Doctor Vikatan: குழந்தைக்கு காய்ச்சல் வந்தால் உடலைப் போர்த்தி வைப்பது சரியா? குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் காய்ச்சல் வந்த உடனே என்ன செய்ய வேண்டும்?
பதில் சொல்கிறார் வேலூரைச் சேர்ந்த குழந்தைகள் நலம் மற்றும் பொது மருத்துவர் கீதா மத்தாய்.
காய்ச்சலில் உள் காய்ச்சல், வெளிக் காய்ச்சல் என எதுவும் கிடையாது. உங்கள் கை என்பது தெர்மாமீட்டர் கிடையாது. கையால் கழுத்தில், நெற்றியில், வயிற்றில் வைத்துப் பார்த்து உடல் சூடாக இருப்பதால் காய்ச்சல் என முடிவுக்கு வருவது தவறு.
காய்ச்சல் இருப்பதை உறுதிப்படுத்த தெர்மாமீட்டர்தான் பயன்படுத்த வேண்டும். இப்போது நிறைய வகை தெர்மா மீட்டர்கள் கிடைக்கின்றன. அதை வைத்துதான் காய்ச்சலை உறுதிசெய்ய வேண்டும். உடல் வெப்பநிலை 100.4 டிகிரிக்கு மேல் இருப்பதுதான் காய்ச்சலாகக் கருதப்படும். இது குழந்தைகள், பெரியவர்கள் என எல்லோருக்கும் பொருந்தும்.
மற்றபடி வெளியில் உடல் சூடாக இருப்பதாக உணர்வதெல்லாம் காய்ச்சலில் அடங்காது. வெளியில் வெப்பநிலை குளிர்ச்சியாக இருந்தால் உடல் சூடாக இருப்பது போலத் தோன்றும். அதுவே வெளியில் சூடாக இருந்தால் உடல் குளிர்ச்சியாகத் தெரியலாம். எனவே அதையெல்லாம் காய்ச்சல் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம்.
குழந்தைக்குக் காய்ச்சல் வந்தால் கம்பளியில் சுற்றி வைக்கக்கூடாது. முதல் வேலையாக உடைகளை அகற்றிவிட்டு தண்ணீரில் நனைத்துப் பிழிந்த டவலால் உடலைத் துடைத்துவிட்டால் உடனே காய்ச்சல் குறையும்.
பெரியவர்களுக்கு வியர்வை வந்தாலே காய்ச்சல் குறையும். வியர்க்க அனுமதிக்கும்படி உடைகளைத் தளர்த்தி, அது ஆவியாக இடம்தர வேண்டும். குழந்தைகளுக்கு உடலைப் போர்த்திவைத்தால் காய்ச்சல் ஏறி, ஏறி இறங்கும். அதனால் அப்படிச் செய்யக்கூடாது.
மூன்று நாள்களுக்கு மேலும் காய்ச்சல் தொடர்ந்தால் மருத்துவரிடம் செல்ல வேண்டும். சுய மருத்துவம் செய்யாதீர்கள். காய்ச்சலுடன் மூச்சுத்திணறல், வாந்தி, பேதி இருந்தால் மூன்று நாள்கள் வரை காத்திருக்க வேண்டாம். உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
source https://www.vikatan.com/health/healthy/doctor-vikatan-child-has-fever-what-should-be-done-immediately
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக