Doctor Vikatan: எனக்கு தலை மற்றும் உடல் முழுவதும் மிகவும் அரிக்கிறது. சொரிந்தால் கட்டிக்கட்டியாக வருகிறது. இதற்கு என்ன செய்ய வேண்டும்?
-விகடன் வாசகர், இணையத்திலிருந்து.
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா
உங்களுடைய கேள்வி மேலோட்டமாக இருக்கிறது. நீங்கள் குறிப்பிட்டுள்ள அரிப்பு எப்போதெல்லாம் வருகிறது, திடீரென தூண்டப்படுகிறதா, தொடர்ச்சியாக அரிப்பு இருக்கிறதா அல்லது அவ்வப்போது அரிப்பு வந்து சொரிந்ததும் கட்டியாக மாறுகிறதா என்ற தகவல்கள் தெரிய வேண்டும்.
கூடவே, இரவு நேரங்களில் அரிப்பு அதிகமிருக்கிறதா, கை இடுக்குகளில் அரிப்பு இருக்கிறதா, அந்தரங்க உறுப்பில் அரிக்கிறதா, உடல் முழுவதும் அரிக்கிறதா... இப்படிப் பல கேள்விகளுக்கு பதில் தெரிந்தால்தான் சரியான சிகிச்சையைப் பரிந்துரைக்க முடியும்.
அரிப்புக்கான பொதுவான காரணங்களைச் சொல்கிறேன். அவற்றில் முதலிடம் சரும வறட்சிக்கு. சருமம் அதீதமாக வறண்டுபோகும் நிலையில் அந்தப் பகுதியில் அரிப்பு அதிகமிருக்கும். சொரியும்போது புண்ணாகி, அந்த இடமே கருமையாக மாற வாய்ப்புகள் அதிகம்.
அடுத்து 'அர்டிகேரியா' என்றொரு ஒவ்வாமை பிரச்னை காரணமாகவும் அரிப்பு இருக்கலாம். அதாவது உணவில் குறிப்பிட்ட ஏதேனும் ஒன்று ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். உதாரணத்துக்கு மீன், உணவுகளில் சேர்க்கப்படும் கெமிக்கல், நிறமிகள் என அது எதுவாகவும் இருக்கலாம். அந்த உணவுகளைச் சாப்பிடும்போதெல்லாம் ஒவ்வாமை தூண்டப்பட்டு, அர்டிகேரியா பாதிப்பு தீவிரமாகி, அரிப்பும் அதிகமாகலாம்.
குழந்தைகளுக்கு சிரங்கு வரும். அப்படி வந்தால் அது வீட்டிலுள்ள வயதானவர்கள்வரை அனைவரையும் பாதிக்கும். இது குறிப்பாக விரல் இடுக்கு, அக்குள், சிறுநீர் கழிக்கும் இடம், தொப்புளைச் சுற்றி... இப்படியான இடங்களில் அரிப்பை ஏற்படுத்தலாம்.
நீரிழிவு அதிகமானாலோ, உப்பு குறைந்தாலோ, சிறுநீரகச் செயல்பாடு பாதிக்கப்பட்டாலோ கூட உடலில் அரிப்பு இருக்கலாம். எனவே எந்தக் காரணத்தினால் அரிப்பு வந்தது என்பதைக் கண்டுபிடிக்க இத்தனை தகவல்கள் தேவை.
அதனால் நீங்கள் முதலில் சரும மருத்துவரை அணுகி அரிப்புக்கான காரணம் தெரிந்து, அவர் பரிந்துரைக்கும் சிகிச்சைகளை மேற்கொள்ளுங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
source https://www.vikatan.com/health/healthy/doctor-vikatan-head-whole-body-itching-can-it-be-cured
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக