Ad

திங்கள், 9 ஜனவரி, 2023

தொடரும் இருமல் மருந்து சர்ச்சை - என்ன காரணம்... மருத்துவர் சொல்வதென்ன?

உஸ்பெகிஸ்தான் நாட்டில், கடந்த டிசம்பர் 29 அன்று 18 குழந்தைகள் இறந்ததற்கு காரணம், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் சிரப் தான் என்று கூறப்பட்டது. அதேபோல் சில மாதங்களுக்கு முன்பு, ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 60-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் மரணத்தை ஏற்படுத்தியதற்காக, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 4 இருமல் மருந்துகள் விமர்சனத்திற்கு உள்ளாகின. அக்டோபர் மாதத்திலும் இந்தோனேசியாவில் 130-க்கும் மேற்பட்டவர்கள், பெரும்பாலும் குழந்தைகள், இருமல் மருந்துடன் தொடர்புடைய சிறுநீரகச் செயலிழப்பால் இறந்தனர். அதன் பிறகு அந்நாட்டில் இருமல் சிரப்புகள் முற்றிலும் தடைசெய்யப்பட்டன.

இவை அனைத்தும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அல்லது இந்தியாவில் இருந்து வரும் மூலப்பொருள்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டவை.

சிரப்

இது குறித்து, நுரையீரல் மருத்துவர் பென்குர் ரிலிடம் பேசினோம்... ``பொதுவாக அனைத்து இடங்களில் இருமல் சிரப் ஒன்றாக, அதாவது விதிமுறைகளைப் பின்பற்றியே தயாரிக்கப்படும். ஆனால் எந்த மருந்தை, எந்த மாதிரியான இருமலுக்குப் பயன்படுத்த வேண்டும் என்று தெரியாமல் பயன்படுத்துவது, இருமல் மருந்து ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு அனுப்பப்படும்போது ஏற்படும் கவனக்குறைவு, காலாவதியான மருந்தைப் பயன்படுத்துதல் போன்றவை, இத்தகைய சம்பவங்களுக்கு காரணமாக இருக்கலாம்" என்றார்.

``இருமல் சிரப்புகளை முற்றிலும் தடை செய்வது என்பது கடினம். ஏனெனில், இது சிறுவர்களுக்கு பெரிதும் உதவக்கூடிய ஒன்று. எனினும் இதுபோன்ற பாதிப்புகளைத் தடுக்க வேண்டும் என்றால், சரியான முறையில் பரிசோதனை செய்து தயாரிக்க வேண்டும். மேலும், மருத்துவர் பரிந்துரை செய்த பிறகே அந்த சிரப்பை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும்” என்றார்.

இருமல் மருந்து

இருமல் சிரப்பில் அப்படி என்னதான் இருக்கிறது?

இருமல் சிரப் என்பது, பயன்படுத்துவோருக்கு இருமல் வராமல் கட்டுப்படுத்துமே, தவிர நோயை குணப்படுத்துவது கிடையாது. இருமல் சிரப் என்பது `சளி நீக்கி’ (எக்ஸ்பெக்டோரன்ட்) மற்றும் `சளி அடக்கி’ (சப்ரசென்ட்) என இரண்டு வகைப்படும். இதை மாற்றி உட்கொண்டால், பின்விளைவுகள் ஏற்படும்.

இருமல் என்பது, நம் உடலுக்குள் சென்ற கிருமிகளை வெளியேற்றம் செய்யும் ஒரு செயல்பாடு. எந்தவகையன இருமலுக்கு எந்த சிரப்பை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை அறியாமல் உட்கொள்ளும்போது ஆபத்து ஏற்படும்.

பெரும்பாலான குழந்தைகளுக்கு மாத்திரை கொடுப்பது என்பது கடினமான விஷயம். அதற்காக, இருமல் சிரப் பயன்படுத்தப்படுகிறது. ஏற்கெனவே நுரையீரலில் நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, இருமல் சிரப் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. இருமல் சிரப் சில நேரங்களில், அதைப் பயன்படுத்துவோரை அடிமையாக்கும்.

வறட்டு இருமல்

தூக்கத்தில் இருமல் வராதா?

இருமலில் இருவகை உண்டு. ஒன்று நாமாக இருமுவது, மற்றொன்று நம்மை அறியாமல் உடல்நிலையால் ஏற்படுவது‌. உடல்நிலை பாதிப்பால் வரும் இருமலானது, தூங்கும்போதும் ஏற்படும். தூக்கத்தில் ஏற்படும் இருமல், சில நேரங்களில் நமது தூக்கத்தை பாதிக்கும் அளவிற்கு கடுமையாக இருக்கும்.

பொதுவாக, மருத்துவர்கள் நோயாளியின் உடல்நிலையைப் பரிசோதித்த பிறகே, உரிய இருமல் சிரப்பை பரிந்துரை செய்வார்கள். மருத்துவரின் பரிந்துரையுடன் மட்டுமே இருமல் சிரப் எடுத்துக் கொள்ள வேண்டும். மருத்துவர் ஒருமுறை பரிந்துரை செய்த இருமல் சிரப்பையே, பல மாதங்கள் அல்லது வருடங்களுக்கு நாமாக சுயமாக வாங்கிப் பயன்படுத்தக் கூடாது. இருமல் அறிகுறிகள் தென்பட்டால், மருத்துவரை அணுகி உரிய ஆலோசனை பெற்று, அவரது பரிந்துரையின் பேரில் இருமல் மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.



source https://www.vikatan.com/news/healthy/controversy-over-indian-cough-medicines

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக