Ad

செவ்வாய், 10 ஜனவரி, 2023

ஒன் பை டூ

எஸ்.ஜெயக்குமார், பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர், அ.தி.மு.க

``முட்டாள்தனமான வாதம். எங்களின் கட்டமைப்பு, தொண்டர் பலம், நிர்வாகிகள் ஒற்றுமையால் பயந்துகிடக்கும் தி.மு.க-வினர் இப்படி உளறுவது புதிதல்ல. தி.மு.க-வினரின் கவனம் முழுக்க பாலில்தான் இருக்கிறதுபோல. அநியாய விலை ஏற்றம் செய்து, அதில் கொள்ளை லாபம் அடிப்பதோடு மட்டுமல்லாமல் கோடி கோடியாக ஊழல் செய்கிறார்கள். அதனால்தான் இவரும் அதே யோசனையில் பேசுகிறார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான எங்கள் அ.தி.மு.க., அசுர பலத்தோடு இருக்கிறது. அ.தி.மு.க என்ற எஃகு கோட்டையின் வெளியிலிருந்து ஓரிருவர் எறியும் கற்களால் இந்தக் கோட்டையை அசைத்துவிட முடியாது. ஆட்சி அதிகாரத்தில் அத்தனை நிர்வாக, நிதிக் குளறுபடிகள், அமைச்சர்களுக்குள் ஈகோ யுத்தம்... இவற்றில் எதையுமே தலைமையால் கட்டுப்படுத்த முடியாத தத்தளிப்பு நிலையில் இருக்கிறது தி.மு.க. போதாததற்கு அந்தக் கட்சியின் தலைவரே, கட்சிக்காரர்கள் ஆட்சிக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்தப்போகிறார்களோ என்கிற அச்சத்தில் இருப்பதாக மேடையிலே சொல்லியிருக்கிறார். இந்த லட்சணத்தில் இவர் எங்களை விமர்சிப்பது அவல நகைச்சுவை. நாங்கள் இனி பெறப்போகும் வெற்றிகளைப் பார்த்து இன்னமும் அதிகமாக உளறுவார்கள்.’’

எஸ்.ஜெயக்குமார், எம்.பூமிநாதன்

எம்.பூமிநாதன், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர், ம.தி.மு.க

``உண்மையைத் தனது பாணியில் சொல்லியிருக்கிறார் அமைச்சர். ஒன்றரைக் கோடித் தொண்டர்களுடன் தமிழ்நாட்டின் பெரிய கட்சி என்று சொல்லிக்கொண்டிருந்தவர்கள் இன்று நான்கு துண்டுகளாக உடைந்து, சிதறிக் கிடக்கிறார்கள். தலைமைப் போட்டி, தனிநபரின் துதி பாடல்கள் என ஆளுக்கொரு பக்கம் கட்சியைச் சின்னா பின்னமாக்கி வைத்திருக்கிறார்கள். சட்டமன்றத்தில், ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படவேண்டியவர்கள், ஒருவர்மீது ஒருவர் வழக்கு தொடுத்து, ஒவ்வொரு நீதிமன்றமாக அலைகிறார்கள். தங்களை நம்பி வாக்களித்த தொகுதி மக்களின் நன்மைக்காகச் சட்டமன்றத்தில் குரல் கொடுக்காமல், பதவிக்காகச் சட்டமன்றத்தைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்கிறார்கள். வீட்டுக்குள் பாதுகாப்பாக இருந்துகொண்டு, தி.மு.க ஆட்சியின்மீதான பொய்யான குற்றச்சாட்டுகளை அறிக்கையாக வெளியிடுகிறார்கள். தலையில்லாதஅ.தி.மு.க-வின் லட்சணம் மக்களுக்குத் தெரிந்துவிட்டது. இந்த முறை எதிர்க்கட்சியாகிவிட்டனர். அடுத்த முறை அதற்கும் வழியில்லை. கெட்டுப்போன பாலால் எப்படி எந்தப் பயனும் இல்லையோ, அதேபோலத்தான் அ.தி.மு.க-வால் இனி தமிழ்நாட்டு மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை.’’



source https://www.vikatan.com/government-and-politics/politics/discussion-about-minister-mano-thangaraj-comment-about-admk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக