திருப்பூர் மாவட்டம், கோடங்கிபாளையத்தில் 2.6 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள கல்குவாரி தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வினித் தலைமையில் மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், கோடங்கிபாளையம் கிராம மக்கள், கல்குவாரி அமைப்பதற்கான ஆதரவாளர்கள் என இரு தரப்பினர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் கோடங்கிபாளையத்தில் வசிக்கும் விவசாயி சிவசுந்தரி பேசுகையில்,'' கல்குவாரி அமையவுள்ள இடத்துக்கு மிக அருகில் வசித்து வருகிறேன். இந்தப் பகுதியில் ஏற்கெனவே 10-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்த குவாரிகளில் வெடி வைத்து தகர்க்கப்படும் பாறைகளில் இருந்து வரும் துகள்கள் வீடு முழுக்க பரவிக் கிடக்கிறது. புல், செடிகளில் பாறைத் துகள்கள் படிவதால் அவற்றை உண்ணும் கால்நடைகளுக்கு அடிக்கடி உடல்நலக் கோளாறு ஏற்படுகிறது. நிலத்தடி நீர் மட்டமும் கீழே சென்றுவிட்டதால் விவசாயம் செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது ''என்றார்.
இதையடுத்து பேசிய கோடங்கிபாளையம் ஊராட்சித் தலைவர் கா.வீ.பழனிசாமி, ''எல்லா திட்டங்களையும் வேண்டாமென்றால் எந்த விதத்தில் வளர்ச்சியை எட்ட முடியும். கல்குவாரி என்றாலே பிரச்னையை ஏற்படுத்தினால், கட்டுமானத் தொழிலை நடத்த முடியாது. கோடங்கிபாளைம் ஊராட்சியின் வளர்ச்சிக்கு கல்குவாரி தேவை ''என்றார்.
இதனால் ஆத்திரமடைந்த கோடங்கிபாளையம் கிராம மக்கள், எங்கள் கிராமத்தின் இயற்கைச் சூழலை கெடுத்துவிட்டு அதனால் வரும் வளர்ச்சி எங்களுக்கு தேவையில்லை. இங்கு கல்குவாரி நடத்தும் அதன் உரிமையாளர்கள் யாரும் அதற்கு அருகில் குடியிருப்பதில்லை. வேறொரு இடத்தில் பங்களா கட்டி வசதியாக வசித்து வருகின்றனர். கோடங்கிபாளையம் கிராமத்துக்கு கல்குவாரி தேவையில்லை.
அதையும் மீறி கல்குவாரிக்கு அனுமதி அளித்தால், கல்குவாரி அருகே அதன் உரிமையாளரும், கோடங்கிபாளையம் ஊராட்சித் தலைவரும் குடும்பத்தோடு குடியேறி மகிழ்ச்சியாக இருக்கட்டும். நாங்கள் அவர்கள் வசிக்கும் வீட்டுக்குச் செல்கிறோம் என்றனர். இருதரப்பு கருத்தையும் கேட்டறிந்த ஆட்சியர் வினித், இதுதொடர்பாக அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
source https://www.vikatan.com/news/agriculture/public-opposition-to-construction-of-quarry-in-kodangipalayam-tirupur-district
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக