சென்னை சென்ட்ரலில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ரயில் நிலையம் உள்ளது. இங்கு தினமும் லட்சக்கணக்கான பயணிகள் வந்துச் செல்வதுண்டு. இந்தநிலையில் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குள் ஒரே நேரத்தில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் புகுந்தனர். அவர்கள் ஒரு மாணவனைக் குறி வைத்து தாக்குதலில் ஈடுபடத் தொடங்கினர். அதனால் அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸார், அந்த மாணவனுக்கு பாதுகாப்பு அளித்தனர். அதனால் ஆத்திரமடைந்த மற்ற மாணவர்கள், திடீரென பீர் பாட்டில்கள், கற்களை தூக்கி ரயில் நிலையத்துக்குள் வீசி எறிந்தனர். அதனால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.
மேலும், அவர்கள் ரயில் நிலையத்துக்குள் அங்கும் இங்கும் ஓடத்தொடங்கினர். அதனால் சில மணி நிமிடங்கள் அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது. இதையடுத்து போலீஸார், தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களைத் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து அவர்களில் 14 பேரை போலீஸார் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர். பிடிப்பட்ட மாணவர்களிடம் விசாரித்தபோது இரண்டு கல்லூரி மாணவர்களுக்குள் நடந்த தகராறே இந்த மோதலுக்கு காரணம் எனத் தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ராயப்பேட்டையில் உள்ள கல்லூரியில் படிக்கும் மாணவன் ஒருவன், அரசு பேருந்தில் சென்ட்ரல் நோக்கி வந்திருக்கிறான். அதே பேருந்தில் கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள இன்னொரு கல்லூரி மாணவர்கள் வந்திருக்கிறார்கள். பேருந்துக்குள் இரண்டு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. தனியாக சிக்கிய மாணவனை இன்னொரு கல்லூரி மாணவர்கள் தாக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அதனால் அவர்களிடமிருந்து தப்பிக்க அந்த மாணவன் தப்பி ஓடி வந்து சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குள் வந்திருக்கிறான். ஆனாலும் இன்னொரு கல்லூரி மாணவர்கள் அந்த மாணவனை விடாமல் விரட்டி வந்திருக்கிறார்கள்.
அவர்களில் சில மாணவர்கள் பீர் பாட்டில்கள், கற்களை ரயில் நிலையத்துக்குள் வீசியிருக்கிறார்கள். அதனால் மெட்டல் டிடெக்கர் உள்ளிட்ட சில பொருள்கள் சேதமடைந்திருக்கின்றன. நல்ல வாய்ப்பாக யாருக்கும் பெரியளவில் காயங்கள் ஏற்படவில்லை. மாணவர்களின் தாக்குதலை உடனடியாக தடுத்து விட்டதால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள கல்லூரியில் படிக்கும் 14 மாணவர்களிடம் விசாரணை நடந்துவருகிறது. சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது" என்றனர்.
source https://www.vikatan.com/news/crime/chennai-central-railway-station-attack-by-college-students-what-happened
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக