Ad

சனி, 7 ஜனவரி, 2023

வேலை நிறுத்தப் போராட்ட அறிவிப்பு; மின் துறை ஊழியர்களின் எதிர்பார்ப்பு என்ன?!

மின்வாரிய கூட்டு நடவடிக்கை குழு சார்பில் அரசுக்கு அளித்திருக்கும் கடிதத்தில், "மாநில உரிமையையும், மின்நுகர்வோர்களையும், ஊழியர்களையும் பாதிக்கும் மின்சார சட்டதிருத்த மசோதா 2022-ஐ திரும்பப் பெற வேண்டும். 1.12.2019 முதலான ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்கிட வேண்டும். உற்பத்தி மற்றும் விநியோகம் சார்ந்த பணிகளை அவுட் சோர்சிங் முறையில் தனியார் பெரு முதலாளிகளிடம் விடக்கூடாது.

ஓய்வுபெற்ற ஊழியர்களை மீண்டும் பணியில் ஈடுபடுத்தும் முறையை கைவிட வேண்டும். பதவி உயர்வு, இடமாறுதல் போன்றவற்றில் அரசியல் தலையீடு காரணத்தால் ஊழியர்கள் பொறியாளர்கள், அலுவலர்கள் பாதிக்கப்படுகிறார்கள். நேர்மையாக வெளிப்படை தன்மையோடு வாரிய விதிகளின்படி உத்தரவுகள் வழங்கிட வேண்டும்.

வேலை நிறுத்த அறிவிப்பு

அரசாணை 100-ன்படி மின்வாரிய பணியாளர்கள், ஓய்வூதியர்கள் ஆகியோருக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் ஏற்றுக் கொள்ளக்கூடிய முத்தரப்பு ஒப்பந்தம் காண வேண்டும். 1.7.2022 முதல் மத்திய அரசு அறிவித்திருக்கும் பஞ்சப்படி 48 உயர்வை வழங்கிட வேண்டும். ஒப்பந்த முறையை அகற்றி ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் காண வேண்டும்.

மேலும் அவர்களுக்கு வாரியமே முத்தரப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ரூ.380 தினக் கூலியை நேரிடையாக வழங்கிட வேண்டும். ஆரம்ப கட்ட பதவிகளான களஉதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர், கணக்கீட்டாளர், இளநிலை உதவியாளர், உதவிப்பொறியாளர் உள்ளிட்ட பதவிகள் 58,000-க்கு மேல் காலியாக இருக்கின்றன.

இந்த நிலையில் கூடுதல் பணிச்சுமையை தற்போதுள்ள ஊழியர்கள், பொறியாளர்கள் சுமந்து கொண்டு தடையில்லா மின் விநியோகத்தை வழங்கி வருகின்றனர். எனவே காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். 1.4.2003-க்குப் பிறகு பணியில் சேர்ந்த அனைத்து பணியாளர்களுக்கும் பழைய முறையில் பென்ஷன் வழங்கி சமூக பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்.

கேங்மேன் பணியாளர்களுக்கு நியாயமான சலுகைகள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 10-ம் தேதி காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை போராட்டம் நடைபெறும்" எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஊதிய உயர்வு பேச்சுவார்த்தைக்கு நியமிக்கப்பட்டிருக்கும் அதிகாரிகள்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய மின்வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கத்தின் பொதுச்செயலாளர் மு.சுப்பிரமணி, "கடந்த 3 ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. காலிப்பணியிடங்களை நிரப்ப தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம்.

ஆனால் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் எங்களுக்கு கடுமையான மனஅழுத்தம் ஏற்பட்டிருக்கிறது. எனவே வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தோம். இதையடுத்து மின்வாரியம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. ஆனால், எங்களிடம் அரசு சார்பில் அதிகாரிகள் அனுப்பப்படுவதால் கால தாமதம் ஏற்படுகிறது.

சுப்பிரமணி

மின்வாரியம் தொடங்கப்பட்டது முதல் இங்கிருக்கும் அதிகாரிகள்தான் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். எனவே எதற்காக புதிய நடைமுறையை கொண்டுவருகிறீர்கள் என ஆட்சபனை தெரிவித்தோம். பின்னர் பேச்சுவார்த்தையை தள்ளிவைத்தார்கள். ஆனால் 5-ம் தேதி மாலை அரசின் நிதித்துறையிலிருந்து பேச்சுவார்த்தைக்கு வருகிறார்கள் என்று கூறி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் 9-ம் தேதி அந்தப் பேச்சுவார்த்தை நடக்கிறது. இருப்பினும் திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறும். இதனால் களப்பணி மேற்கொள்வதில் பாதிப்பு ஏற்படும்" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/tamilnadu-eb-workers-have-announced-a-strike-what-are-their-expectations

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக