Ad

சனி, 4 மார்ச், 2023

பக்கோடா, சில்லி 65, கபாப்.... கலக்கலான கார்ன் சமையல்... | வீக் எண்டு ரெசிப்பீஸ்

சோள சீசன் ஆரம்பித்திருக்கிறது. சோளத்தை சுட்டு சாப்பிட்டிருப்போம், வேகவைத்துச் சாப்பிட்டிருப்போம். ரெஸ்டாரன்ட்டுகளில் கிடைக்கிற மாதிரி விதம் விதமான சோள உணவுகளை வீட்டிலேயே செய்ய முடியுமா என்ற கேள்வி பலருக்கும் இருக்கும்.

பக்கோடா முதல் கபாப் வரை வீட்டிலேயே விதம்விதமாகச் சமைத்து அசத்தலாம். இந்த வார வீக் எண்டை கார்ன் ஸ்பெஷலாக்குங்களேன்...

பேபி கார்ன் மசாலா பக்கோடா

தேவையானவை:

பேபி கார்ன் (வட்டமாக நறுக்கியது) - 2 கப்

பச்சை வேர்க்கடலை - அரை கப்

வேகவைத்து, உதிர்த்த சோள முத்துகள் - கால் கப்

கடலை மாவு - ஒரு கப்

அரிசி மாவு - அரை கப்

வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - கால் கப்

பச்சை மிளகாய் விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்

மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

இஞ்சித் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்

கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை (அலசி ஆய்ந்தது) - சிறிதளவு

எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

கொடுக்கப்பட்டுள்ள பொருள்களில் எண்ணெய் தவிர மற்றவற்றை வாய் அகன்ற பவுலில் போட்டு தண்ணீர் தெளித்துப் பிசைந்துகொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கி, மாவை உதிரி உதிரியாகப் போட்டு பக்கோடாக்களாகப் பொரித்தெடுக்கவும். வித்தியாசமான சுவையில் கார்ன் பக்கோடா தயார். சூடாகச் சாப்பிடவும்.

பேபி கார்ன் சில்லி 65

தேவையானவை:

பேபி கார்ன் - 10

மைதா மாவு - 4 டேபிள்ஸ்பூன்

சோள மாவு - 2 டேபிள்ஸ்பூன்

இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்

மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

காஷ்மீரி மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

எலுமிச்சைப்பழம் - அரை மூடி

சோம்புத்தூள் - அரை டீஸ்பூன்

பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)

எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப

தாளிக்க:

கறிவேப்பிலை (அலசி ஆய்ந்தது) - 2 டேபிள்ஸ்பூன்

பச்சை மிளகாய் - ஒன்று (நீளவாக்கில் கீறவும்)

பேபி கார்ன் சில்லி 65

செய்முறை:

வாய் அகன்ற பாத்திரத்தில் மைதா, சோள மாவு, உப்பு, இஞ்சி - பூண்டு விழுது, இரு வகை மிளகாய்த்தூள்கள், சோம்புத்தூள் சேர்த்து எலுமிச்சைச்சாறு பிழிந்து தண்ணீர்விட்டு பஜ்ஜி மாவு பதத்துக்குக் கரைத்துக்கொள்ளவும். பேபி கார்னை மாவில் முக்கியெடுத்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். சாப்பிடும் தட்டுக்கு மாற்றவும்.

சிறிய வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் தாளித்து பொரித்துவைத்துள்ள பஜ்ஜியின் மேல் போட்டு நறுக்கிய வெங்காயம் தூவிப் பரிமாறவும். சுவையான கார்ன் சில்லி 65 ரெடி.

கிரிஸ்பி கார்ன் ஃப்ரை

தேவையானவை:

வேகவைத்து, உதிர்த்த சோள முத்துகள் - 2 கப்

கொத்தமல்லித்தழை விழுது - 2 டேபிள்ஸ்பூன்

புதினா தழை விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்

ஓமம் - ஒரு டீஸ்பூன்

மைதா மாவு - 4 டேபிள்ஸ்பூன்

ரவை - ஒரு டேபிள்ஸ்பூன்

சோள மாவு - 2 டேபிள்ஸ்பூன்

கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்

சாட் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்

கிரீன் சில்லி சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்

ஓட்ஸ் பொடி - ஒரு டேபிள்ஸ்பூன்

எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப

மேலே தூவ:

சாட் மசாலாத்தூள், நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு.

கிரிஸ்பி கார்ன் ஃப்ரை

செய்முறை:

கொடுக்கப்பட்டுள்ள பொருள்கள் அனைத்தையும் (எண்ணெய் தவிர) வாய் அகன்ற பவுலில் போட்டு சிறிதளவு நீர் தெளித்துப் பிசைந்து மூடி 10 நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்கவும். மாவை சூடான எண்ணெயில் உதிர்த்துப்போட்டுப் பொரித்தெடுத்து, சாட் மசாலாத்தூள், நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

கார்ன் கபாப்

தேவையானவை:

வேகவைத்து, உதிர்த்த அமெரிக்கன் ஸ்வீட் கார்ன் முத்துகள் - ஒரு கப்

துருவிய காலிஃப்ளவர் - ஒரு கப்

வேர்க்கடலைப்பொடி - 2 டேபிள்ஸ்பூன்

முந்திரிப்பருப்பு - 6

புதினா தழை (அலசி ஆய்ந்தது) - 2 டேபிள்ஸ்பூன்

வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - கால் கப்

கொத்தமல்லித்தழை (அலசி ஆய்ந்தது) - 2 டேபிள்ஸ்பூன்

கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்

ரஸ்க் தூள் - 2 டேபிள்ஸ்பூன்

பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்)

ரெட் சில்லி சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்

எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப

கார்ன் கபாப்

செய்முறை:

வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் வெங்காயம், காலிஃப்ளவர் சேர்த்து வதக்கவும். இதனுடன் பச்சை மிளகாய், உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்து, கார்ன் போட்டு, புதினா, ரெட் சில்லி சாஸ் சேர்த்து வேர்க்கடலைப்பொடி தூவிப் புரட்டி கொத்தமல்லித்தழை தூவி அடுப்பிலிருந்து இறக்கவும். சிறு உருண்டைகளாகப் பிடித்து வடை போல தட்டி, விருப்ப வடிவ பிஸ்கட் கட்டரால் அழுத்தி எடுத்து ரஸ்க் தூளில் புரட்டி எடுக்கவும். எல்லாவற்றையும் இதே மாதிரி செய்து ஃப்ரிட்ஜில் 10 நிமிடங்கள் வைத்து எடுக்கவும். ஒரு பானில் (Pan) கொஞ்சம் எண்ணெய்விட்டு சூடாக்கி, இந்த கார்ன் கபாபை அதில் போட்டு இருபுறமும் வேகவிட்டுப் பொன்னிறமானதும் எடுத்து, அதன் ஒவ்வொன்றின் மேலும் முந்திரிப்பருப்பு வைத்து அலங்கரித்து சாஸ் உடன் பரிமாறவும்.



source https://www.vikatan.com/food/recipes/week-end-special-corn-recipes

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக