Ad

சனி, 4 மார்ச், 2023

நெல்லை: செயின் பறிப்பு; ``ஏலே... பித்தளைனு கத்தினேன்!” - மூதாட்டியின் எதார்த்த பேச்சு வைரல்

நெல்லை அருகேயுள்ள கிராமம் அருகன்குளம். நகரின் அருகில் இருக்கும்போதிலும் அந்தப் பகுதியானது கிராமத்துச் சூழலுடன் காணப்படும். பெரும்பாலான மக்கள் விவசாயம், மாடு வளர்ப்பு ஆகியவற்றையே வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், அந்த கிராமத்தின் மூதாட்டி ஒருவர் பேசும் வீடியோ வைரலாகப் பரவி வருகிறது.

சம்பவத்தை விவரிக்கும் மூதாட்டி

அருகன்குளம் கிராமத்தைச் சேர்ந்த கணபதி என்ற 80 வயது மூதாட்டி, நேற்று தனது வீட்டுக்கு அருகிலுள்ள சாலையில் சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது அந்த வழியாக ஹெல்மெட் அணிந்தபடி பைக்கில் வந்த இளைஞர், பைக்கை நிறுத்திவிட்டு கணபதி பாட்டியை நோக்கி வந்திருக்கிறார். அட்ரஸ் தெரியாமல் கேட்க வருகிறானோ என பாட்டி நினைத்திருந்த நிலையில், வந்த இளைஞரோ கண்ணிமைக்கு நேரத்தில் பாட்டி கழுத்தில் கிடந்த நகையைப் பறித்திருக்கிறார்.

பாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் திரண்டு வந்திருக்கிறார்கள். அதற்குள்ளாக அந்த இளைஞர் நகையை வீசிவிட்டு பைக்கில் ஏறித் தப்பிச் சென்றுவிட்டார். நடந்த சம்பவத்தை கணபதி பாட்டி அங்கிருந்த மக்களிடம் நடித்துக் காட்டி விளக்கியிருக்கிறார். அதை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து, வெளியிட்டிருக்கின்றனர். அது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

கணபதி மூதாட்டி

அந்த வீடியோவில் நடித்துக் காட்டும் கணபதி பாட்டி, “நான் நடந்து வரும்போது பைக்கில் வந்தவன் நிறுத்திவிட்டு என்னைப் பார்க்க நடந்து வந்தான். வந்தவன், படக்குன்னு என் கழுத்தில் கிடந்த நகையை பறிச்சுட்டான். நான் ‘ஏலே.. பித்தளை, ஏலே.. பித்தனை’னு சொல்லியும் கேட்காமல் பறிச்சுட்டான். அதற்குள் மக்கள் வந்துவிட்டதால் வீசிவிட்டுப் போய்விட்டான்” என்று பேசுகிறார். நடந்த சம்பவத்தை கணபதி பாட்டி எதார்த்தமாக விவரிக்கும் வீடியோ வைரலாகப் பரவுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்தப் பகுதிகளிலுள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் குற்றவாளியை அடையாளம்காண போலீஸார் முயன்று வருகிறார்கள்.



source https://www.vikatan.com/trending-new/80-year-old-lady-speaks-about-chain-snatching-incident-goes-viral

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக