புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற.
`ஒப்புரவு என்பது பிறருக்கு உதவிடும் பண்பு. இந்தப் பண்பு இந்த உலகத்திலும் சரி, வேறு உலகத்திலும் சரி... ஒருவருக்கு வாய்ப்பதென்பது கடினமான ஒன்று’ என்கிறார் வள்ளுவப் பெருமான்.
ஒருமுறை திருநெல்வேலி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார் காமராஜர். தமிழ்நாட்டின் முதலமைச்சராக அவர் இருந்த காலகட்டம் அது. சிவகிரியில் இருந்த பயணியர் விடுதியில் தங்கியிருந்தார்.
அதிகாலை. கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தார் காமராஜர். வாசலில் ஏதோ சத்தம். என்னவென்று பார்த்தார். வாசலில் நின்றுகொண்டிருந்த காவலர், எளிய தோற்றத்திலிருந்த ஒருவரைப் பார்த்து சத்தம் போட்டுக்கொண்டிருந்தார். ``முதல்ல கெளம்புங்கய்யா. பொழுதே விடியலை. அதுக்குள்ள தொந்தரவு கொடுக்க வந்துட்டீங்க. ஐயா இன்னும் எந்திரிக்கவே இல்லை. அப்புறமா வாங்க... கெளம்புங்க...’’
``ஐயா... தயவு பண்ணுங்க. நான் எந்தத் தொந்தரவும் கொடுக்க மாட்டேன். இங்ஙனக்குள்ள ஒரு ஓரமா இருந்துக்குடுதேன். தலைவரு வரும்போது...’’ வந்தவர் இரைஞ்சும் குரலில் கேட்டுக்கொண்டிருந்தார்.
காவலர் இடைமறித்தார். ``அதெல்லாம் முடியாது. தேவையில்லாம பிரச்னை பண்ணாதீங்க. முதல்ல கெளம்புங்க...’’
காமராஜர் அந்த மனிதரைப் பார்த்தார். ஏதோ நினைவுக்கு வர, அவர் முகம் மலர்ந்தது. வாசலை நோக்கிப் போனார். ``இந்தாப்பா... அவரை ஏன் வெரட்டுதே... விடப்பா அவரை...’’ என்ற காமராஜரின் குரலைக் கேட்டு போலீஸ்காரர் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார்.
அவர்களருகே வந்த காமராஜர், வந்தவரைப் பார்த்து சிரித்தார். ``என்ன வேலு நல்லா இருக்கியா? வா... வா...’’
வந்தவருக்கு காமராஜர் தன்னை அடையாளம் கண்டுகொண்டதில் மகிழ்ச்சியில் உடல் நடுங்கியது; கண்களில் நீர்த்துளி திரண்டது. கைகூப்பி வணங்கினார். காமராஜர், அவர் தோளில் ஆதரவாகக் கைபோட்டு, அவருடன் பேசியபடியே விடுதிக்குள் அவரை அழைத்துக்கொண்டு போனார்.
வேலுவுக்கு காபி வரவழைத்துக் கொடுத்தார் காமராஜர். இருவரும் கடந்தகாலத்தை நினைவுகூர்ந்தார்கள். உற்சாகமும் பரவசமுமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். காமராஜருடன் நடந்த நெகிழ்ச்சிகரமான அந்தக் காலை நேர உரையாடலில், வேலு தான் எதற்காக வந்திருந்தாரோ அந்த விஷயத்தை மறந்தேபோனார்.
சுதந்திரப் போராட்ட காலத்தில் வேலு, காமராஜரோடு சிறைவாசம் அனுபவித்தவர். ஒரே கொட்டடியில் இருவரும் அடைக்கப்பட்டிருந்தார்கள். காமராஜரின் உளப்பூர்வமான அன்பிலும் உபசரிப்பிலும் திளைத்த வேலு கிளம்பவேண்டிய நேரம் வந்தது. ``அப்ப நான் போயிட்டு வர்றேனுங்க’’ என்று கைகூப்பி விடைபெற்றார். வாசல் கேட் வரை கூடவே வந்து வழியனுப்பினார் காமராஜர்.
வேலு, கேட்க வந்த விஷயத்தை மறந்துவிட்டார். ஆனால், காமராஜர் அவரை மறக்கவில்லை. வேலுவின் ஊரிலிருந்து வந்திருந்த காங்கிரஸ் நிர்வாகிகளிடம் அவரின் நிலை குறித்துக் கேட்டார். விசாரித்ததில், வேலுவின் குடும்பம் வறுமை நிலையில் இருந்தது தெரிந்தது. வேலு, தன்னைச் சந்திக்க வந்த காரணமும் அவருக்குப் புரிந்தது. முதல் வேலையாக உடனடி நிவாரணமாக ஒரு சிறிய தொகையை வேலுவின் குடும்பத்துக்குக் கொடுத்தனுப்பினார். அவருடைய முயற்சியால் வேலுவுக்கு ஒரு நல்ல வேலையும் கிடைத்தது. அதன் பிறகு அந்தக் குடும்பத்தின் துயரம் முழுவதுமாக நீங்கியது.
இந்தச் சம்பவத்தை இப்போது காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவுத் தலைவராக இருக்கும் கோபண்ணா, அவர் தொகுத்த `காமராஜ் ஒரு சகாப்தம்’ என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறார். `பசியோடு வருபவனுக்கு மீனைக் கொடுக்காதே; தூண்டிலைக் கொடு’ என்பது சீனப்பழமொழி. மிகச் சரியான கருத்து. ஆனால், பசியோடு இருப்பவனுக்கு முதல் தேவை உணவு; நிவாரணம். வயிறு நிறைந்தால்தானே அவனால் தூண்டிலைப் போட்டு மீனுக்காகக் காத்திருக்க முடியும்... இதை நன்கு உணர்ந்திருந்தார் காமராஜர். அதனால்தான் வேலுவின் குடும்பத்துக்கு முதலில் நிவாரணம் கொடுத்தார். பிறகு வேலுவுக்கு வேலை கிடைக்க ஏற்பாடு செய்து கொடுத்தார். உண்மைதான்... காமராஜர் ஒரு சகாப்தம்!
source https://www.vikatan.com/social-affairs/policies/motivation-from-the-life-of-kamarajar
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக