கேரள மாநிலம் எர்ணாகுளம் திருக்காக்கரை பகுதியைச் சேர்ந்த ஒருவர் வேலை வாங்கிதருவதாக பணம் மோசடி செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். பணம் மோசடியில் கைதானவரை விடுவிக்க உதவுவதாக அவரின் மனைவியிடம் கூறியிருக்கிறார் கோழிக்கோடு கோஸ்டல் இன்ஸ்பெக்டர் பி.ஆர்.சுனு. பின்னர் அந்த பெண்ணின் வீட்டில் வைத்தும், கடவந்தறா பகுதியில் வைத்தும் கடந்த ஆண்டு மே மாதம் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் இன்ஸ்பெக்டர் பி.ஆர்.சுனு. இதுபற்றி கொச்சி துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த நவம்பர் மாதம் புகார் அளித்தார் அந்த பெண். விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என இன்ஸ்பெக்டருக்கு திருக்காக்கரை போலீஸார் சம்மன் அனுப்பினர். விசாரணைக்கு அஜராகாததால் கடந்த நவம்பர் 13-ம் தேதி கோழிக்கோடு கோஸ்டல் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று அங்கு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் பி.ஆர்.சுனுவை திருக்காக்கரை போலீஸார் கைது செய்தனர்.
கொச்சி மரட் பகுதியைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் சுனு, 2021 பிப்ரவரியில் முளவுக்காடு போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிந்த சமயத்தில், புகார் அளிக்க வந்த பட்டதாரி பெண்ணை வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்படிருந்தார். அந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தவருக்கு தண்டனை பணியாக கோழிக்கோடு கோஸ்டல் காவல் நிலையத்தில் பணி வழங்கப்பட்டிருந்த நிலையில் மற்றொரு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் கிரிமினல் வழக்குகளில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகளை பணியில் இருந்து விடுவிக்க கேரள அரசு முடிவு செய்து பட்டியல் தயாரித்தது. அதில் முதல் பெயராக இன்ஸ்பெக்டர் பி.ஆர்.சுனு-வின் பெயர் இருந்தது. தொடர்ச்சியாக குற்றச்செயலில் ஈடுபடுபவர் போலீஸ் சேனையில் இருக்க தகுதியானவர் அல்ல எனக்கூறி பி.ஆர்.சுனுவை பணியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார் கேரள டி.ஜி.பி அனில் காந்த். போலீஸ் ஆக்ட் பிரிவு 86 படி அவரை நீக்கியதாக கூறப்படுகிறது.
15 முறை துறை ரீதியான நடவடிக்கைக்கும், 6 முறை சஸ்பெண்டும் செய்யப்பட்டவர் பி.ஆர்.சுனு. போலீஸ் ஆக்ட் படி கேரளாவில் முதன் முதலில் பணியில் இருந்து நீக்கப்பட்ட முதல் போலீஸ் அதிகாரியாவார். பணியில் இருந்து நீக்கப்படுவதற்கு முன்பு இன்ஸ்பெக்டர் பி.ஆர்.சுனுவிடம் விளக்கம் கேட்கப்பட்டதாகவும். அதைத் தொடர்ந்தே அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
source https://www.vikatan.com/government-and-politics/crime/police-inspector-removed-from-police-job-after-continues-complaint
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக