Ad

ஞாயிறு, 8 ஜனவரி, 2023

``தமிழைப் பற்றி தெரியாமல் தமிழ் பற்றி கூறுவது அரைவேக்காட்டுத்தனம்" - பிரேமலதா விஜயகாந்த் காட்டம்

ராஜபாளையம் ஜவஹர் மைதானத்தில் தே.மு.தி.க.சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், தே.மு.தி.க. மாநிலப் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சிறப்புவிருந்தினராக கலந்துக்கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், "பெண்கள் என்றால் இளக்காரமானவர்கள் அல்ல. காலஞ்சென்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்த நேரத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், ஏன் அவரை பார்த்து ராட்சசி என்று சொல்லவில்லை. அவரின் மறைவுக்கு பின் அவர்மீது பழி சொல்லக்கூடாது. பெண் முதல்வரை யாரேனும் பழி சொன்னால் ஒட்டுமொத்த தமிழக பெண்களையும் திரட்டி நானே முன் நின்று போராட்டம் நடத்துவேன். இறந்தவரை பழி சொன்ன கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் செத்த பாம்பை மிதித்துள்ளார்.

கூட்டம்

தி.மு.க. என்பது ஒருவழிப்பாதை ட்ராஃபிக் மாதிரி. வாங்க மட்டும் செய்வார்கள் மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. நாளொன்றுக்கு பல லட்சம் கோடி ரூபாய் லஞ்சம், ஊழல் நடக்கிறது. மணல் குவாரி, டாஸ்மாக் கடைகள், அதிகாரிகள் நியமனம், சாலை அமைப்பதன் மூலம் என ஊழல்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

கடந்த ஆண்டு அ.தி.மு.க.ஆட்சியில் பொங்கல் பரிசு தொகையாக ரூ.2,500 கொடுத்தபோது இது போதாது, ஐந்தாயிரம் ரூபாய் பொங்கல் பரிசாக கொடுக்க வேண்டும் என தி.மு.க கூறியது. ஆனால், இப்போது தி.மு.க. ஆட்சி நடக்கிற நேரத்தில் பொங்கல் பரிசாக ஏன் 5,000 ரூபாய் கொடுக்கவில்லை. குறைந்தப்பட்சம் அ.தி.மு.க. வழங்கிய 2,500 ரூபாயைக்கூட வழங்காமல் மக்களை ஏமாற்றி விட்டனர். தற்போது உள்ள விலைவாசி உயர்வு காரணமாக அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகை மக்களுக்கு போதாது.

பிரேமலதா விஜயகாந்த்

தி.மு.க.தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன் ஆட்சிக்கு வந்ததற்கு பின் என இரட்டை நிலைப்பாட்டில் உள்ளது. இதுதான் திராவிட மாடலா?.

ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்துள்ள ஆளுநருக்கு தமிழ் பற்றி என்ன தெரியும். தமிழைப் பற்றி தெரியாமல் தமிழை பற்றி கூறுவது அரைவேக்காட்டுத்தனம். இதைக்கூற ஆளுநருக்கு யார் அதிகாரம் கொடுத்தது. ஒட்டுமொத்த தமிழ்நாடு சார்பில் இந்த பொதுக்கூட்டம் வாயிலாக ஆளுநரை கண்டிக்கிறோம்.

மணல்குவாரி டெண்டர் விடுவதற்கு தே.மு.தி.க. சார்பில் கண்டனம் தெரிவிக்கிறோம். கடந்த ஆட்சியில் மணல் குவாரியை டெண்டர் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க., தற்போது அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மணல் குவாரிகளை டெண்டர் விடுகிறது. இந்த மணல்குவாரிகளை மக்கள் அனுமதிக்க கூடாது. வட மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வேலைக்கு வந்துள்ளவர்கள் குறித்து முதலில் தமிழக அரசு கணக்கு எடுக்கட்டும். தமிழக மக்களுக்கான அடையாள அட்டை இருக்க வேண்டுமானால் மக்களிடம் கருத்துக்கேட்டு கூட்டம் நடத்த வேண்டும்.

உதவிகள்

சென்னையில் செவிலியர்கள் சார்பில் போராட்டம், ஆசிரியர்கள் சார்பில் போராட்டம், கூட்டுறவு சர்க்கரை ஊழியர்கள் போராட்டம், மாநகராட்சி ஊழியர்கள் போராட்டம் என அனைத்து பக்கங்களிலும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது. செவிலியர்களின் கோரிக்கைகளுக்கு தமிழக அரசு செவி சாய்த்து தற்காலிக பணியில் இருக்கும் அவர்களை நிரந்தரமாக்க வேண்டும். இன்னும் கொரோனா முடியவில்லை. வரும் மார்ச் மாதத்தில் கொரோனா விஸ்வரூபம் எடுக்கும். அந்த சமயம் செவிலியர்களை அழைத்தால் யாரும் பணிக்கு வரமாட்டார்கள்.

தி.மு.க. ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லை. இதை தே.மு.தி.க. சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். ராஜபாளையத்தில் கடந்த ஐந்து வருடங்களாக நடைபெற்று வரும் சத்திரப்பட்டி ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சியை விட அதிகமான சொத்து வரி மற்றும் குடிநீர்வரி வசூல் செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதால் வரி உயர்வை திரும்ப பெற வேண்டும். பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். விருதுநகர் மாவட்டத்தில் அதிகமாக பயிரிடப்படும் மக்காச்சோளத்திற்கு செஸ் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒட்டுமொத்த விவசாயிகளும் கண்டன குரல் கொடுக்க வேண்டும். எதற்கு வரி கட்ட வேண்டும் என ஒவ்வொரு நபரும் கேள்வி கேட்கும் வீரபாண்டிய கட்டபொம்மனாக மாற வேண்டும்" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/premalatha-vijaykanth-condemned-governor-of-tamilnadu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக