponnambala-adigalar-speech

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக